/

பல்கலை. அமைக்க இடம் கொடுத்து வாழ்வாதாரத்தைத் தொலைத்த விவசாயக் குடும்பங்கள்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகம் அமைக்க இடம் கொடுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 29 ஆண்டுகளாகத் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கூடுதல் இழப்பீடு

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:35 pm

ஆர். வேல்முருகன்

கோவை: கோவை பாரதியார் பல்கலைக் கழகம் அமைக்க இடம் கொடுத்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 29 ஆண்டுகளாகத் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கூடுதல் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்று வரை அது செயல்படுத்தப்படவில்லை.

கோவை மருதமலை அருகே பாரதியார் பல்கலைக் கழகம் அமைக்க, அப்போதைய அதிமுக அரசு கடந்த 1983-ல் உத்தரவிட்டது.

இதற்காக வடவள்ளி, சோமையம்பாளையம், கல்வீரம்பாளையம், பொம்மனம்பாளையம், சுல்தானிபுரம், நவாவூர் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 1100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலத்தின் அப்போதைய மார்க்கெட் மதிப்பு ஏக்கர் ரூ.3 லட்சம். ஆனால் அப்போதைய அரசு வழிகாட்டி மதிப்புப்படி ஏக்கருக்கு ரூ.5000 வீதம் மட்டுமே வழங்கப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்புத் தர அரசு உத்தரவிட்டது. ஆனால் விவசாயிகளின் வாரிசுகள் அதிகமாகப் படிக்காததால் பல்கலைக் கழகத்தில் சாதாரண வேலைகள் ஒருசிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்டன. இந்த வகையிலும் விவசாயிகளுக்குப் பலனில்லாமல் போனது.

கூடுதல் இழப்பீடு கோரி, நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றனர். இவ்வழக்கை விசாரித்த கோவை முதலாவது சார்பு நீதிமன்றம், கடந்த 2007-ல் ஏக்கருக்கு கூடுதலாக ரூ.2600, 30 சதவீத போனஸ், கையகப்படுத்திய தேதி முதல் 12 சதவீத இழப்பீடு, 15 சதவீத வட்டி சேர்த்து நில உரிமையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போதைய அரசு வழக்குத் தொடர்ந்தது. கோவை நீதிமன்றத் தீர்ப்பின்படி, விவசாயிகளுக்கு வர வேண்டிய தொகை சுமார் ரூ.160 கோடி.

இத்தொகை உரிய காலத்தில் கிடைக்காததால் சுமார் 25 குடும்பங்களில் நடக்க வேண்டிய திருமணங்கள் நடக்கவில்லை. மேலும் 100 குடும்பங்களில் உள்ளவர்களின் மேற்கல்வி கடும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது.

கிடைத்த தொகை ரூ.5000-ஐ பிரித்துக் கொண்டதால் பல குடும்பங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்து விலகித் தனிக் குடும்பங்களாகப் பிரிந்துவிட்டன.

இவ்வாறாக பல குடும்பங்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரமான விவசாயத்தையும் ஆடு, மாடு மேய்ப்பையும் தொலைத்து, அரசிடமிருந்து தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க, கையகப்படுத்திய 1100 ஏக்கரில் 100 ஏக்கரை மட்டும் பாரதியார் பல்கலைக் கழகம் பயன்படுத்தியுள்ளது. மீதியுள்ள 1000 ஏக்கர் நிலத்தில் எவ்விதப் பணிகளும் நடக்காமல் உள்ளன.

இந்த நிலையில் கோவை அண்ணா பல்கலைக் கழகத்துக்காக பாரதியார் பல்கலைக்கழக நிலத்தில் 100 ஏக்கர் கொடுக்க கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டது.

இதற்காக அரசு ஆணை வெளியிட்டும் ஆட்சி மாற்றம் காரணமாக கோவை அண்ணா பல்கலைக் கழகம் செயல்படுவதே கேள்விக்குறியாகியுள்ளது. சுமார் 200 ஏக்கர் நிலத்தை வெளியாள்களுக்கு விற்றாலும் விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியும்.

இது தொடர்பாக பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் கூறியது: நிலத்தை அரசு கையகப்படுத்தித் தந்தது. பல்கலைக் கழகம் நடத்தப்படுகிறது. பல்கலைக் கழக நிதியில் இருந்து விவசாயிகளுக்குத் தொகை தர முடியாது. அரசுதான் தர வேண்டும் என்றார்.

இது தொடர்பாக கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் தலைமையிலான விவசாயிகள் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜி.கே. நாகராஜன் கூறியது: தேவையான அளவுக்கு மட்டும் நிலத்தைக் கையகப்படுத்தியிருந்தால் பிரச்னையில்லை. தேவைக்கு மிக அதிகமாக நிலத்தைக் கையகப்படுத்தியதால் அதிக விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரசு உடனடியாக நிலங்களுக்கு உண்டான இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும். இல்லாவிட்டால் கையகப்படுத்திய நிலத்தைத் திரும்பத் தர வேண்டும் என்றார்.

பல லட்சம் பேருக்குக் கல்வியளிப்பதற்காகத் துவங்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் சில நூறு பேரின் கல்வி உள்ளிட்ட உரிமைகள் பறி போயுள்ளன. தங்களுக்கும் எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையோடு கடந்த 29 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையை வீணாக்காமல் அரசு உடனடியாக இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.