நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தனி மனிதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது

தனி ஒரு மனிதனால் நாட்டில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்று மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:03 am

டி.கே. ரங்கராஜன்

தனி ஒரு மனிதனால் நாட்டில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்று மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் 2014 பொதுத்தேர்தல் என்ற தலைப்பில் அவர் பேசியது:

சோ ராமசாமி மார்க்சிய கருத்துக்களை ஏற்காதவர். ஆனால், கம்யூனிஸ்ட்டுகளை மதிப்பவர். பல நேரங்களில் அவர் எங்களுக்கு உதவி செய்துள்ளார்.

காங்கிரஸ் அரசை வீழ்த்த வேண்டும் என்று இல. கணேசன் பேசினார். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், காங்கிரஸýக்கு மாற்றாக பாஜக இருக்க முடியாது.

1991-ல் நரசிம்மராவ் அறிமுகப்படுத்திய பொருளாதார தாராயமயமாக்கல் கொள்கையைத்தான் வாஜ்பாய் அரசும் பின்பற்றியது. பொருளாளாதரக் கொள்கை தொடர்பான விஷயங்களில் காங்கிரஸ், பாஜகவினர் இருவரும் நாடாளுமன்றத்தில் ஒரே குரலில் பேசுகிறார்கள்.

2014 பொதுத்தேர்தலில் நரேந்திர மோடியை பாஜக முன்னிறுத்தியுள்ளது. காங்கிரஸýக்கு மாற்றாக அவர் முன் வைக்கும் கொள்கைகள் என்ன? பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதை அவர் கூறவில்லை. தனி மனிதனால் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது.

லோக்பால் மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது, லஞ்சம் கொடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தண்டனை வழங்கும் வகையில் மார்க்சிஸ்ட் திருத்தம் கொண்டு வந்தது. அதனை காங்கிரஸýம், பாஜகவும் இணைந்து முறியடித்தன.

எங்களது உயிரைக் கொடுத்தாவது மதச்சார்பற்ற கொள்கையைக் காப்பாற்றுவோம்.

காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும் அணிக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் டி.கே. ரங்கராஜன்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் பேசியது: தவறு செய்யும் குழந்தையை தாய் கண்டிப்பது போல, பாஜகவை அவ்வப்போது சோ கண்டிப்பார்.

அவர் பாஜகவின் ராஜகுரு. வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்துதான் வரும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்கிறது. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது விலைவாசி குறைகிறது. அதற்கு காரணம் ஊழல்கள்.

நேரு காலத்தில் ராணுவத்துக்கு ஜீப்கள் வாங்கியதில் நடந்த ஊழல் தொடங்கி 2ஜி, ஆதர்ஷ், நிலக்கரி என ஊழல்கள் ஏராளம். ஊழல் என்பது காங்கிரஸின் பாரம்பரியம்.

ஊழலுக்கு அடுத்த தேசத்தின் பாதுகாப்பில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகிறது.

நமது நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது பாகிஸ்தான் ராணுவம். நமது வீரர்களின் தலையை துண்டித்து அனுப்புகிறது அந்த நாட்டு ராணுவம். ஆனால், காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சிக் கொண்டிருக்கிறது.

நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றிக் காட்டியுள்ளார். அதனை மத்திய அரசு பல விருதுகள் கொடுத்து பாராட்டியுள்ளது.

நாங்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டும் முன் வைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை முன்வைக்கிறோம். பாஜக அல்லாத கட்சிகளுக்கு வாக்களித்தால் ஓராண்டுக்குள் மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்க நேரிடும்.

எனவே, சாதனைகளின் நாயகன் நரேந்திர பிரதமராக வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தல் மோடி - ராகுல் இடையே நடக்கும் ஜனநாயகப் போர் என்றார் இல. கணேசன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்:

தேசப் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, விலைவாசி குறைப்பு ஆகியவை ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமான கொள்கை அல்ல. அனைத்துக் கட்சிகளின் கொள்கையும் அதுதான்.

ஊழலே நடக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன்.

ஊழலைக் களைய காங்கிரஸ் அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாஜக ஆட்சியின்போது நடந்த சவப்பெட்டி ஊழல் போன்றவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

வாஜ்பாய் ஆட்சியில்தான் கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. ஆடு மேய்க்கும் சிறுவன் சொன்ன பிறகுதான் ராணுவத்துக்கே அது தெரிந்தது. பாஜக ஆட்சியில்தான் நாடாளுமன்றம் மீதே பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அனைவருக்குமான நல்லாட்சியைத் தர முடியும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.