/

6 ஆண்டுகளாகியும் நிறைவேறாத செங்கோட்டை - புனலூர் அகல ரயில் பாதைத் திட்டம்

செங்கோட்டையிலிருந்து புனலூர் வரையிலான அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறாததால்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:35 pm

பா.​ பிரகாஷ்

செங்கோட்டையிலிருந்து புனலூர் வரையிலான அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறாததால், இரு மாநிலங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும், பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ரயில் பயணம் என்றாலே சுகமான பயணம்தான். ஆனால், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் வழித்தடத்தில் ரயிலில் பயணிப்பது என்பது புதுமையான அனுபவத்தை தரும் என்பது இந்த வழித்தடத்தில் பயணித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. இந்த வழித்தடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கையை ரசித்துக் கொண்டே பயணிப்பதுடன், மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைகள், பாலங்களில் பயணிப்பது புதிய அனுபவத்தைத் தரும்.

1904ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ஆம் தேதி 21 குண்டுகள் முழங்க, முதல் பயணிகள் ரயில்

கொல்லத்திலிருந்து செங்கோட்டையை வந்தடைந்தது. தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் ஆகிய பகுதிகளில்

விளையும் காய்கனிகள், பூக்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர், கொல்லம் பகுதிகளுக்குச் செல்லும் சரக்குகள் இந்த ரயில்வே வழித்தடத்தில்தான் கொண்டு செல்லப்பட்டன. இதனால், தமிழகத்துக்கும், கேரளத்துக்கும்

இடையேயான முக்கியமான வர்த்தக வழித்தடமாகவும், சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயணிப்பவர்களுக்கு முக்கியமான வழித்தடமாகவும் அமைந்தது.

மத்தியில் பாஜக ஆட்சியின் போது, கடந்த 1997ஆம் ஆண்டு கொல்லம்- திருமங்கலம் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றத் திட்டமிடப்பட்டது. இதில் செங்கோட்டை-திருமங்கலம், செங்கோட்டை- திருநெல்வேலி, திருநெல்வேலி- திருச்செந்தூர் அகல ரயில் பாதைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, இந்த வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தில் மிகவும் முக்கியமானதும், பல்வேறு சவால்கள் நிறைந்த வழித்தடமுமான 49 கி.மீ. தொலைவுள்ள செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளைத் தொடங்குவதற்காக, கடந்த 2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் 20-ஆம் தேதி செங்கோட்டை- புனலூர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த வழித்தடத்தில் 5 குகைகள், பெரியதும், சிறியதுமான 80 பாலங்கள் அமைந்துள்ளன. ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், குகைகள், பாலங்களை அகல ரயில் பாதைத் திட்டத்துக்கேற்ப விரிவுபடுத்துவதில் பெரிய சவால்கள் நிலவின. மேலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட காலதாமதமும் சேர்ந்து 6 ஆண்டுகள் முடிவடையும் நிலையிலும் இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் முடிவடைய மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதே உண்மையான நிலவரமாகும்.

தமிழக எல்லைப் பகுதியான கோட்டைவாசல் பகுதியிலிருந்து கேரள மாநிலம், ஆரியங்காவு பகுதி வரை 850 மீட்டர் தொலைவிலான குகை உள்ளிட்ட நான்கு குகைகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் செங்கோட்டையிலிருந்து பகவதிபுரம் வரையிலும், பகவதிபுரம் பகுதியிலிருந்து கேரள மாநிலத்தின் ஆரியங்காவு பகுதி வரையிலும், புனலூரிலிருந்து இடமண் பகுதி வரையிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இடமண் பகுதியிலிருந்து ஆரியங்காவு பகுதி வரையிலான பணிகள் மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. தற்போது கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டதால், இந்தப் பகுதியில் குகை, பாலங்கள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது கொல்லத்திலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, நாகூர் மற்றும் செங்கோட்டையிலிருந்து திண்டிவனம் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது கொல்லம், புனலூரைச் சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் சென்னைக்கு செல்ல வேண்டுமானால் கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதேபோல, மதுரைக்கு செல்ல வேண்டுமானால் திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி வழியாகத்தான் சென்றாக வேண்டும். இதனால் காலதாமதம், பண விரயம் ஏற்படுகிறது.

ஆனால், செங்கோட்டை- புனலூர் திட்டப் பணிகள் முடிவடைந்தால் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும். இதனால், இரு மாநில மக்களும், வர்த்தகர்களும், சுற்றுலாப் பயணிகளும் மிகவும் பயனடைவர்.

இதுகுறித்து தென்காசி ரயில்வே பயணிகள் சங்கத் தலைவர் என். வெங்கடேஷ்வரன் கூறியதாவது:

அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், மக்களவையில் அறிவிக்கப்பட்டு இயக்கப்படாமல் உள்ள செங்கோட்டை- ஈரோடு, கோவை ரயில்கள் இயக்கப்பட வேண்டும். குற்றாலத்தில் சீசன் காலங்களிலும், சபரிமலை ஐயப்ப சீசன் காலங்களிலும் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். மேலும், பகல் நேரத்தில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் கூறியதாவது:

செங்கோட்டை- புனலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு உடனடியாக ரயில் சேவை தொடங்கும். அகல ரயில் பாதைப் பணிகள் முடிவடைந்த பிறகு, செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் கொல்லம் வரை இயக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும், மானாமதுரையிலிருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படுகிற சிலம்பு விரைவு ரயிலும் கொல்லம் வரை இயக்கப்படலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.