திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தயாராகாத தீயணைப்புத் துறை...

சென்னை, பிப். 3: தமிழக தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணித் துறையில் நவீன கருவிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளின் காரணமாக அத்துறை எந்த விபத்தையும் முழுமையாக எதிர்கொள்ள ம

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:04 pm

கே.வாசுதேவன்

சென்னை, பிப். 3: தமிழக தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணித் துறையில் நவீன கருவிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளின் காரணமாக அத்துறை எந்த விபத்தையும் முழுமையாக எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால், விபத்தின்போது பிறரின் உயிரைக் காப்பாற்ற முயலும் தீயணைப்பு வீரர்களின் உயிர்களும் பறிபோகின்றன.

பின்பற்றப்படாத விதிகள்

தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்படும் சம்பவ இடத்தை 10 நிமிஷத்துக்குள் அடையும் வகையில் நகர்புறங்களில் 2.5 சதுர கிலோ மீட்டருக்கும், ஊரகப் பகுதிகளில் 20 சதுர கிலோ மீட்டருக்கும் தீயணைப்பு நிலையங்கள் இருக்க வேண்டும் என அரசின் விதிமுறை கூறுகிறது.

ஆனால் மாநிலத்தில் எந்தப் பகுதியிலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் தீயணைப்பு வாகனங்கள் தாமதமாக வருவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

ஊரகப் பகுதிகளில் 50 சதவீத விபத்துகளுக்குத் தீயணைப்பு படை வீரர்கள் தாமதமாகச் செல்வதே காரணம் என அத்துறையைச் சேர்ந்தவர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.

7.21 கோடி மக்கள் தொகையுள்ள மாநிலத்தில் 6398 தீயணைப்பு வீரர்களே இருக்கின்றனர். இந்தக் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட வீரர்களால் ஆபத்துக் காலத்தில் எவ்வாறு மக்களுக்கு உதவ முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.

இது போன்ற காரணங்களால்தான் கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை ஆபத்தில் சிக்கும் மக்களை முழுமையாக காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

போதிய பயிற்சி இல்லை

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏற்பட்ட தீ விபத்துகளுக்கும், இப்போது ஏற்படுகின்ற தீ விபத்துகளுக்கும் பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை வீடுகள், கடைகள் ஆகியவற்றிலேயே அதிகமாக தீ விபத்துகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது மின்கசிவு, எரிவாயு, வேதிப் பொருள்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன.

இந்த வகை விபத்துகள் மொத்த தீ விபத்துகளில் 80 சதவீத இடத்தைப் பிடித்திருப்பதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த வகை தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கோ,  அணைப்பதற்கோ எந்த சிறப்பு பயிற்சியும் தீயணைப்பு படை வீரர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

பணியில் சேரும்போது சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட பயிற்சியே இன்னும் அளிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கு இணையாக தண்ணீரிலும் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் இங்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்கு நீச்சல்குளம் கிடையாது. பெயரளவுக்கு அளிக்கப்படும் பயிற்சியால் தீயணைப்பு படை வீரர்கள் எந்த விபத்தையும் எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமலேயே இருக்கின்றனர்.

வெளிநாடுகளில் எப்படி?

வெளிநாடுகளைப் பொருத்தவரை, ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்படும்போது, அங்குள்ள காற்றின் ஈரப் பதம், காற்றின் வேகம், நெருப்பின் தன்மை ஆகியவற்றை ஒரு சில நிமிஷங்களிலே கணக்கிட்டு தீ அணைக்கப்படுகிறது.

ஆனால் இந்த தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில் நமது தீயணைப்புத் துறை சுமார் 35 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.

வெளிநாடுகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், அப்பகுதிகளில் உள்ள கட்டடங்களின் வரைப்படங்கள் அனைத்தும் உள்ளன.  இதன் காரணமாக எந்தவொரு கட்டடத்தில் விபத்து ஏற்பட்டாலும்,  தீயணைப்புத் துறை முழுமையான திட்டத்துடன் மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக பல உயிர்கள் காக்கப்படுவதோடு,  பெரும் பொருட்சேதமும் தவிர்க்கப்படுகிறது.

கருவிகளும் தட்டுப்பாடு...

இதைத் தவிர, மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு 30 சதவீத கருவிகளே நம் தீயணைப்புத் துறையினரிடம் உள்ளன. சுவாசக் கருவிகள் 20-ல் 3 பேருக்குத்தான் உள்ளது. இதன் விளைவாக தீயணைப்பு வீரர்கள் தங்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே பிறரின் உயிரைக் காக்க போராட வேண்டிய நிலைக்கு உள்ளாகின்றனர்.

தீயணைப்புத் துறை பயன்படுத்தும் வாகனங்களை 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என விதிமுறை உள்ளது.

ஆனால் தீயணைப்புத் துறை பயன்படுத்தும் வாகனங்களில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை என பெருநகரங்களைத் தவிர்த்து, பெரும்பாலான இடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலான, காலாவதியான வாகனங்களே இருக்கின்றன. இந்த வாகனங்களோடு தீயணைப்பு வீரர்களே தினமும் போராடுமளவுக்கு,  அதன் பராமரிப்பும் கட்டுப்பாடும் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய தீ விபத்துகள் அதிகமாக இருந்தன. இப்போது சிறிய அளவிலான தீ விபத்துகளே அதிகமாக இருக்கின்றன. ஆனால் இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான வாகனங்கள் இன்னும் வாங்கப்படவில்லை.

இப்போது 5 ஆயிரம் லிட்டரில் இருந்து 9 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீரை எடுத்துச் செல்லும் வகையிலான வாகனங்களே உள்ளன.

ஆனால் சிறு தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு 3 ஆயிரம் லிட்டருக்கு குறைவான தண்ணீரை எடுத்துச் செல்லும் வாகனங்கள் போதுமானதாகும்.

ஆனால் இந்த வாகனங்களை வாங்குவதற்கு அத்துறை ஏனோ தாமதம் செய்து வருகிறது.  இதன் காரணமாக சிறு தீ விபத்து ஏற்பட்டால் கூட, பெரிய வாகனங்களை அனுப்ப வேண்டியுள்ளது. மேலும் அந்த வாகனங்களால் நெருக்கடியான பகுதிக்குள் செல்ல முடியாத நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுவதாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

பதவி உயர்வை

விரும்பாத அதிகாரிகள்

தீயணைப்புத் துறையில் நீடிக்கும் ஊதிய முரண்பாட்டின் காரணமாக, தீயணைப்பு வீரர்களாகப் பணியில் சேருபவர்கள் டிரைவர்களாகப் பதவி உயர விரும்புவதில்லை.  

இத்துறையில் இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இதே போல கடந்த 2 ஆண்டுகளாக தீயணைப்பு படை வீரர்கள் சீருடைகள் கூட வழங்கப்படாமல் இருக்கிறது. மேலும் மிகவும் தரம் குறைந்த காலணிகளை (ஷூ) வழங்குவதால், மீட்புப் பணியின்போது அவை பயன்படுத்தப்பட முடியாத நிலை உள்ளது.

தீயணைப்புத் துறை தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து பலப்படுத்துவதோடு, அதற்குத் தேவையான நவீன உபகரணங்களையும் வாங்க வேண்டும்.

 தீயணைப்பு படை வீரர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி, அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு மட்டுமன்றி மாறி வரும் விபத்துக்களின் தன்மைக்கு ஏற்றாற்போல அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.

அப்போதுதான் தீயணைப்புத் துறை எத்தகைய விபத்தையும் முழு அளவில் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.

இல்லையெனில், தீ விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளும் பொருள் சேதங்களும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

கடந்தாண்டு ரூ. 26 கோடி சேதம்

கடந்தாண்டு மாநிலம் முழுவதும் ஏற்பட்ட தீ விபத்துகளில் 75 பேர் இறந்துள்ளனர். சுமார் 2,701 பேர் தீயணைப்புத் துறையால் காப்பாற்றப்பட்டுள்ளனர். தீ விபத்துகளில் சுமார் ரூ. 26 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளன. ரூ. 358 கோடி மதிப்பிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. சுமார் 20,149 அழைப்புகள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன. 2010 ஆண்டை ஒப்பிடும்போது 2011-ம் ஆண்டு 32 சதவீதம் தீ விபத்துகள் அதிகரித்துள்ளதாக தீயணைப்புத் துறை புள்ளிவிவரம் கூறுகிறது.

  மாநிலம் முழுவதும் உள்ள 302 தீயணைப்பு நிலையங்களில் 300 அதிகாரிகள் உள்பட  சுமார் 6698 பேர் பணிபுரிகின்றனர். இதில் 6398 பேர் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு முன்னணி வீரர்கள், டிரைவர்கள் ஆவார்கள். ஆண்டுக்கு 6 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சிறிய அளவிலான தீ விபத்துகள் 7 சதவீதம் அதிகரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.