விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயார் செய்ய பயன்படும் 1720 கருந்திரி கட்டுக்களை கடத்தியது தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகரை அடுத்த முதலிபட்டி-சங்கரலிங்காபுரம் சாலையில் வச்சக்காரப்பட்டி காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீஸார் புதன்கிழமை காலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிவகாசியில் இருந்து வேகமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் சாக்கு பைகைகளில் கட்டுக்கட்டாக கருந்திரிகள் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
மேலும், அதில் வந்தவர்கள் குறித்து விசாரணை செய்ததில் சங்கரலிங்காபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம்(64) என்பதும், இவர் தாதம்பட்டி அருகே நடத்தி வரும் பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இது குறித்து ஆலை உரிமையாளர் சண்முகம் மற்றும் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் மகேஷ்வரன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அதோடு, கருந்திரி கட்டுக்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.