/

கூலிப் பணத்தில் காந்திக்கு மண்டபம் அமைத்த இளைஞர்கள்

தருமபுரி, ஜூன் 11: கூலி வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ரூ. 4 லட்சம் செலவில் காந்திக்கு சிலையும், மண்டபமும் அமைத்து இன்றைய இளைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர் பாறையூர் இளை

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:42 pm

ஆர். முருகன்

தருமபுரி, ஜூன் 11: கூலி வேலைக்குச் சென்று கிடைத்த பணத்தில் சிறுகச் சிறுக சேமித்து ரூ. 4 லட்சம் செலவில் காந்திக்கு சிலையும், மண்டபமும் அமைத்து இன்றைய இளைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்கின்றனர் பாறையூர் இளைஞர்கள்.

 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்குள்பட்டது பாறையூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 43 பேரின் உழைப்பில் உருவாகியுள்ளது இந்த மண்டபம்.

 இவர்களில் பெரும்பாலானோர் 5-வது வரை மட்டுமே படித்தவர்கள். இருவர் மட்டுமே 10-ம் வகுப்பு படித்துள்ளனர்.

 கூலி வேலைக்குச் சென்ற 43 இளைஞர்கள் ஒன்றுகூடி கிராம சேவைக்காக 2001-ல் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தைத் தொடங்கினர். கல்வி பயில உதவி தேவைப்படும் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நோட்டுப் புத்தகங்கள், சீருடை என சிறிய அளவில் நலத் திட்டங்களை வழங்கி வந்தனர்.

 இதன் தொடர்ச்சியாக இவர்களது மனதில் உதயமானதுதான், மகாத்மா காந்திக்கு சிலை அமைத்து மண்டபம் கட்ட வேண்டும் என்பது.

 கிராமத்துக்குள் நுழையும் அனைவரும் இந்த மண்டபத்தை பார்த்துச் செல்லும் வகையில், சாலையோரத்தில் 15-க்கு 10 சதுர அடி அளவில் மண்டபத்தைக் கட்டியுள்ளனர். இதற்குள் 5 அடி உயர காந்தி சிலை தனியே பீடத்துடன் மத்தியில் நிறுவப்பட்டுள்ளது. மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களிலும் சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி., பகத்சிங் உள்ளிட்ட தலைவர்களது படங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேலே சிறிய கம்பம் அமைத்து தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கூலியில் ஒரு பகுதியை இயன்ற அளவு ஒதுக்கி சேமித்து, இப்போது மண்டபமாக உருமாற்றியுள்ளனர். ஜனவரி மாதத்திலேயே மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.

 ஊராட்சி நிர்வாகம் வழங்கிய 600 சதுர அடி இடத்தில் 150 சதுர அடியில் மண்டபம் அமைத்துள்ளனர். இதற்கு வர்ணம் பூச செலவுக்காக மேலும் 5 மாதங்கள் கூலிப் பணத்தை சிறுகச் சிறுக சேமித்து, வர்ணம் பூசி முழுமையடையச் செய்துள்ளனர். இதன் திறப்பு விழாவுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரை அழைக்க நேரு இளையோர் மையம் மூலம் திட்டமிட்டுள்ளனர். ஜுன் 26-ம் தேதி திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதுகுறித்து, மன்றத் தலைவர் ஏ. தமிழ்ச்செல்வம் (27) கூறியது:

 எதிர்கால இளைஞர்களுக்கு வழிகாட்டவும், தீய பழக்கங்களை ஒழித்து நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும், சேவை மனப்பான்மையை ஊக்குவிக்கவும், தேசப்பற்றையும், நாட்டுப் பற்றையும் வளர்க்கவுமே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது என்றார் அவர்.

 மன்றச் செயலர் என். சிவலிங்கம் (28) கூறியது: ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற மன்றங்கள் உருவாகி கிராமச் சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்றார் அவர்.

 பாறையூரில் ரூ.4 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி மண்டபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.