/

பணி அனுபவம் இருந்தும் பதவி உயர்வுக்கு காத்திருப்பு:பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் வேதனை

தமிழகத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டில் முதல் நிலை பெண் காவலராக (கிரேடு 1) பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர்களாக தற்போது உள்ள 160 பேருக்கு பல ஆண்டுகளாகியும் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

ஆர். தர்மலிங்கம்

தமிழகத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டில் முதல் நிலை பெண் காவலராக (கிரேடு 1) பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளர்களாக தற்போது உள்ள 160 பேருக்கு பல ஆண்டுகளாகியும் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 700 பேர் முதல் நிலை பெண் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் சட்டம்- ஒழுங்கு பிரிவில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

15 ஆண்டுகள் கழித்து 1996-ஆம் ஆண்டில் தலைமைக் காவலர்களாக அவர்கள் பதவி உயர்வு பெற்றனர். பின்னர் 2-ஆவது கட்டமாக 2004-ஆம் ஆண்டு பல்வேறு மாவட்டங்களில் உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.

இவர்களுக்கு 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மணிமுத்தாறில் உதவி ஆய்வாளருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.

2004-ஆம் நேரடி பெண் உதவி ஆய்வாளர்களாக தமிழகம் முழுவதிலும் சுமார் 1,000 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, காவல் துறையில் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் உதவி ஆய்வாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் என்று காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 1981-இல் கிரேடு 1-இல் தேர்வு செய்யப்பட்டு 2004-ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர்களாகப் பணி நியமன ஆணை, மேற்கண்ட 160 பேருக்கு வழங்கப்பட்டது. ஆனால், ஆணை வழங்கியதைக் கணக்கீட்டில் கொள்ளாமல் 2005-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கீடு செய்யப்பட்டதால், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்கவில்லை.

மேலும், காவல் நிலையங்களில் ஆண்களுக்கு நிகராக சட்டம்- ஒழுங்கு பணியில் திறமையாகச் செயல்பட்டும், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்று பெண் உதவி ஆய்வாளர்கள் வருந்துகின்றனர்.

இதுகுறித்து 1981-இல் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பெண் உதவி ஆய்வாளராக உள்ள ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 1981-ஆம் ஆண்டு முதல் நிலை பெண் காவலர்களாக சுமார் 700 பேர் பணியில் சேர்க்கப்பட்டோம். ஆனால், எங்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படும் பதவி உயர்வு பல்வேறு காலகட்டங்களிலும் தாமதமாகவே வழங்கப்பட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.

இதுகுறித்து தமிழக காவல் துறைத் தலைவருக்கும், முதல்வரின் தனிப் பிரிவுக்கும் தொடர்ந்து மனு அனுப்பியும் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. ஆனால், 1991-ஆம் ஆண்டு முதல் நிலை பெண் காவலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 1987-இல் இரண்டாம் நிலையில் (கிரேடு 2) ஆக தேர்வு செய்யப்பட்ட ஆண் காவலர்கள் தற்போது உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

அதற்கு முன்னரே, 1981-இல் பணியில் சேர்ந்த நாங்கள் 15 ஆண்டுகள் கழித்துத்தான் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றோம். மேலும், 2004-ஆம் ஆண்டில் உதவி ஆய்வாளராகப் பணி வழங்கியும், அதற்கு 10 ஆண்டுகள் கழித்து ஆய்வாளராகப் பதவி உயர்வுக்கு தற்போது போராடி வருகிறோம்.

காவல் துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தும் மூன்றாவது பதவி உயர்வுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

மேலும், எங்களுடன் பணியில் சேர்ந்த சுமார் 540 பேர் உதவி ஆய்வாளர் பதவியிலேயே ஓய்வு பெற்று விட்டனர். எனவே, மீதம் உள்ள 160 பேருக்காவது ஓய்வுக்கு முன்னதாக ஆய்வாளர் பதவி உயர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.