எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கண்காணிக்கப்படுவார்களா கல்லூரி மாணவர்கள்?

சென்னை, பிப். 29: தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சமூக விரோதச் செயல்களிலும், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுவது கடந்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:22 pm

கே.வாசுதேவன்

சென்னை, பிப். 29: தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சமூக விரோதச் செயல்களிலும், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் சென்னை தாம்பரம் அருகே வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டது பலரை அதிர்ச்சியடைச் செய்தது. அதேவேளையில் நுகர்வு கலாசாரத்தினால் எதையும் உடனடியாக பெறத் துடிக்கும் மாணவர்கள், திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது.

 தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருவதற்கு அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களும், தடை செய்யப்பட்ட அமைப்புகளும் கல்லூரி மாணவர்களை குறி வைத்தே இயங்குகின்றன.

 இதன் காரணமாக கல்லூரி மாணவர்களை மூளைச் சலவை செய்து தங்கள் அமைப்புகளில் சேர்ப்பதில் பல்வேறு தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக அந்த அமைப்பினர் மறைமுகமாக களப்பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

 மாணவர்களின் மனதில் விஷவிதையை விதைப்பதின் மூலம், அவர்கள் தங்களது இயக்கத்துக்கு காலம் முழுவதும் விசுவாசமாகவும், அடிமையாகவும் இருப்பார்கள் என தடை செய்யப்பட்ட இயக்கங்கள் நினைக்கின்றன என கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 வளாகத்துக்குள் சமூகவிரோதச் செயல்கள்:

 அதேபோல மற்ற வயதினரை கவருவது கஷ்டமான காரியமாகிவிட்ட நிலையில், கல்லூரி களத்தில் அந்த இயக்கங்கள் இயங்குவது எளிதானதாக இருப்பதாக தமிழக உளவுத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். கல்லூரி மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திராவிட இயக்கங்களிலும், திராவிட கட்சிகளிலும் சேருவதற்கு ஆர்வம் காட்டினர். ஆனால் இப்போது அந்த கட்சிகளிலும், இயக்கங்களிலும் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. திராவிட இயக்கங்கள் விட்டுச் சென்ற இடத்தை, தடை செய்யப்பட்ட இயக்கங்களும், தீவிரவாத இயக்கங்களும் அடைவதற்கு முயற்சிப்பதாக உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

 பெரும்பாலான கல்லூரி வளாகங்களில் அன்னியர்கள் உலவுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாத நிலையில், இந்த அமைப்புகள் அங்கு முழு சுதந்திரத்தோடு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இங்கு அந்த இயக்கத்தினர் மாணவர்களோடு, மாணவர்களாக இருக்கின்றனர். கல்லூரி பேராசிரியர்களையும், கல்லூரி நிர்வாகத்தினரையும் தவிர்த்து மற்றவர்கள் அவர்களை பிரித்தறிவது என்பது இயலாத ஒரு விஷயமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 இதையே அந்த இயக்கத்தினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கல்லூரி வளாகங்களுக்குள் வளர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இக்காரணங்களால் இப்போதைக்கு பெரிய அளவுக்கு எந்தப் பிரச்னைகளும் ஏற்படாவிட்டாலும், எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

 இதில் தாம்பரத்தில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட பின்னர், மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்களை உளவுப்பிரிவு போலீஸôர் கண்காணிக்க முடிவு எடுத்தனர்.

 ஆனால் எந்தப் பகுதியிலும் கல்லூரி மாணவர்களை உளவுப்பிரிவு போலீஸôர் கண்காணித்ததாகத் தெரியவில்லை. அதற்கான நடவடிக்கையையம் எடுக்கவில்லை என கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எதிர்காலம் கருதியும், நாட்டின் நலன் கருதியும் இனியாவது காவல்துறை இவ் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.