/

வடகிழக்குப் பருவ மழை: 16.50 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிட இலக்கு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சுமார் 16.50 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:16 pm

ப. இசக்கி

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சுமார் 16.50 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென் மேற்குப் பருவ மழை பொய்த்ததால், தரிசாக இருக்கும் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் நிலத்தையும் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சேர்த்துப் பயிரிடும் வகையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் நிலையில் உள்ளது. இந்தப் பருவத்தில் தென் மாவட்டங்களில் "பிசானம்' என்றும், காவிரி டெல்டா பகுதிகளிலும், வட மாவட்டங்களிலும் "சம்பா' என்றும் அழைக்கப்படும் நெல் பயிரிடும் பருவத்தில் வழக்கமாக சுமார் 14.16 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படும்.

இந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை பொய்த்ததால் தென் மாவட்டங்களில் "கார்' என்றும், காவிரி டெல்டா பகுதிகளில் "குறுவை' என்றும், வட மாவட்டங்களில் "சொர்ணவாரி' என்றும் அழைக்கப்படும் நெல் பயிரிடும் பருவத்தில் வழக்கமான பரப்பளவான சுமார் 4.40 லட்சம் ஹெக்டேரில் சுமார் 2 லட்சம் ஹெக்டேர் வரை தரிசாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வழக்கமான மழை அளவு 930.7 மி.மீ. ஆகும். இதில் சுமார் 45 சதவீத மழை வடகிழக்குப் பருவ மழை காலத்தில்தான் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு சராசரி மழையோ அல்லது அது விட சற்று கூடுதலாகவோ கிடைக்கும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த வடகிழக்குப் பருவ மழை காலத்தில் வழக்கமாக நெல் பயிரிடும் பரப்பளவான 14.16 லட்சம் ஹெக்டேருடன், தென் கிழக்குப் பருவ பொய்த்ததால் தரிசாக இருக்கும் சுமார் 2 லட்சம் ஹெக்டேரையும் சேர்த்து மொத்தம் 16.50 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிட வேளாண்மை துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிறப்புத் திட்டங்கள்: காவிரி டெல்டா பகுதிகளில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமையாக இல்லாததால் தரிசாக இருக்கும் நஞ்சை நிலம் முழுவதையும் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவும், கால அளவைக் குறைக்கவும் சிறப்புத் திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பம்ப் செட் வைத்திருக்கும் விவசாயிகளின் உதவியுடன் சமுதாய நாற்றங்கால் திட்டம் செயல்படுத்தப்படும். அந்த நெல் நாற்றுகள் இதர விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். அதற்கான மானியத்தை அரசு வழங்கும். இந்த திட்டத்துக்கு ரூ.19 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. நேரடி விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு ரூ.2.40 கோடியை ஒதுக்கியுள்ளது. விதைப்பு மற்றும் உரமிடும் கருவிகள் கொள்முதல், திருந்திய நெல் சாகுபடி திட்டம், களை கொல்லி மருந்துகள் வழங்குதல் என மொத்தம் 10 வகையான மானிய திட்டங்களுக்கு அரசு மொத்தம் ரூ.53.53 கோடியை ஒதுக்கியுள்ளது.

இடுபொருள்கள் இருப்பு: இந்தப் பருவத்தில் நெல் சாகுபடி பரப்பு இலக்கை முழுமையாக எட்டுவதற்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து போன்ற வேளாண் இடுபொருள்கள் அனைத்தும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பருவத்துக்கு மொத்த விதை நெல் தேவை 23,570 மெட்ரிக் டன் ஆகும். இப்போதைய இருப்பு 25,690 மெ.டன் ஆகும். இதேபோல், சிறுதானியங்கள் 1,157 மெ.டன்னும், பருப்பு வகைகள் 1,259 மெ.டன்னும், எண்ணெய் விதைகள் 3,525 மெ. டன்னும், பருத்தி 116 டன்னும் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரங்களைப் பொருத்தவரையில், அக்டோபரில் யூரியாவின் தேவை 1.73 லட்சம் மெ.டன் ஆகும். இப்போது 1.06 லட்சம் மெ.டன் கையிருப்பு உள்ளது. இந்த மாதம் மத்திய அரசு 2.18 லட்சம் மெ.டன் யூரியாவை அளிக்கும். டி.ஏ.பி.யின் தேவை 70 ஆயிரம் மெ.டன் ஆகும். இப்போது 52,836 மெ.டன் கையிருப்பு உள்ளது. மத்திய அரசு 63 ஆயிரம் மெ.டன் அளிக்கும். பொட்டாஷ் தேவை 84 ஆயிரம் மெ.டன் ஆகும். இப்போது 99.94 ஆயிரம் மெ.டன் கையிருப்பு உள்ளது. மத்திய அரசு 73,200 மெ.டன் அளிக்கும். கலப்பு உரங்களின் தேவை 90,760 மெ.டன் ஆகும். இப்போது 79,505 மெ.டன் கையிருப்பு உள்ளது. மத்திய அரசு 1.05 லட்சம் மெ.டன் அளிக்கும். எனவே, விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

"பிசானம்' பருவத்துக்கு  சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படுமா?

கரவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பொய்த்த இடங்களில் சம்பா பருவத்தின் கால அளவைக் குறைத்து இலக்கை எட்டு வகையில் 10 வகையான சிறப்புத் திட்டங்களை அரசு அறிவித்து ரூ.53.53 கோடியை ஒதுக்கியுள்ளது.

தென் மேற்குப் பருவ மழை பொய்த்ததால் தென் மாவட்டங்களில் கார் பருவ சாகுபடி வெகுவாக பாதித்தது. அங்கும் பல ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் தரிசாக உள்ளன. அந்த நிலங்களில் இந்த வடகிழக்குப் பருவ மழை காலத்தில்தான் விவசாயிகள் நெல் பயிரிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது போன்றே தென் மாவட்ட விவசாயிகளுக்கும் பிசானப் பருவத்துக்கு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.