ஹோட்டல்களில் ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கேமரா அமைக்க உத்தரவு
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள ஹோட்டல்களில் ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.)


ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, சென்னையில் உள்ள ஹோட்டல்களில் ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) பொருத்துமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு இடங்களில் குண்டு வெடிப்பு நடைபெற்றத்தில் பலர் இறந்தனர். இச் சம்பவத்தில் குண்டு வைத்த நபர்களை கண்டறிய, சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் காவல்துறைக்கு பேருதவியாக இருந்தன.
இதன் விளைவாக சென்னையில் உள்ள ஹோட்டல்கள், தனியார் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட தனியார் வசம் உள்ள பொதுமக்கள் அதிகம் செல்லும் பகுதிகள் அனைத்திலும் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என பெருநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு கேமரா ஹோட்டல்களில் வரவேற்பு பகுதி, வாகனங்கள் நிறுத்தும் பகுதி, விருந்தினர்கள் அறைகளுக்கு செல்லும் வழி, உணவு அருந்தும் பகுதி ஆகிய பகுதிகளில் பொருத்தப்பட வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் சுமார் 8 ஆயிரம் தனியார் ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும், மேன்சன்களும் உள்ளன. இதில் 40க்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. இதேபோல 800 மேன்சன்களும், நடுத்தர ஹோட்டல்கள் 5 ஆயிரமும் உள்ளன. இதில் சென்ட்ரல், எழும்பூர், தியாகராயநகர், பாரிமுனை ஆகியப் பகுதிகளில் அதிகப்படியான ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும் உள்ளன. இவற்றில் 75 சதவீத இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா இருப்பதாக கூறப்படுகிறது.
காவல்துறையின் உத்தரவின் ஒரு பகுதியாக காவல் மாவட்டங்கள்தோறும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், மேன்சன்கள் உரிமையாளர்களுடன் கடந்த ஒரு வாரமாக காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இக் கூட்டத்தில் கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும், ஹோட்டல்களில் தங்குகிறவர்களின் புகைப்படத்துடன் அடையாள அட்டை நகல் கண்டிப்பாக பெற்று வைத்திருக்க வேண்டும், அவர்களது செல்போன் எண்களை பெற்று, அது செயல்படுகிறதா என சோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். வெளிநாட்டினர் தங்கினால் அவர்களது விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை பெற்று அப் பகுதியில் காவல்நிலையங்களில் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டு வருகிறது.
இதில் நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூடுதலாக பல விதிமுறைகளையும் பெருநகர காவல்துறை விதித்துள்ளது. இதில் ஹோட்டல்களுக்கு விருந்தினர்களையும், அவர்களது உடமைகளையும் முழுமையாக சோதனை செய்த தங்க அனுமதிக்க வேண்டும். அதேபோல ஹோட்டலுக்கு வரும் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி பெருநகர காவல்துறை ஒரு வாரத்துக்குள் ஹோட்டல்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என உத்தரவிட்டதாக கூறிக் கொண்டாலும், ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கேமராவை பொருத்துவது முடியாத காரியம் என ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
" காவல்துறை கூறும் இந்த பாதுகாப்பு விதிமுறைகளை, ஏற்கனவே பெரும்பாலான ஹோட்டல்கள் பின்பற்றி வருகின்றன. சென்னையில் உள்ள 25 சதவீத ஹோட்டல்களே இதை பின்பற்றாமல் இருக்கக் கூடும். ஆனால் அந்த ஹோட்டல்களில் காவல்துறை கூறுவதுபோல ஒரு வாரத்துக்குள் கண்காணிப்பு கேமரா அமைக்க முடியாது. அவசரகதியில் கண்காணிப்பு கேமரா அமைத்தால், அது நாளடைவில் பழுதடைந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
மேலும் கண்காணிப்பு கேமராவும், அதற்குரிய கருவிகளை பொருத்துவதற்கும் அதிகமாக செலவாகும். அனைத்து ஹோட்டல்களும் நல்ல பொருளாதார நிலையில் இயங்குவதாக கூறிவிட முடியாது, எனவே எங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்த ஏப்ரல் 30ம் தேதி வரை காலக்கெடு வேண்டும் என்றார் சென்னை ஹோட்டல் உரிமையாளர் சங்கத் செயலர் ஆர்.ராஜ்குமார்.
இது தொடர்பாக தாங்கள் காலக்கெடு கேட்டு சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் காவல்துறை கண்காணிப்பு கேமரா இல்லாத ஹோட்டல்களை தீவிரமாக கண்டறிந்து வருகிறது. இப் பிரச்னையில் மக்களின் உயிர் பாதுகாப்பு விஷயத்தில், எவ்வித சமரசமும் செய்ய முடியாது என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...