எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பணபலமின்றி திருமங்கலம் இடைத்தேர்தல்!

தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே அது திருமங்கலம் "பார்முலா' என்று பேசப்படுகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் திமுக ஆட்சியில்

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:02 pm

ஜெயப்பாண்டி

 தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே அது திருமங்கலம் "பார்முலா' என்று பேசப்படுகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் திமுக ஆட்சியில்

(2009 ஆம் ஆண்டு) நடைபெற்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருள்களே அந்தத் தொகுதிக்கு இந்த "பார்முலா' பெயரைப் பெற்றுத் தந்தது.

தமிழகத்தில் காங்கிரஸாக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து முதன்முதலாக திமுக

1967-இல் ஆட்சியமைத்தது. அதன்பிறகு, திருமங்கலத்தில்தான் முதல் இடைத் தேர்தலும் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காங்கிரûஸ வெற்றி பெற வைத்தனர் திருமங்கலம் தொகுதி மக்கள்.

அந்த இடைத் தேர்தலில் இளைஞராகக் களமிறங்கி திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தவர் காங்கிரஸ் வேட்பாளரான என்.எஸ்.வி. சித்தன். அதன்பிறகு, சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் என பல தேர்தல்களில் வெற்றி, தோல்வியை மாறி மாறி சுவைத்தவர். தற்போது தமாகாவில் ஜி.கே.வாசனின் நம்பிக்கைக்குரியவர்களில் அவரும் ஒருவர்.

திருமங்கலத்தில் வசித்து வரும் சித்தன் 82 வயதிலும், 28 வயதுக்குரிய துடிப்போடு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் நடந்தவாறே தனது அரசியல் சுழலின் நினைவலைகளை நம்மிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:

திருமங்கலத்தில் அப்பா என்.எஸ்.வீரபத்திரத் தேவர் சுதந்திரப் போராட்டத் தியாகி. எனது மாமனார் வி.சோமசுந்தரத் தேவரும் தியாகிதான். இருவரும் சுதந்திரப் போராட்டக் காலத்தில் காமராஜர் போன்ற தலைவர்களுடன் சிறையில் இருந்தவர்கள். அதனடிப்படையிலே சுதந்திரத்துக்குப் பின்னர் அரசியலில் காமராஜர் வழியில் செயல்பட்டனர்.

1967 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது திருமங்கலத்தில் சுதந்திராக் கட்சி வேட்பாளரான முத்துராமத் தேவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்ததால், அங்கு மட்டும் ஒரு மாதத்துக்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

அந்தப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்து, திமுக வெற்றி பெற்றது. அண்ணா முதல்வரானார். அதன்பிறகு திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற போது, ஏற்கெனவே பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரத்தினசாமித் தேவர் மீண்டும் வேட்பாளராக மறுத்தார். இதனால், எனது தந்தை என்னை காமராஜரிடம் அழைத்துச் சென்று, நான் மறுத்த நிலையிலும் வேட்பாளராக்கிவிட்டார்.

திமுக கூட்டணியில் சுதந்திராக் கட்சி வேட்பாளர் வழக்குரைஞர் பி.ராஜன் நிறுத்தப்பட்டார். சுதந்திராக் கட்சி சார்பில், மறைந்த முத்துராமத் தேவர் மனைவி கமலம் சுயேச்சையாக நின்றார்.

தினமும் எங்கள் வீட்டிலிருந்து கட்சி அளித்த ஜீப்பில்தான் ஊர் ஊராகப் போய் வீடு வீடாக ஏறி இறங்கி வாக்கு கேட்போம்.

என்னுடன் வரும் கட்சிக்காரர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்தே சாப்பாடு கொண்டு செல்வோம். ஏதாவது தோட்டத்திலோ, கண்மாய் மர நிழலிலோ அமர்ந்து சாப்பிட்டு பிரசாரத்தை தொடர்வோம்.

போகுமிடங்களில் எல்லாம், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் எங்களுக்கு கடுங்காபி, டீ தருவர். சிலர் தங்கள் வீட்டில் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவர். ஆனால், எங்களிடமிருந்து கட்சிக்காரர்களோ, மற்றவர்களோ நயா பைசாகூடக் கேட்டதுமில்லை, வாங்கியதுமில்லை.

பிரசாரத்துக்கு காமராஜர், கே.விநாயகம், அனந்தநாயகி என மூத்த தலைவர்கள் திருமங்கலம் வந்து சென்றனர். அவர்களுக்கு கட்சியே செலவிட்டது. கட்சியினரும், பொதுமக்களும் தாங்களாகவே பொதுக்கூட்டத்துக்கு வந்து சென்றனர். யாருக்கும் எந்தப் பணமும் கொடுக்கவில்லை. தேர்தலில் நின்ற திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பெரிய தலைவர்கள் யாரும் வரவில்லை.

திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதந்திராக் கட்சி வேட்பாளரைவிட சுமார் மூவாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று, நான் (காங்கிரஸ்) வெற்றி பெற்றேன். அந்தத் தேர்தலுக்கு சுமார் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் செலவிட்டேன். அதுவும் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று கட்சியினர் செலவுக்காக ஒவ்வோர் ஊருக்கும் ரூ.300 தந்தோம். பல ஊர்களில் கட்சிக்காரர்கள் காசு வாங்கவேயில்லை. செலவுக்கு என காசு வாங்குவதைக்கூட கெளரவக் குறைச்சலாக நினைத்தனர்.

பின்னர், 1973-இல் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத் தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்னை வேட்பாளராக காமராஜர் நிறுத்தினார். எனக்காக காமராஜர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளருக்காக ஜெகஜீவன்ராம் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். அதிமுக சார்பில் மாயத் தேவரும், திமுக சார்பில் பொன். முத்துராமலிங்கமும் போட்டியிட்டனர்.

தேர்தலில் திமுக சகல வித்தையையும் காட்டி பிரசாரம் செய்தாலும், அதிமுக வேட்பாளர் மாயத் தேவர் வெற்றி பெற்றார். திமுகவிலிருந்து வெளியேறி, முதன் முதலாகத் தேர்தலைச் சந்தித்த அதிமுகவுக்கும், அதன் நிறுவனர் எம்.ஜி.ஆருக்கும் திருப்புமுனை தந்த தேர்தலாக அது அமைந்தது.

அதேநேரத்தில், ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரான நான் இரண்டாமிடம் பெற்றேன். ஆளும் கட்சியாக இருந்த திமுக மூன்றாமிடத்தையே பெற்றது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் வேட்பாளர் 12 ஆயிரம் வாக்குகளையே பெற்றார்.

அதன்பின்னர், நான் 1971-இல் ஸ்தாபன காங்கிரஸ் மற்றும் 1977-இல் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். பின்னர், 1980, 1984-இல் அங்கேயே வெற்றியும் பெற்றுள்ளேன். 1989-இல் மீண்டும் தோல்வி ஏற்பட்டது. பின்னர் 1996-இல் தமாகா சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2004, 2009 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, திண்டுக்கல் எம்.பி. என அரசியல் பயணத்தை தொடர்ந்தேன்.

எனது அரசியல் அனுபவத்தில், கடந்த 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது பிரசாரத்துக்கு தலைவர்கள் வந்தாலும், கட்சியே செலவழிக்கும். தொண்டனுக்கு அதிகபட்சம் டீ காசு மட்டுமே வழங்கப்படும். செலவுக்குப் பணம் என்ற நடைமுறையே இல்லை. ஆனால், 1989 ஆம் ஆண்டுக்குப் பிறகே அரசியல் கட்சிகள் பணத்தை மையமாக வைத்து தேர்தலை அணுகத் தொடங்கின. கூட்டத்துக்கு மட்டுமல்ல, வாக்களிக்கவும் பணம் தந்து பழக்கப்படுத்திவிட்டனர் என்றார் அவர்.

-வ. ஜெயபாண்டி

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று கட்சியினர் செலவுக்காக ஒவ்வோர் ஊருக்கும் ரூ.300 தந்தோம். பல ஊர்களில் கட்சிக்காரர்கள்

காசு வாங்கவேயில்லை. செலவுக்கு என காசு வாங்குவதைக்கூட கெளரவக் குறைச்சலாக நினைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.