சர்வதேச தகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் புறக்கணிப்பு !
தென்மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாகத் திகழும் மதுரை விமான


தென்மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாகத் திகழும் மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச தகுதியை மத்திய அரசு வழங்காததால் பொதுமக்கள், வர்த்தகர்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட முன்னேற்றத் திட்டங்களிலும் மத்திய அரசு தொடர்ந்து தென்மாவட்டங்களைப் புறக்கணிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது விமானங்கள் இறங்கும் வகையில் மதுரையில் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது.
இதையடுத்து 1956-ல் பயணிகள் விமானம் இறங்கும் வகையில் விமான நிலையம் முழுமையாக அமைக்கப்பட்டது. அப்போது மதுரை- சென்னை இடையே முதல் பயணிகள் விமானமும் இயக்கப்பட்டது.
தொடர்ந்து விமான நிலையத்தின் ஓடுதளம் 6,500 மீட்டராக அமைக்கப்பட்டது. மேலும் சென்னை, திருச்சி, கோவை எனப் பல பகுதிகளில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு வாயிலாக மதுரை விளங்கியதால் விமானப் பயணிகளும் அதிகரித்துள்ளனர். 1980-க்குப் பிறகு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர் வேலைக்காக வெளிநாடு செல்வதும் அதிகரித்துள்ளது. 2000-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தென்மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குச் செல்ல விமானங்களைப் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் ஆண்டுதோறுமó வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 35 லட்சம் பேர் மதுரைக்கு வருவதும், அதில் பெரும்பாலானோர் விமானத்தில் வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய நிலையில்தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் 2005-ல் மதுரை விமான நிலைய ஓடுதளம் 7500 அடி நீளமாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் விமான நிலையத்துக்கான புதிய முனையம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பேரில் 2005-ல் பணி தொடங்கப்பட்டு சுமார் ரூ.250 கோடியில் 2010-ல் புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது மதுரையில் இருந்து சென்னை, மும்பை, புதுதில்லி, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தினமும் 10 முறை விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து தினமும் 700 பயணிகள் விமானத்தில் செல்வதுடன், வெளியூர்களிலிருந்து தினமும் சுமார் 650 பேர் வருகையும் தருகின்றனர்.
மதுரையில் இருந்து இலங்கைக்கு அண்மையில் விமான சேவை தொடங்கப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் மதுரைக்கு விரைவில் சேவையை துவங்கவுள்ளது. இத்தகைய நிலையில்தான் விமான நிலைய ஓடுதளத்தை 12,500 அடியாக நீட்டிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்காக 610 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 2010-ல் சுங்க வரிப் பிரிவு, 2011-ல் மத்திய கலால் துறை பிரிவு, கடந்த மே மாதம் குடியுரிமைப் பிரிவு ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன. ஆக, சர்வதேச தரத்துக்கான முழுத் தகுதியுடன் மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் வெளிநாட்டு விமானங்கள் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதற்காக மத்திய விமானத் துறை சார்பில் அந்தந்த நாடுகளின் விமானப் போக்குவரத்துத் துறையுடன் ஒப்பந்தம் போடப்படும். அப்போது இந்திய விமான நிலையப் பட்டியலை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு நமது விமானத் துறை வழங்கும். அத்தகைய பட்டியலில் மதுரை விமான நிலையம் இடம்பெறவில்லை. ஆனால், கோவை, திருச்சியை அந்தப் பட்டியலில் சேர்த்த மத்திய அரசு மதுரையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே இப்போதைய குற்றச்சாட்டாகும்.
அதாவது 1996-ம் ஆண்டு முதலே தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இடைவிடாது கோரிக்கை விடுத்தும், மதுரை விமான நிலையத்தை வெளிநாட்டு விமானச் சேவை ஒப்பந்தப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு இதுவரை மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
"மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 610 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியுள்ளபோதும், மதுரையை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த முன்வராதது சரியல்ல' என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே நாங்குநேரி தொழில்நுட்பப் பூங்கா மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவற்றை செயல்படுத்தாமல் மத்திய அரசு மதுரையை புறக்கணித்துள்ளது. அத்துடன் பெரியாறு அணை பிரச்னையிலும் மத்திய அரசு பாராமுகமாக நடந்து கொள்கிறது. இத்தகைய நிலையில் தென்மாவட்ட நுழைவான மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...