டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மக்கள் குறை தீர்க்கும் நாள்: நிலுவையில் 5 ஆயிரம் மனுக்கள்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 5 ஆயிரம் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:02 pm

கே.வாசுதேவன்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 5 ஆயிரம் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது பாதிக்கப்பட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது சில அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் நண்பகல் 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து காவல் ஆணையர் அல்லது கூடுதல் ஆணையர் நேரடியாக மனுக்களை பெற்று, அவர்களது பிரச்னைகள் குறித்து கேட்டனர். ஆனால் இப்போது மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர்தான் மனுக்கள் வாங்குகிறார்.

இந் நிகழ்ச்சியில் அதிகாரிகளே நேரில் வந்து மனுக்களை பெற்று, பிரச்னைகளை கேட்பதால் மக்கள் இதில் மனு கொடுக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையர் அறிவுறுத்துவதால் இந்த நாளில் மனு கொடுத்தால் தங்களது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். இதனால் இக் கூட்டத்தில் மனு அளிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு 100 முதல் 200 மனுக்கள் பெறப்படுகின்றன.

கடந்த ஆண்டு சுமார் 11,700 மனுக்கள் இக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இந்தாண்டு இதுவரை சுமார் 16 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் இது 17 ஆயிரத்தை தொட்டுவிடும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

5 ஆயிரம் மனுக்கள் நிலுவை: 16 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் சுமார் 5000 மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல் நிலையங்களிலும், அதிகாரிகளின் அறைகளிலும் தேங்கிக் கிடக்கின்றன. பெருநகர காவல்துறையில் அதிகபட்சமாக மத்திய குற்றப்பிரிவில் 3 ஆயிரம் மனுக்களும், நான்கு மண்டலங்களில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 1,400 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 900 மனுக்களும் நிலுவையில் உள்ளன. குறைந்தபட்சமாக வடக்கு மண்டலத்தில் 143 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 590 மனுக்களும் நிலுவையில் உள்ளன. 12 காவல் மாவட்டங்களில், அதிகபட்சமாக தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் மட்டும் 729 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதே மனுக்கள் தேங்குவதற்கான காரணமாக சில காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு வரை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மனுக்கள் தேங்குவது தடுக்கப்பட்டது. சில அதிகாரிகள் மக்கள் கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் திருட்டு, வழிப்பறி, மோசடி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மனுக்கள் கொடுத்துவிட்டு காத்திருக்கும் மக்கள், மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றனர். அதேவேளையில் புகாரில் தொடர்புடைய எதிரிகள் எந்தவித சிரமமும் இன்றி தப்பிச் செல்வதாக மனு கொடுத்து நடவடிக்கைக்காக காத்திருக்கும் வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார்.

பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ், மனுக்கள் தேங்காமல் இருப்பதற்கு அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க கண்டிப்புடன் கூறப்பட்டதாம்.

இதன் பின்னர் சில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இரு காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மெமோவும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இதன் பின்னராவது காவல்துறை அதிகாரிகள், புகார் கொடுக்கும் மக்களின் உணர்வையும், வேதனையும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.