ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகி யுள்ளது. இம் மாவட்டத்துக்குப் பிரதான நீராதாரமாக விளங்கும் மேட்டூர், பவானிசாகர் அணைகளில் நீர் இருப்பு த


ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பாசன நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகி
யுள்ளது.
இம் மாவட்டத்துக்குப் பிரதான நீராதாரமாக விளங்கும் மேட்டூர், பவானிசாகர் அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து மோசமாக இருந்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 20 லட்சத்து 11 ஆயிரத்து 582 பேர் வசிக்கின்றனர். இம் மாவட்டத்தில் அரசு புள்ளிவிவரங்கள்படி 2 லட்சத்து 24 ஆயிரத்து 786 ஹெக்டேர் பரப்பில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை, பருத்தி, மலர்கள், குச்சிக்கிழங்கு, மல்பெரி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.
கீழ்பவானி வாய்க்காலை நம்பி, 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை கால்வாயில் சுமார் 24 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்களும் உள்ளன. பவானி- காவிரி ஆறு சங்கமிக்கும் பகுதியில் இருந்து தொடங்கும் காலிங்கராயன் கால்வாயை நம்பி, சுமார் 18 ஆயிரம் 500 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன.
இக் கால்வாய்களில் உள்ள பாசன நிலங்கள், பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளை நம்பியே உள்ளன.
அதேபோல, ஈரோடு மாநகராட்சி உள்பட மாவட்டத்தில் உள்ள 70 சதவீத உள்ளாட்சிகள் குடிநீருக்காக காவிரி நீரை நம்பியே உள்ளன. இந்த இரு அணைகளிலும் இப்போது போதுமான நீர் இருப்பு இல்லை. பவானிசாகர் அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. ஆனால், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.79 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 3.5 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. இந்தாண்டு, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை கால்வாயில் இப்போது குறைந்த அளவு மட்டுமே நீர் திறந்துவிடப்படுவதால் பல இடங்களில் விவசாயிகள் சாகுபடியை நிறுத்திவிட்டனர்.
அதேபோல, மேட்டூர் அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 120 அடி. ஆனால், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர்மட்டம் 79.26 அடியாக இருந்தது. நீர் இருப்பு 4.12 டி.எம்.சி. மட்டுமே உள்ளது. இதனால், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறந்துவிடப்படும் இந்த அணை, இந்த ஆண்டில் திறந்துவிடப்படவில்லை. இதனால், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் செ. நல்லசாமி கூறியது:
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமேதிப் பள்ளத்தாக்கில் பெய்யும் மழை நீர், பில்லூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து பவானி ஆறு மூலமாக பவானிசாகர் அணைக்கு வருகிறது. பில்லூர் அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு கூடுதலாக குடிநீர் எடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டில் பருவமழையும் குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து வருவதால், ஈரோடு மாவட்டத்தில் பாசன நீருக்குப் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனக் கால்வாயில் குறைவான தண்ணீர்தான் திறந்துவிடப்படுகிறது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை. அதேபோல, காலிங்கராயனில் ஜூன் 15-ம் தேதி தண்ணீர் திறக்க முடியுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுக்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நஞ்சைப் பயிர்களுக்குப் பதிலாக, புஞ்சை பயிர்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...