நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்...

இந்த முறைகேட்டில், அனைவரையும் திடுக்கிட வைக்கும் முக்கியமான ஆதாரம், இந்த 300 சட்ட விரோத இணைப்புகளை மறைக்குமாறு

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:44 am

எஸ். குருமூர்த்தி

இந்த முறைகேட்டில், அனைவரையும் திடுக்கிட வைக்கும் முக்கியமான ஆதாரம், இந்த 300 சட்ட விரோத இணைப்புகளை மறைக்குமாறு பிஎஸ்என்எல் கோப்பில் குறிக்கப்பட்டிருப்பது தான். மாறனின் விருப்ப எண்களை (2437 1515 / 2437 1616) அவருக்கு ஒதுக்கீடு செய்வதற்கான கோப்பில், பி.எஸ்.என்.எல். குறைதீர் பிரிவின் உதவிப் பொது மேலாளர் எழுதியுள்ள குறிப்பில், 2437 1500 என்ற எண்ணில் தொடங்கும் ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ. இணைப்புகள் மறைக்கப்பட வேண்டும்; அவற்றில் 2437 1515, 2437 1616 ஆகிய இரு எண்கள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு எஸ்.டி.டி. வசதியுடன் கூடிய சாதாரண இணைப்புகளாக மாற்றப்பட்டு, எம்.பி. ஒதுக்கீட்டில் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக எழுதி இருக்கிறார்.


 அதன்படியே, அந்த 300 எண்கள் தொடர்பான பதிவுகளும் அழிக்கப்பட்டு, அவை இல்லாதவையாகச் செய்யப்பட்டன. தவிர, மாறன் விரும்பிய எண்களில் ஒரு எண் மட்டும் (2437 1515) அவருக்கு வழங்கப்பட்டது.


 பி.எஸ்.என்.எல். கோப்பின் மற்றொரு குறிப்பு, மாறனின் இல்லத்தில் மேலும் இரு இணைப்புகள் நிறுவப்பட்டதை வெளிப்படுகிறது. ஐ.எஸ்.டி., சி.எல்.ஐ.ஆர். வசதிகளுடன் கூடிய ஐ.எஸ்.டி.என். பி.ஆர்.ஏ. (அடிப்படைக் கட்டண விகிதம்) இணைப்புகள் ஏழும் சாதாரணத் தொலைபேசி இணைப்புகள் இரண்டும் சி.ஜி.எம். பெயரில் மாறனின் இல்லத்தில் இயங்குகின்றன என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. கோப்பின் ஏ, பி இணைப்புகளில் மாறனின் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட 323 எண்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அடிப்படைக் கட்டண விகித இணைப்புகள் (BRA) முதன்மைக் கட்டண விகித இணைப்புகளை (PRA) விட வேகம் குறைந்தவை. ஆயினும், அதுபோலவே செயல்படக் கூடியவை. குறைதீர் பிரிவின் துணைப் பொது மேலாளர் (டி.ஜி.எம். - பி.ஜி.) கூறியபடி இந்த எண்களின் ஒதுக்கீடு தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு, பி.எஸ்.என்.எல். கோப்பில் கூறப்பட்டுள்ளது.


 இதில் மிகவும் மோசடியான இணைப்புகள் பற்றிய தகவலும் தெரிய வந்திருக்கிறது. இது மேலும் 10 கவர்ச்சிகரமான (ஃபேன்சி) இணைப்புகள் (2811 9696, 2811 9797, 2812 2222, 2812 2400, 2812 2424. 2812 2444, 2812 2525, 2812 2555, 2812 2727, 2812 2828) கோபாலபுரம் அலுவலகத்தில் நிறுவப்பட்டதைக் கூறுகிறது. கோபாலபுரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகமே இல்லை. அது மாறன் சகோதரர்கள் முன்பு குடியிருந்த இல்லம். பிறகுதான், மாறன் சகோதரர்கள் அங்கிருந்து தங்கள் இருப்பிடத்தை ராஜா அண்ணாமலைபுரம், போட்கிளப் ஹவுஸ் இல்லத்துக்கு மாற்றிக் கொண்டார்கள். அந்த இணைப்புகள் ஜூன் 2007-க்குப் பிறகு இயங்கவில்லை.


 துணைப் பொது மேலாளரின் ஒப்புதல்: 2007, ஜூன் 23 தேதியிட்ட கோப்பில், பி.எஸ்.என்.எல்.லின் துணைப் பொது மேலாளர் (இயக்கம்) குறிப்பிட்டுள்ள விவரம் முக்கியமானது. குறிப்பிட்ட எண்கள் (மாறனின் இல்லத்தில் நிறுவப்பட்டவை) நேரடித் தொலைபேசியக இணைப்புகள் (டி.இ.எல்.) அல்ல. ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ. இணைப்புகள் முடக்கப்படாத வரை (மாறன் கோரிய) இந்த இணைப்பை நேரடி எண்ணாகத் தர முடியாது என்று தெளிவாகவே அவர் பதிவு செய்திருக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 300 ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ. இணைப்புகளும் மறைக்கப்படும். அதேசமயம், போட்கிளப் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட இதர இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.


 தவிர, மாறன் கோரிய இரு இணைப்புகளில் ஒன்றை மட்டும் எம்.பி. ஒதுக்கீட்டில் அவருக்கு அளிக்கலாம் என்றும் அவர் பரிந்துரை செய்திருக்கிறார். அந்த எண்: 2437 1515. இதுவும் சேவை இணைப்பையே தான் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் கூறிய பொய்யை அம்பலப்படுத்துகிறது.
 2007, ஜூன் 29 தேதியிட்ட, பி.எஸ்.என்.எல். துணைப் பொது மேலாளர் (இயக்கம்) கையெழுத்திட்ட கோப்பு, வேறு பயன்பாட்டில் இருந்த தனிப்பட்ட இணைப்பே மாறனுக்கு சேவை இணைப்பாக மாற்றப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. அதுவரை அவர் பயன்படுத்தி வந்த 299 ஐ.எஸ்.டி.என். பீ.ஆர்.ஏ. இணைப்புகளும் திட்டமிட்டு மறைக்கப்பட்டன.


 பி.எஸ்.என்.எல்.லின் இந்தக் கோப்புகளை ஆதாரமாகக் காட்டினாலே, சி.பி.ஐ.க்கு விசாரணையில் தெளிவு கிடைக்கும். இதற்கு மாறனால் பதில் சொல்லவே முடியாது. ஒருவேளை, சி.பி.ஐ.க்கு அவை கிடைக்காமல் போனாலோ அல்லது அந்தக் கோப்புகளைத் தேடிக் கண்டுபிடிக்க நேரமில்லாமல் போனாலோ என்ன செய்வது? சி.பி.ஐ.க்கு உதவியாக அந்த பி.எஸ்.என்.எல். கோப்புப் பக்கங்கள் இங்கு கொடுக்கப்படுகின்றன.


 தனது சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பக மோசடி வெளியானவுடன் ஊடகங்களைச் சந்தித்த தயாநிதி மாறன், என்னிடம் 2437 1500 என்ற ஒரேயொரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டுமே உள்ளது. "தினமணி' குறிப்பிட்டுள்ள 323 இணைப்புகள் என்பது பொய்யானது. அவர்கள் இதுகுறித்து பி.எஸ்.என்.எல்.லிடம் ஏன் தீர விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று நாம் இப்போது பி.எஸ்.என்.எல். கோப்பு ஆதாரத்தை சமர்ப்பித்திருக்கிறோம். தவிர, அவர் பெயருக்கு மாற்றப்பட்ட இணைப்பின் எண் (2437 1515), மாறன் தன்னிடம் உள்ளதாகக் கூறிய இணைப்பின் எண் (2437 1500) அல்ல என்பதும் உறுதியாகி உள்ளது. தயாநிதி மாறன் பதில் சொல்லட்டும்!


 (முற்றும்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.