பலமுனைப் போட்டியை எதிர்கொள்ளும் புதுச்சேரி!
இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் புதுச்சேரி மாநிலம் பலமுனைப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது.


இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் புதுச்சேரி மாநிலம் பலமுனைப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் மே 16-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 4 பிராந்தியங்களான புதுவையில் 23, காரைக்காலில் 5, ஏனாம், மாஹேயில் தலா 1 என மொத்தம் 30 பேரவைத் தொகுதிகள் உள்ளன.
தமிழகத்தில் அரசியல் சூழலில் ஏற்படும் நிலைப்பாடுதான் புதுவையில் எதிரொலிக்கும். 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ரங்கசாமி என்.ஆர். காங்கிரûஸ தொடங்கி, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களில் வென்றார். பின்னர், அதிமுகவை தவிர்த்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இதனால், அந்த இரு கட்சியிடையேயும் உறவு முறிந்தது.
மாறி வரும் அரசியல் சூழ்நிலை: 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மோடி அலை வீசியதால், ஆளும் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டது. அதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வென்றார். பின்னர், பாஜகவுக்கு ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என எதிர்நோக்கி இருந்தனர். ஆனால், ரங்கசாமியின் நிலைப்பாடு காரணமாக, மாநிலங்களவைத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக அதிமுக வென்றது.
இதையடுத்து, நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுக- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
உறுதியான கூட்டணிகள்: இந்த நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. புதுவையிலும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸாக்கு 21 தொகுதிகளும், திமுகவுக்கு 9 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிமுக தனித்துப் போட்டி: அதேபோல, அதிமுக சார்பில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்ததையடுத்து, தேர்தல் பிரசார பணிகளையும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தொடங்கிவிட்டனர். என்.ஆர். காங்கிரஸாடன் கூட்டணி ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிமுக தனித்தே களமிறங்கியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணி: மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக அணியும் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ஆர்எஸ்பி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதற்கு அந்தக் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்தக் கட்சித் தலைமையிடம் இந்த பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: பாஜக தரப்பிலும் முதல் கட்டமாக 16 வேட்பாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை அந்தக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து, ரூ.6000 கோடி கடன் தள்ளுபடி என ரங்கசாமி முன்வைத்த பல கோரிக்கைகள் இதுவரை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் ரங்கசாமி மெளனம் காத்து வருகிறார்.
புதுவைக்கு அண்மையில் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் கூட்டணி தொடர்பாக உரிய பதில் கூறவில்லை. தற்போதைய நிலையில் புதுச்சேரி பலமுனைப் போட்டி என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால், புதுவை அரசியலைப் பொருத்தவரை, திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்பது முந்தைய தேர்தல் வரலாறாகும். எனினும், வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பாக அதிமுக- என்.ஆர். காங்கிரஸ் அல்லது என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-பா. சுஜித்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...