நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஓடையாக மாறியது அகண்ட காவிரி!

கர்நாடகத்தில் இருந்து நீர்வரத்து இல்லாததால், காவிரி ஆறு ஓடையாக காட்சியளிக்கிறது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:23 am

க. தங்கராஜா

கர்நாடகத்தில் இருந்து நீர்வரத்து இல்லாததால், காவிரி ஆறு ஓடையாக காட்சியளிக்கிறது.

மேட்டூர் அணையில் கடந்த 2012, செப்டம்பர் மாதம் நீர்மட்டம் 84 அடியாக இருந்ததால், காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும், பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அணையின் நீர்மட்டம் 33 அடியாக குறைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு, டிசம்பர் 22ஆம் தேதி அணை மூடப்பட்டது.

அப்போது முதல் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர்த் தேவைக்கு மட்டும் சராசரியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், அணைக்கான நீர்வரத்து எப்போதும் இல்லாத அளவுக்கு வினாடிக்கு 100 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் சனிக்கிழமை நிலவரப்படி நீர் இருப்பு 5.63 டிஎம்சி. 24.87 அடி மட்டுமே நீர் உள்ளது. சுமார் 60 சதுர மைல் அளவுக்கு தண்ணீர் பரந்து விரிந்திருந்த அணையில் தற்போது குட்டை போல சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியுள்ளன.

மேலும், நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் காவிரி ஆறு ஓடையாக செல்கிறது. இதனால் பண்ணவாடி- நாகமரையைப் பிரிக்கும் ஆற்றை பொதுமக்கள் சில நிமிஷங்களிலேயே நடந்தே கடந்துவிடுகின்றனர்.

வறண்ட ஆற்றுப் பகுதியில் விவசாயம்: இதனிடையே, நீர் நிறைந்திருந்த கொளத்தூர், கீரைக்காரனூர், கூனாண்டியூர், வத்தல்பட்டி, கொண்டையனூர், நாகமரை, ஏமனூர், பாலாறு, கோட்டையூர், பண்ணவாடி, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. நெல், கேழ்வரகு, சோளம், கம்பு, எள் போன்ற தானியங்களுடன் வெள்ளரி, தர்பூசணி, சாம்பல் பூசணி உள்ளிட்ட காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் குறைந்திருப்பதால், பயிர்கள் ஒரு போகம் சாகுபடி முடிவடைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவில் விவசாயம் நடைபெறுகிறது என்றார் பண்ணவாடி விவசாயி சந்திரசேகரன். வறட்சி காரணமாக, சுற்றுப் பகுதி கிராமங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அணைக்குள் வளர்ந்துள்ள பொன்னாங்கன்னி உள்ளிட்ட கீரை வகைகளை கால்நடைகளுக்காக விவசாயிகள் பறித்துச் செல்கின்றனர்.

மீன் வளம் குறைவு: இதற்கிடையே, அணையில் நீர்மட்டம் குறைவால், மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளன.

அணையில், தண்ணீர் குறையும் காலகட்டங்களில் சுமார் 25 கிலோ முதல் 50 கிலோ எடை வரையிலும் உள்ள ரோகு, கட்லா போன்ற மீன்கள் அதிகளவில் கிடைக்கும். ஆனால், கடந்த ஆண்டில் அரிவலையைப் பயன்படுத்தி சிறிய மீன்களையும் பிடித்த சட்டவிரோத செயலால், நிகழாண்டில் பெரிய மீன்கள் எவையும் கிடைக்கவில்லை என்கிறார் மீனவர் ராதாகிருஷ்ணன். நாள்தோறும் சராசரியாக ஆயிரம் கிலோ மீன்கள் கிடைத்திருந்த நிலையில், இப்போது சராசரிக்கும் குறைவான அளவே மீன்கள் கிடைப்பதாகக் கூறினார் அவர்.இதனால், மீன்களின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட ரோகு, இப்போது ரூ.120-க்கும், ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கட்லா ரூ.150-க்கும், ரூ.50-க்கு விற்கப்பட்ட ஜிலேபி ரூ.70-க்கும், ரூ.90-க்கு விற்கப்பட்ட ஆரால் ரூ.150-க்கும், கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட கெழுத்தி இப்போது ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மீன்பிடித் தொழில் பாதிப்பால், பல மீனவர்கள் வேலை தேடி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஏரிகளுக்கும், விவசாய வேலை, லாரி கிளீனர் உள்ளிட்ட வேலைகளுக்கும் செல்கின்றனர். அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், சேலம் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.