வறட்சியின் பிடியில் சேலம் மாவட்டம்
சேலம், ஜூலை 15: பருவமழை தாமதமாவதால் சேலம் மாவட்டத்தில் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. இதனால், பயிர்கள் கருகி வருகின்றன. மழை மறைவு பிரதேசமான தமிழகம், வடகிழக்கு பருவக் காற்றின் மூலமே அதிக மழையை


சேலம், ஜூலை 15: பருவமழை தாமதமாவதால் சேலம் மாவட்டத்தில் ஏரி, கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. இதனால், பயிர்கள் கருகி வருகின்றன.
மழை மறைவு பிரதேசமான தமிழகம், வடகிழக்கு பருவக் காற்றின் மூலமே அதிக மழையைப் பெறுகிறது. ஆனால், சேலம் மாவட்டம் இதற்கு விதிவிலக்காக தென் மேற்கு பருவக் காற்றின் மூலமாகவே அதிகளவில் மழையைப் பெறுகிறது.
சேலம் மாவட்டம் தென் மேற்கு பருவக் காற்றின் போது, சராசரியாக 380 மில்லி மீட்டர் மழையையும், வட கிழக்கு பருவக் காற்றின் போது 347 மில்லி மீட்டர் மழையையும் பெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் சராசரியாக 34 ஆயிரம் ஹெக்டேரில் நெல்லும், 24 ஆயிரம் ஹெக்டேரில் சோளம், 21 ஆயிரம் ஹெக்டேரில் நிலக்கடலை, 20 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம், 13 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறிகள், 12 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பும் பயிரிடப்படுகின்றன.
இந்த நிலங்கள் யாவும் மேட்டூர் ஸ்டான்லி, ஆனைமடுவு, கரியகோயில் நீர்த்தேக்கங்களாலும், மாவட்டம் முழுவதும் உள்ள 89 பெரிய ஏரிகள், 457 சிறிய ஏரிகளாலும், சுமார் 1.22 லட்சம் கிணறுகள், 10,260 ஆழ்துளை கிணறுகளாலும் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிகளில் பெரும்பாலான ஏரிகளுக்கு பாசன வாய்க்கால் கிடையாது.
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வட கிழக்கு பருவமழையே அடுத்த ஆண்டின் கோடை வரையிலும் பாசனத்துக்கும் குடிப்பதற்கும் நீரை வழங்கும். கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை சேலத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் பெய்த போதிலும் முறையாக நீரை சேமித்து வைக்க முடியாமல் போனதாலும் 2012-ல் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஆனைமடுவு, கரியகோயில் நீர்த்தேக்கங்கள் வறண்டு போய்விட்டன. அதைப் போலவே கிணறுகள், ஆழ்துளை கிணறுகளின் ஆதாரமான ஏரிகளும் வறண்டுபோயுள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஜூலை முதல் வார நிலவரப்படி பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 107 ஏரிகளில் வெறும் 4 ஏரிகளில் மட்டும் 20 சதம் தண்ணீர் உள்ளது.
ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் முன்பே விவசாயக் கிணறுகள் வறண்டுவிட்டன. ஆழ்துளை கிணறுகள் மூலம் நீரை உறிஞ்சி கிணறுகளில் விட்டு அதன் மூலமே இப்போது கடைசி கட்டத்தில் உள்ள பயிர்களுக்கு உயிரூட்டப்படுகிறது. அதுவும் இன்னும் 30 நாள்களுக்கு மட்டும்தான் தாங்கும். அதன் பிறகு குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும் என்கிறார் அபிநவம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன். தலைவாசல், வாழப்பாடி பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதாகவும் தண்ணீர் இல்லாததால் வெள்ளாறு வறண்டு அதன் படுகைகளில் உள்ள கரும்பு, பாக்குத் தோட்டங்கள் கருகும் நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் வையாபுரி.
ஓமலூர், மேச்சேரி, எடப்பாடி பகுதிகளில் எந்தப் பயிருமே செய்ய முடியாத அளவுக்கு இதைவிட மோசமான நிலை நிலவுகிறது என்றார் அவர்.
சேலத்தில் தென் மேற்கு பருவக் காற்றால் ஜூன், ஜூலை மாதங்களில் 187 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வெறும் 68 மில்லி மீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது. ஜூன் 29-ம் தேதி பெய்த 16 மில்லி மீட்டர் மழையே இந்த பருவத்தில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76 அடிக்கு இறங்கியிருக்கும் நிலையில் பருவமழை மேலும் தாமதம் அடையும் நேரத்தில் சேலம் மாவட்டத்தின் குடிநீர்த் தேவையை மட்டுமாவது இதனால் நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் பருவமழை பொழியாவிட்டால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். இதனால், சேலம் வறட்சி மாவட்டமாவதுடன், அடுத்த ஆண்டில் உணவுக்கும் பற்றாக்குறை ஏற்படும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...