24 மணி நேரத்தில் 2,500 மெகாவாட் மின் உற்பத்தி
ஈரோடு, மே 5: தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் சராசரியாக 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தமிழக காற்றாலைகள் வரலாற்றில் புதிய சாதனையாகும். தமிழகத்தின் முதல் காற்றாலை 1980


ஈரோடு, மே 5: தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் ஒரே நாளில் சராசரியாக 2,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது தமிழக காற்றாலைகள் வரலாற்றில் புதிய சாதனையாகும்.
தமிழகத்தின் முதல் காற்றாலை 1980-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஆனால் 1990-களில்தான் அதிக எண்ணிக்கையி
லான நிறுவனங்கள் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்யத் தொடங்கின. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், கயத்தாறு, கொங்கு மண்டலத்தில் உடுமலை, காங்கயம், தாராபுரம், பொள்ளாச்சி மற்றும் தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் காற்றாலைகள் அதிகமாக நிறுவப்பட்டுள்ளன.
இப்போது தமிழகத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 882 காற்றாலைகள் இயங்கி வருகின்றன. உற்பத்தித் திறனைப் பொறுத்து ஒரு காற்றாலையில் குறைந்தபட்சம் 200 கிலோ வாட் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் கிலோவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். காற்று சாதகமாக இருந்தால் இவற்றிலிருந்து தினமும் 6,996 மெகா வாட் மின்சாரத்தைப் பெற முடியும்.
ஆனால், தொழில்நுட்பக் கருவிகளின் பற்றாக்குறையாலும், விநியோகத்தில் உள்ள பிரச்னைகளாலும் தமிழக காற்றாலைகளின் உற்பத்தித் திறன் இப்போது சுமார் 3,500 மெகாவாட் மட்டுமே. உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கத் தேவையான கட்டமைப்பு இப்போது தமிழகத்தில் இல்லை.
கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் காற்றின் வேகம் குறைவாக இருந்தது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி 600 மெகாவாட்டாகக் குறைந்தது. நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 600 மெகாவாட், பிப்ரவரியில் 900, மார்ச் மாதம் 1,100, ஏப்ரல் மாதத்தில் 1,100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் நிலவிய கடும் மின்வெட்டு பிரச்னைக்கு இந்த உற்பத்திக் குறைவும் ஒரு காரணமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 4) தமிழக காற்றாலை வரலாற்றில் அதிகபட்சமாக 2,500 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 24.6.2011-ல் 2,300 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டதுதான் காற்றாலை
வரலாற்றில் சாதனையாக இருந்தது.
இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் சிலர் கூறியது: தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஓராண்டு நிலுவைத் தொகையாக சுமார் ரூ.2,200 கோடி வழங்க வேண்டியுள்ளது. இத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மின் உற்பத்தி செய்யப்பட்டதால், பல காற்றாலைகளில் மின் உற்பத்தியைக் குறைக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் பல காற்றாலைகள் நிறுத்தப்பட்டன.
நவீனக் கருவிகளைப் பொருத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் 40 சதவீத மின்வெட்டை விலக்க வேண்டும். மின் விடுமுறை நாள்களைக் கைவிட வேண்டும் என்றனர்.
கூடுதலாக 1,000 மெகாவாட் உற்பத்திக்கு வாய்ப்பு
இது குறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே. கஸ்தூரிரங்கையன் கூறியது:
தமிழகத்தில் ஒரு நாளுக்கான மின் நுகர்வு 9500 மெகாவாட். இதில் 2,500 மெகாவாட் மின்சாரம் காற்றாலைகளின் மூலம் பெறப்படுகிறது. தமிழகத்தில் கூடுதல் நிறுவனங்கள் காற்றாலைகளில் முதலீடு செய்துள்ளதால் நடப்பு ஆண்டில் கூடுதலாக 1,050 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் சராசரியாக ஒரு நாளுக்கு 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...