/

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க நவீன இயந்திரம்

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை நூறு சதவீதப் பாதுகாப்புடன் மீட்க உதவும் இயந்திரத்தை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:13 pm

என். தமிழ்ச்செல்வன்

ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளை நூறு சதவீதப் பாதுகாப்புடன் மீட்க உதவும் இயந்திரத்தை நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

குடும்ப வறுமைக்கு மத்தியில் தனது 5 ஆண்டு கால கடின உழைப்பால் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரத்துக்கு அரசின் அங்கீகாரத்தை எதிர்நோக்கியுள்ளார்.

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 30 குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்ததில் ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இத்தகைய கோர விபத்துகளிலிருந்து குழந்தையை உயிருடன் மீட்கக்கூடிய நவீன இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார் நாமக்கல் மாவட்டம், உத்தகிடிகாவல் ஊராட்சி, வெட்டுக்காடு கிராம அருந்ததியர் காலனியைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ் (29).

இந்த இயந்திரத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையின் நிலையை முதலில் அறிந்து கொள்ள அகச் சிவப்பு கதிர்களுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த குழிக்குள் சிக்கிய குழந்தையை துல்லியமாகக் காண கேமராவை சுற்றி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பக் கோளாறால் அந்த விளக்குகள் எரியாவிடில், கேமராவிலுள்ள சென்ஷார் மூலம் ஒளி உண்டாக்கப்பட்டு கருப்பு, வெள்ளை விடியோவாக குழந்தையைக் காண முடியும். தவிர, குழிக்குள் சிக்கியுள்ள குழந்தையுடன் பேசவும், குழந்தை பேசுவதை மேலிருந்து கேட்கவும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைக்கு சீரான பிராணவாயு கிடைக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் குழந்தை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், குழந்தையை இறுகப்பிடித்து மேலே கொண்டு வர 3 அங்குலம் முதல் 5 அடி வரை விரிவடையும் தன்மையுடைய இடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு குழந்தையைப் பிடித்து மேலே இழுக்கும்போது பக்கவாட்டியிலுள்ள மண் குழந்தையின் சுவாசக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு கவசமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உடலில் சிறு சிராய்ப்பு காயங்கள்கூட ஏற்படாமல் குழந்தையை வெளியே கொண்டு வர முடியும் என்கிறார் வெங்கடேஷ்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: ஏற்கெனவே இரு முறை தயாரிக்கப்பட்ட இயந்திரங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மூன்றாவதாக இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். இந்த மூன்று இயந்திரங்களுக்கும் சேர்த்து இதுவரை சுமார் ரூ.7 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர்ந்து இந்த நவீன இயந்திரத்தை தயாரிக்க ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவிட்டால் போதும்.

இந்த இயந்திரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்து ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கும் மின் மோட்டார்கள், நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கங்களில் சிக்குபவர்கள், திறந்தவெளிக் கிணற்றில் விழும் விலங்குகளையும் பாதுகாப்பாக மீட்க முடியும்.

இயந்திரத்தின் செயல்பாட்டை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன், கோட்ட தீயணைப்பு அலுவலர் அழகப்பன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் நேரில் பார்வையிட்டு, தமிழக தீயணைப்புத் துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து, ஜூன் 13-ஆம் தேதி சென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநர்கள் முன் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, இயந்திரத்தின் செயல்பாட்டின் மீது முழு திருப்தி தெரிவித்த அவர்கள், இயந்திரத்தை தீயணைப்புத் துறை ஏற்க ஆராய்ச்சி நிறுவனச் சான்று பெற்றிடவும் அறிவுறுத்தியுள்ளனர். அதற்காக மாவட்ட ஆட்சியர் உதவியுடன் இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு விண்ணப்பிக்க உள்ளேன் என்றார் வெங்கடேஷ்.

இவர் எம்எஸ்ஸி (இயற்பியல்), பிஎட், பிஜிடிசிஏ படித்துள்ளார்.

கூலித் தொழிலாளி ஆறுமுகம், செட்டியம்மாள் தம்பதியின் மூன்றாவது மகனான இவர், நாட்டுக்கு பயனளிக்கக் கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்காக குடும்ப வறுமைக்கு மத்தியில் தான் ஆற்றிய ஆசிரியர் பணியையும் விட்டுவிட்டு கடந்த 5 ஆண்டு கால வாழ்க்கையை இதற்காகத் தியாகம் செய்துள்ளார்.

இந்த நிலையில், நூறு சதவீதம் பாதுகாப்புடன் கூடிய இந்த இயந்திரத்துக்கு தமிழக அரசின் அங்கீகாரத்தையும் எதிர்நோக்கியுள்ளார்.

குறைபாடு இல்லாத இயந்திரம்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கும் குழந்தைகளை மீட்க ஏற்கெனவே பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அவற்றால் குழந்தைகளை முழுப் பாதுகாப்புடன் மீட்க முடியவில்லை. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கரூரில் நிகழ்ந்த விபத்திலும் இதே நிலைமையே ஏற்பட்டது.

இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு நவீன வசதிகள் புகுத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் நூறு சதவீதம் பாதுகாப்புடன் குழந்தைகளை மீட்க உதவும் எனக் கூறும் வெங்கடேஷ், இந்த இயந்திரத்துக்கு "அம்மாவின் அன்பும் அரவணைப்பும்' எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.