திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

துருப்புச் சீட்டு ஜெயலலிதா கையில்!

இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுடன் ஒட்டோ உறவோ கிடையாது என்று

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:15 pm

அஜாத சத்ரு

இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுடன் ஒட்டோ உறவோ கிடையாது என்று சொல்லி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, மாநிலங்களவைத் தேர்தலில்  தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. பா.ம.க. இளைஞரணிச் செயலாளர் அன்புமணியை தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசியதன் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போலோ மருத்துவமனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சை பெற்று வந்தபோது, கனிமொழி அவரை சந்தித்து நலம் பெற வாழ்த்துத் தெரிவித்ததாக வந்த செய்திகளை பா.ம.க. தலைமை மறுத்து வந்தது. ராமதாஸின் மனைவியைத்தான் கனிமொழி சந்தித்தார் என்றும், பா.ம.க. நிறுவனர் ராமதாûஸ யாரும் சந்திக்கவில்லை என்றும் பத்திரிகையில் வந்த செய்திகளுக்கு அன்புமணி மறுப்புத் தெரிவித்தார்.

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அன்புமணியை சந்தித்து மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு பா.ம.க.வின் ஆதரவு கோரியதாக செய்திகள் வந்தபோது, "பா.ம.க.விடம் எந்தக் கட்சி ஆதரவு கேட்டது?' என்று அதற்குக் கோபமாக மறுப்புத் தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.

தற்போது தே.மு.தி.க.வும் மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கி இருப்பதால், வேறு வழியில்லாமல் பா.ம.க.வின் ஆதரவைத் தி.மு.க. நாடி இருப்பதாகவும், தி.மு.க. - பா.ம.க. இடையில் உடன்பாடு எட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 45 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற ஸ்டாலின் - அன்புமணி சந்திப்பின்போது, துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகிய இருவரும் இருந்ததாகத் தெரிகிறது. இந்த சந்திப்புக்கு அவர்கள்தான் ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க.வுக்கு சட்டப்பேரவையில் 23 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதன் வேட்பாளர் கனிமொழியை வெற்றி பெறச் செய்ய மேலும் 11 வாக்குகள் தேவைப்படுகின்றன. தே.மு.தி.க.வும் வேட்பாளரை அறிவித்து விட்டதால், அந்தக் கட்சியின் ஆதரவைப் பெறும் தி.மு.க.வின் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் (5), பா.ம.க. (3), புதிய தமிழகம் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, எந்தவிதப் போட்டியோ, பிரச்னையோ இல்லாமல் தி.மு.க.வால் தனது வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்கிற நிலைமை.

 புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இரண்டும் தங்களுக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாக இருந்தால், தி.மு.க.வை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால், அவர்கள் கேட்கும் தொகுதிகளை விட்டுத் தரத் தி.மு.க. தலைமை தயங்குகிறது.

இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி. ராஜா, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த டி. ராஜாவை ஆதரிக்காமல் இருப்பது அரசியல் ரீதியாகத் தனக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தயங்குவதாகத் தெரிகிறது. அதனால், அந்தக் கட்சிகளின் ஆதரவு தி.மு.க.வுக்குக் கிடைப்பது உறுதியில்லை.

தே.மு.தி.க. தனது வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி காங்கிரûஸ நெருங்கி இருப்பது, தி.மு.க. தலைமையை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தி.மு.க., ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிவிட்ட நிலையில், தே.மு.தி.க.வுடன் இணைந்து தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்தால் என்ன என்கிற சிந்தனை காங்கிரஸ் தலைமைக்கு இருப்பதாகத் தெரிகிறது.

மத்தியில் ஆளும் கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுவிட்ட கட்சிக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்தால், அது மத்திய அரசின் பலவீனத்தை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கருதப்படலாம் என்கிற அச்சமும் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கிறது.

கட்சித் தலைவரின் மகள் என்பதாலும், தி.மு.க.வின் வேட்பாளர் என்பதாலும், எப்பாடுபட்டாவது கனிமொழியை வெற்றியடையச் செய்ய வேண்டிய நிர்பந்தம் தி.மு.க. தலைமைக்கு, குறிப்பாக, பொருளாளர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் என்ன விலை கொடுத்தாவது தி.மு.க.வை வெற்றியடையச் செய்யும் முயற்சியில் அவர் இறங்கி இருக்கிறார். அந்த முயற்சியின் முதல் கட்டமாக, காங்கிரஸ் தலைமையுடன் தி.மு.க. தொடர்ந்து ஆதரவு கேட்டு வருகிறது.

காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு நிர்பந்தம் கொடுத்த மு.க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் காங்கிரஸின் ஆதரவுக்காக பகீரதப் பிரயத்னம் நடத்துவதை, தி.மு.க.விலேயே பலர், குறிப்பாக, அழகிரி ஆதரவாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். கடைசி முயற்சியாக, தனது பிறந்தநாளுக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்த சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியே ஆதரவு கோரிப் பேசக்கூடும் என்று கனிமொழி தரப்பு எதிர்பார்க்கிறது.

கனிமொழியை வெற்றி பெறச் செய்யும் முயற்சியின் இன்னொரு பகுதியாகத்தான், "பா.ம.க.வுடன் இனி எந்த ஒட்டோ உறவோ கூடாது' என்று தீர்மானமாக இருந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வலியப் போய் அன்புமணி ராமதாûஸ சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்.

அ.தி.மு.க.வுடனோ, தே.மு.தி.க.வுடனோ கூட்டணி சேர முடியாத நிலையில், தனித்து செயல்படுவது என்று முடிவெடுத்திருந்த பா.ம.க.வும், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தி.மு.க.வுடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. "தி.மு.க.வை ஆதரிக்கும் இந்தப் பேரத்திற்கு பா.ம.க. கேட்ட விலை என்ன?' என்பது இப்போது அரசியல் வட்டாரங்களில், குறிப்பாக பா.ம.க. எதிர்ப்பாளர்கள் மத்தியில்  பரவலாக எழுப்பப்படும் கேள்வி!

தே.மு.தி.க.வைப் பொருத்தவரை, தனது கட்சி உறுப்பினர்கள் விலை பேசப்படாமல் இருப்பதற்காகவும், கட்சி தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று தெளிவுபடுத்துவதற்காகவும்தான், வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார் விஜயகாந்த் என்று தெரிகிறது. அப்படியே சிலர் மாற்றி வாக்களித்தாலும், துரோகிகளை அடையாளம் காண முடியும் என்பதும், தன்னுடைய பலத்தை உறுதி செய்து கொள்ளவும் அவர் கையாண்டிருக்கும் உத்திதான் இது என்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் ஆதரவு அளித்தாலும்கூட, தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமானால், தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இருவருமே தலா 27 வாக்குகளைத்தான் பெறுவார்கள். பா.ம.க. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினால், தே.மு.தி.க. அதிருப்தியாளர்களின் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

அ.தி.மு.க.வும் இடதுசாரிகளும் இணைந்து 5 இடங்களில் போட்டியிடுவதால், அ.தி.மு.க.வின் நான்கு உறுப்பினர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினர் ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் (2), மனிதநேய மக்கள் கட்சி (2) ஆகியவற்றின் ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு வேட்பாளர்கள் ஐந்து பேரின் வெற்றிக்குத் தேவையில்லை என்றபோதிலும், அ.தி.மு.க.வின் வழிகாட்டுதல்படி அவர்களை வாக்களிக்கச் செய்யும் நிலைமையில் அ.தி.மு.க. இருக்கிறது. தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் ஏழு பேரின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்யும் நிலையிலும் அ.தி.மு.க. இருக்கிறது.

நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, ஆறாவது இடத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் துருப்புச் சீட்டு இருப்பது முதல்வர் ஜெயலலிதாவின் கையில்தான். தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களில் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதைக் கூட அ.தி.மு.க. தலைமைதான் முடிவு செய்யும் என்பதுதான் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலின் சுவாரஸ்யமான "க்ளைமாக்ஸ்'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.