/

விருதுநகர் மாவட்டத்தில் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறை வளாகங்கள் அமைக்க நடவடிக்கை: திட்ட அலுவலர்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தூய்மை திட்டம் சார்பில் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறை வளாகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:13 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தூய்மை திட்டம் சார்பில் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறை வளாகங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திட்ட அலுவலர் பிரபாகர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் மேலும்  கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஊராட்சிகளை முழு சுகாதாரமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் சாலையோரங்களில் இயற்கை உபாதை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காக தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தூய்மை திட்டம் ஆகியவைகள் மூலம் கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மாவட்டம் முழுவதும் 45 ஆயிரம் தனிநபர் கழிப்பறை வளாகங்கள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ராஜபாளையம்-4317, ஸ்ரீவில்லிபுத்தூர்-4774, வத்திராயிருப்பு-4987, வெம்பகோட்டை-4981, விருதுநகர்-5868, சிவகாசி-9937, சாத்தூர்-5007, அருப்புக்கோட்டை-2763, காரியாபட்டி-1640, திருச்சுழி-3513, நரிக்குடி-2177 தனிநபர் கழிப்பறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதை செயல்படுத்தும் வகையில் மகளிர் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியவை மூலம் கிராமங்களில் ஒவ்வொரு குடியிருப்பையும் அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கின்றனர். இப்பணியை மேற்கொள்வதற்காக  ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 4 நாள்கள் வரையில் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.