மாபெரும் எழுச்சியா? மற்றும் ஒரு கட்சியா?
மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, அது காமராசர் ஆட்சி என்ற முழக்கத்துடன் திருச்சியில் வெள்ளிக்கிழமை தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார் ஜி.கே. வாசன்.


மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, அது காமராசர் ஆட்சி என்ற முழக்கத்துடன் திருச்சியில் வெள்ளிக்கிழமை தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார் ஜி.கே. வாசன்.
திருச்சி திருப்புமுனையைத் தரும் என்பது அரசியல் கட்சிகளின் பொதுவான நம்பிக்கை. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திற்குச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்துதான் புறப்பட்டனர். அதற்குப் பிறகுதான் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்தது.
தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பதை திமுக திருச்சியில் மாநாடு போட்டுத்தான் முடிவு செய்து அறிவித்து, ஆட்சியைப் பிடித்தது.
அதைத் தொடர்ந்து வந்தவர்கள் "திருப்புமுனை' என்ற சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றனர்.
மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கோ - செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கோ சுரங்கப் பாதைகள் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் மோடியின் திருச்சிப் பொதுக்கூட்டத்தில்கூட "மலைக்கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு' என்ற முழக்கத்தை வைத்திருந்தார்கள்.
அடிப்படையில் மாநாடுகள், சந்திப்புகள் என்பது அந்தக் கட்சியின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகத்தான். இதன்படி மாநிலத்தின் எந்த மூலையில் இருந்தும் விரைவாக திருச்சியை வந்தடைய முடியும்- திரும்பிச் செல்ல முடியும் என்கிற மையம் மட்டுமே இங்கே மாநாடுகள் நடத்துவதற்கான காரணம்.
வாசனும் இதே நோக்கத்தில்தான் திருச்சியைத் தேர்வு செய்திருக்கக் கூடும். புதிய கட்சியின் தேவை என்ன? கொள்கை என்ன? என்பதும்கூட கடந்த 15 நாள்களில் பெருமளவு விவாதிக்கப்பட்டிருக்கிறது.
1996-ல் த.மா.கா.வை மூப்பனார் உருவாக்கியபோது இருந்த அரசியல் சூழ்நிலைகள் ஏதும் இப்போது இல்லையே? என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவனும் அவருடன் இருப்பவர்களும் எழுப்பி வருகின்றனர்.
"தொடர்ந்து தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வந்தபோது மத்திய அரசிடமும், அரசியல் அதிகார மையங்களிடமும் வாசன் சுட்டிக்காட்டி வந்திருந்தார். இப்போது காமராசர், மூப்பனார் படங்களை உறுப்பினர் அட்டையில் போடக் கூடாது என்று நிறுத்தியபோதுதான் தனியே பிரிந்து செல்வதற்கான நேரம் கணிந்தது' என வாசனுக்கு அடுத்த நிலையில் தலைவர்கள் விளக்கி வருகின்றனர்.
போகுமிடமெல்லாமும் பத்திரிகையாளர்கள் மடக்கி மடக்கிக் கேட்டும் சிரிப்பைத் தவிர வாசன் எதையும் சொல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
வெறுமனே கூட்டம், பேச்சுடன் நின்றுவிடாமல் "கொள்கைப் பிரகடனம்' ஒன்றையும் வாசனின் புதிய கட்சி வெளியிட இருக்கிறது. ஏற்கெனவே வாசன் கூறிவரும்- "காமராசரின் ஆட்சி', மூப்பனாரின் வழியில் "வளமான தமிழகம், வலிமையான பாரதம்', "எளிமை, நேர்மை, தூய்மை' ஆகிய சொற்கள் கொள்கைக் குறிப்பில் பிரதான இடம் பிடிக்கலாம்.
கோவிந்தவாசன் என்ற தனது முழுப் பெயரை வாசன் எனச் சுருக்கிக் கொண்டு ஏறத்தாழ 12 ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தில் தவழ்ந்து வந்திருப்பவர்தான் அவர்.
இந்த நேரத்தில் வாசன் முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால், பெரும் கூட்டத்தைத் திரட்டுவதுதான். காங்கிரஸ் என்ற பெரிய மரத்தில் இருந்து உதிர்ந்த இலைதான் என்று இளங்கோவன் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்.
நாங்கள் உதிர்ந்த இலைகள் அல்ல, உடைத்து வெளியே வந்த பெருங்கிளை என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வாசனுக்கு இருக்கிறது. அதை தொடக்க விழாக் கூட்டம்தான் முடிவு செய்யும்.
இதைத் தவிர தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெற்றிடம்- அதை இட்டு நிரப்பப் போகிறோம் என்பதை எல்லாம் காலம்தான் சொல்லும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...