அதிகரித்து வரும் தொட்டில் குழந்தைகள்
கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை


கடலூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வரும் மாவட்டங்களில் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன், தொப்புள் கொடி ஈரம் காய்வதற்கு முன்னரே கொல்லப்படுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2001-ல் 1,000 ஆண்களுக்கு 942 பெண்களாக இருந்த விகிதம் இப்போது 2011-ல் 1,000-க்கு, 946-ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் உடனடியாக அவற்றைக் கொலை செய்து விடுகின்றனர். அல்லது பொது இடங்களில் வீசி எறிந்து விடுகின்றனர்.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலை நீலகிரி மாவட்டத்தில் மட்டும்தான் பரவலாக இருந்து வந்தது. 1980-ம் ஆண்டுகளில் பெண் சிசுக்கொலை தமிழகத்தின் தென் பகுதியான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, தேனி பகுதிகளுக்கும் பரவியது. அடுத்து 1990-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் இக்கொடூரப் பழக்கம் வேர் விட்டுப் பரவியது.
இதனால் 1992-ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல்முறையாக முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தைகள் திட்டத்தை கொண்டு வந்தார்.
சேலம் மாவட்டத்தில்தான் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பின்னர் 2001-ம் ஆண்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2011-ம் ஆண்டு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெண் குழந்தைகளின் விகிதம் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக மோசமாகக் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
இதையடுத்தே அரசு இந்த மாவட்டங்களில் தொட்டில் குழந்தைத் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி விரிவாக்கம் செய்தது.
அதன் பின்னர் பெண்களுக்காகப் பல சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கொடுக்கப்பட்டன.
இருந்தபோதும், சிசுக்கொலை, கருக்கொலைகள் குறையவில்லை. தொட்டில் குழந்தை திட்டம் குறித்து தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
இதனால் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் 188 தொட்டில் குழந்தை மையங்கள் உள்ளன. 1992 முதல் 2012-ம் ஆண்டு வரை 3,200 பெண் குழந்தைகள் 582 ஆண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 2,400 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். தவிர 170 பெண் குழந்தைகள் 27 ஆண் குழந்தைகள் வெளிநாட்டவருக்கும் தத்து கொடுக்கப்பட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் தொட்டில் மையத்தில் குழந்தைகளை ஒப்படைக்க வரும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளை அவர்களே வளர்க்க அறிவுரைகளும் வழங்கப்பட்டன. பண உதவியும் செய்யப்பட்டது.
இதன் விளைவாக தமிழகத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை 531 குழந்தைகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 1992 முதல் 2013 வரை 105 குழந்தைகள், இத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2010-ம் ஆண்டு 2013 ஜூன் மாதம் வரை மட்டும் 26 குழந்தைகள் தொட்டில் மையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சராசரியாக மாதம் ஒரு குழந்தை, இத் திட்டத்தில் சேர்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து விருத்தாசலத்தை சேர்ந்த கல்வியாளர் ராஜு கூறுகையில், "பெண் குழந்தைகளை பெற்றோரே வளர்க்கும் வகையில் ஒரு புதிய பரிமாணம் உருவாக்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், திருமணம் ஆகியவற்றுக்கு அரசு உதவும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கெனவே தொட்டில் மையத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள், தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற இல்லங்களில் வாழும் குழந்தைகளின் நிலை குறித்து ஒரு முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் இன்றைய நிலை என்ன? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...