தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

விரிவுபடுத்தப்படுகிறது 108 ஆம்புலன்ஸ் திட்டம்!

 தருமபுரி, மே 9: தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது.  பச்சிளம் குழந்தைகளுக்காக இப்போது இயக்கப்படும் 4 சிறப்பு வாகனங்களைப்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:13 am

 தருமபுரி, மே 9: தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தால் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

 பச்சிளம் குழந்தைகளுக்காக இப்போது இயக்கப்படும் 4 சிறப்பு வாகனங்களைப் போன்று மாவட்டத்துக்கு ஓர் ஆம்புலன்ஸ் இயக்கப்படவுள்ளது. மேலும், மலைப் பகுதிகள் மற்றும் போதிய சாலை வசதியில்லாத குக்கிராமப் பகுதிகளுக்கென தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

 சாலை விபத்து, பாம்புக்கடி, கொள்ளை நோய், தீ, மாரடைப்பு, தொழில்சாலை விபத்து, விஷ வாயு தாக்குதல் மற்றும் இதர அனைத்து வகையான அவசர உதவி தேவைப்படும் சூழல் உள்ளிட்ட தருணங்களில் பொதுமக்களின் உயிரைக் காக்கவும், மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் விதமாக கொண்டு வரப்பட்டது 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம்.

 இதுமட்டுமல்லாது, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு பலர் காயமடையும் தருணங்களிலும், பெண்களுக்கெதிரான கொடுமை நடைபெறும் இடங்களிலும் பாதிக்கப்பட்டோரை மீட்கவும், காவல் துறை உதவியைப் பெற்றுத் தரவும் கட்டணமில்லா 108 தொலைபேசி அழைப்பு பெரிதும் உதவியாக உள்ளது.

 தமிழகத்தில் 2008-ம் ஆண்டு, செப்.15-ம் தேதி 60 வாகனங்களுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மாநில அரசின் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் மூலம் 95 சத நிதி இந்தத் திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5 சத நிதியை திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் நிறுவனமான ஜிவிகே இஎம்ஆர்ஐ (அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனம்) வழங்குகிறது. உலக வங்கி அளிக்கும் நிதி, தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் வழங்கப்படும் நிதியையும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்துக்கு மாநில அரசு பயன்படுத்திக் கொள்கிறது.

 மருத்துவ உதவியை மட்டும் அளிக்காமல், அவசரகால நிலைமை ஏன் ஏற்படுகிறது, எத்தகைய தருணங்களில் எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்து, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளையும் செய்து வருகிறது. எந்தப் பகுதியில் மகப்பேறு மரணம், சாலை விபத்து, நோய்த் தொற்று அதிகம் ஏற்படுகிறது என்பதையும் ஆராய்ந்து அதற்கான புள்ளிவிவரங்களை தொகுத்து அரசுக்கு வழங்கி வருகிறது.

 தொடக்கத்தில் 60 வாகனங்களுடன் சேவையைத் தொடங்கி, படிப்படியாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 385 வாகனங்களாக உயர்ந்தது. இப்போது, கூடுதலாக 56 வாகனங்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 438 ஆம்புலன்ஸ்களுடன் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 மகப்பேறு காலத்தில் தண்ணீர்குடம் உடையும் சூழலில் அளவுக்கு அதிகமான தண்ணீரை குழந்தை குடித்துவிடும் வாய்ப்பு உருவாகிறது. அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அபாயக் கட்டத்தை சந்திக்க நேரிடலாம். இத்தகைய சூழலில், குழந்தைக்கு இன்குபேட்டர், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் தேவை. கிராமப் பகுதி அரசு மருத்துவமனைகளில் இத்தகைய வசதியில்லை எனில் நகரப் பகுதிக்கு வர வேண்டும். அந்த சூழலில் குழந்தையின் உயிரைக் காக்க வேண்டும் என்பதற்காகவே பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தச் சேவை செங்கல்பட்டு, சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 4 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 இப்போது, அனைத்து மாவட்டங்களிலும் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது. இதற்காக 70 புதிய வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ஆம்புலன்ஸில் பணிபுரிபவர்களுக்கு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர். இந்த ஆம்புலன்ஸில் வென்டிலேட்டர், இன்குபேட்டர் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். மாவட்டத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மாநகரங்கள், தேவையுள்ள பகுதிகளில் கூடுதலாகவும் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதில், முதல் மாவட்டமாக தருமபுரிக்கு மே மாதத்துக்குள்ளாகவே பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மதுரைக்கும், அதன் தொடர்ச்சியாக இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

 இவைதவிர, 108 சேவைக்காக கூடுதலாக 180 வாகனங்களும் இயக்கப்படவுள்ளன. இப்போது, 438 எண்ணிக்கையில் உள்ள வாகனங்கள் ஓரிரு மாதங்களில் 688 வாகனங்களாக அதிகரிக்கப்படவுள்ளது. 2013-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 962 வாகனங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன் முன்னோட்டமாக புதுதில்லியிலிருந்து 45 ஆம்புலன்ஸ்கள் 108 சேவைத் திட்டத்துக்கு வந்துள்ளன.

 இதுமட்டுமல்லாது, மலைப் பகுதிகள், மண் சாலை, சாலை வசதியே இல்லாத விளைநிலங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று வருவதற்காக அதிக விட்டமுடைய நான்கு சக்கர வாகனம் (ஜீப், சுமோ ரகங்களைப் போன்று) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தப் புதிய ரக வாகனத்தில் ஆம்புலன்ஸில் உள்ளதைப் போன்று அனைத்து மருத்துவ உபகரணங்களும் இடம் பெற்றிருக்கும்.

 இத்தகைய சேவை விரிவுபடுத்தப்படுவதால், தமிழகத்தின் அனைத்துக் கிராம மக்களுக்கும் மருத்துவ உதவியும், அவசரகால உதவியும் கிடைப்பதுடன், இப்போது 2,200 பேருக்கு வேலை அளிக்கும் வகையிலான இந்தத் திட்டம் மேலும் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மாறும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.