மலைவாழ் மக்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டு வேளாண் திட்டம் தேவை!
தருமபுரி: செம்மரக் கடத்தலுக்குச் சென்றார்கள் என்ற பெயரில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அத்தனைச் சுலபமாக யாராலும் மறந்துவிட முடியாது.


தருமபுரி: செம்மரக் கடத்தலுக்குச் சென்றார்கள் என்ற பெயரில் 20 தமிழர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அத்தனைச் சுலபமாக யாராலும் மறந்துவிட முடியாது.
ஆந்திரத்தின் அரசியல் பின்னணிகள் பலவும் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், செம்மரம் வெட்ட இங்கிருந்து செல்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
தருமபுரி மாவட்டத்தின் சித்தேரி மலைதான் கணிசமாக இளைஞர்களை அங்கே அனுப்பித் தருகிறது. சித்தேரி மலையில் 63 குக்கிராமங்கள் உள்ளன. சுமார் 1,600 குடும்பங்களில் 7 ஆயிரம் மலையாளிகள் (தமிழ் பேசும் மலையாளிகள்- பழங்குடியினப் பட்டியலில் வருகின்றனர்) வசிக்கின்றனர்.
சாமை, திணை போன்ற சிறுதானியப் பயிர்கள்தான் இவர்களின் பூர்வீக வேளாண்மை. இந்தப் பட்டியலில் இப்போது மரவள்ளிக் கிழங்கு சேர்ந்திருக்கிறது. அரூரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள சித்தேரி மலைக்குச் செல்ல 10 கி.மீ. மலைப் பாதையைக் கடக்க வேண்டும்.
அங்கிருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவில் குக்கிராமங்கள் உள்ளன. தற்போதைய பொருளாதாரத் தேவைகளை விவசாயம் நிறைவு செய்யாமல் போனதால், இங்குள்ள இளைஞர்கள் ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்டவும், கோவை, திருப்பூர், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு பிற வேலைகளுக்கும் செல்லவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில்தான் கடந்த 2015, ஏப்ரலில் 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 20 பேரில் 7 பேர் சித்தேரி மலையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்ட போது, ஒட்டுமொத்த மலையும் அழுகுரலில் சிக்கியது.
"ஜவ்வாது மலையிலிருந்து வந்தவர்கள், பெயிண்ட் வேலைக்கு ஆள் தேவை என்றல்லவா அழைத்துச் சென்றார்கள்' என அவர்களது குடும்பத்தினர் கதறினர்.
ஆந்திரத்தில் தற்போது வனச் சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. இப்போதும் 7 தமிழர்கள் அங்கே சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சித்தேரியிலும் தொடர்கிறது, இளைஞர்கள் செம்மரம் வெட்டச் செல்வது!
"வந்தால் பணம், போனால் பிணம்' என சித்தேரி இளைஞர்கள் வெளிப்படையாகப் பேசுவதைக் காண முடிவதாகச் சொல்கிறார்கள் மலைவாழ் மக்களுக்காகப் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள்.
மாதத்தின் ஓரிரு வாரங்கள் பணியாற்றினால் போதும், குறையாமல் ரூ. 40 ஆயிரம் வரை கொண்டு வரலாம்.
சித்தேரி மலையில் இரண்டு, மூன்று ஏக்கருக்கு மேல் சொந்த நிலம் கொண்டவர்கள் இல்லை. ஏற்கெனவே பலா, மா, மூங்கில் போன்றவையும் வளர்க்கப்படுகின்றன.
தோட்டக்கலைத் துறையினரின் தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு போன்ற முயற்சிகளும் பெரிய பலனைத் தரவில்லை. அதேபோல, செம்மரம் வெட்டச் செல்வதும் குறையவில்லை!
கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 பேர் ஆந்திரத்துக்குச் சென்றவர்கள் ஊர் திரும்பவில்லை என்கிறார் செயல்பாட்டாளர் வேடியப்பன். ஓரிருவர் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
சித்தேரி மலையிலுள்ள இளைஞர்கள் புதிய திட்டங்களை, புரிய வைத்தால் மாற்றத்தைக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது என்றும் வேடியப்பன் கூறுகிறார்.
இந்தப் பின்னணியில்தான் சித்தேரி மலையிலேயே அவர்களுக்கான பாரம்பரிய விவசாயத் தொழிலையே மேம்படுத்தி, ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை அங்கே புதிதாக வடிவமைத்துத் தர வேண்டும் என்ற குரல் எழுந்திருக்கிறது.
விவசாயத்தில் புதிய திட்டமா? என்ன பெரிய வருமானம் வரும்? என்ற மறுப்புக் குரலும் வராமல் இல்லை. ஆனால், இதில் சாத்தியப்படுத்துவதற்கான நுணுக்கங்கள் இருப்பதாகக் கூறுகிறார் பசுமைத் தொழிலதிபர்- செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ்.
20 முதல் 50 பழங்குடியினர் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினால் ஏற்கெனவே உள்ள தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 50 லட்சம் வரை கடனுதவி பெற வாய்ப்பிருக்கிறது என்கிறார் அவர்.
15 நாள்கள் முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரையில் பலன் தரக் கூடிய ஏராளமான பயிர்கள் உள்ளன. அத்துடன் ஆடு, மாடு, கோழி, குட்டைகளில் மீன் வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணைய முறையைக் கடைப்பிடித்தால் அடுத்த தலைமுறையையும் இந்தத் தொழில் காப்பாற்றும் என்கிறார் பியூஷ்.
மலைவாழ் மக்கள், குறிப்பாக இளைஞர்களை குழுக்களாக அமைத்து தொடக்க நிலைப் பயிற்சியை அளிப்பதிலிருந்து, தேவைப்படும் இடங்களில் வனத் துறையிடமிருந்து நிலங்களை வாங்கித் தந்து, கடனுதவிகளை விரிவுபடுத்தி, விளை பொருள்களைச் சந்தைப்படுத்துவது வரையிலான சிறப்புத் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
கைமேல் பலன் என்பது உடனடியாகச் சாத்தியமாக இல்லாவிட்டாலும்கூட, 5 ஆண்டுகளுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்ட நல்ல வருமானம் கிடைக்கும். இத்தோடு மட்டுமல்ல, மலை வளமும் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்பதுதான் இதன் கூடுதலான அம்சம். தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவிஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த மலைவாழ் மக்களின் எதிர்பார்ப்பு.
-சா. ஜெயப்பிரகாஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...