காவிரியில் நீரோட்டத்தைத் தடுக்கும் செயற்கை மண் மேடுகள்
காவிரியில் மணல் குவாரிகளுக்காக அமைக்கப்பட்ட செயற்கை மண் மேடுகளை அகற்றினால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து


காவிரியில் மணல் குவாரிகளுக்காக அமைக்கப்பட்ட செயற்கை மண் மேடுகளை அகற்றினால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து தற்போது பாசனத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் டெல்டா மாவட்டங்களைச் சென்று சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நிகழாண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், குறுவை முற்றிலும் பாதிக்கப்பட்டு, சம்பாவும் பொய்த்துப் போகும் நிலை உள்ளது. வடகிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்தபடி கைகொடுக்கவில்லை. கர்நாடகத்தின் தொடர் பிடிவாதத்தால் லட்சணக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் கருகியுள்ளன.
தமிழக அரசின் தொடர் முயற்சி, உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு கட்ட விசாரணைக்குப் பின்னர் கர்நாடகம், தமிழகத்துக்கு 10,000 கன அடி நீரை ஒரு நாள் தாமதமாக டிச. 6-ம் தேதி திறந்துவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்து திங்கள்கிழமை (டிச. 10) வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்துள்ளது.
கிருஷ்ணாராஜசாகர் அணையிலிருந்து திறந்தவிடப்பட்ட நீர் சனிக்கிழமை மாலை தமிழகத்துக்கு வந்துள்ளது. வழக்கமாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 15,000 கன அடி தண்ணீரை திறந்தால் மட்டுமே காவிரியில் மேடு பள்ளங்களையெல்லாம் நிரப்பி டெல்டா மாவட்ட கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரும். கடந்த 15 ஆண்டுகளாக காவிரியில் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பல அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டு காவிரி பள்ளமாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் வினாடிக்கு 10,000 கன அடி அல்லது அதற்கும் குறைவான அளவில் நீர் திறந்துவிட்டால் டெல்டாவை சென்றடைவதில் சிக்கல் ஏற்படும்.
காவிரிக்குள் லாரிகள் செல்ல 10 முதல் 15 அடி வரை உயரத்துக்கு கற்கல், மண், மணல் மற்றும் கரும்புத்தோகைக் கொண்டு மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர மணல் அள்ளுவதற்கு வசதியாக தண்ணீர் செல்லும் வழிகளும் திருப்பிவிடப்பட்டுள்ளன.
அகண்ட காவிரி என்று சொல்லக்கூடிய திருச்சி மாவட்டப் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்ட திருஈங்கோய்மலை, முசிறி ஆகிய மணல் குவாரிகளில் காவிரிக்குள் பாதைகள் அமைக்கப்பட்டு மணல் லாரிகள் சென்றன. 5 ஆண்டுகளுக்குமேல் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்றும், மணல் எடுத்துச்செல்லப் அமைக்கப்பட்ட மேடுகளை குவாரி உரிமையாளர்களே அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மணல் குவாரிகள் மூடப்பட்டன, ஆனால் மண் மேடுகள் இன்று வரை அகற்றப்படவில்லை. திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் இதுபோன்ற மண் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாமல் ஏற்கெனவே சம்பா பயிர்கள் காய்ந்து கருகி, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பல்வேறு முயற்சிகளுக்கிடையில் கர்நாடகத்திடமிருந்து பெற்ற நீரை முழுமையாக பாசனத்துக்கு பயன்படுத்தி, மீதம் இருக்கும் பயிர்களை காப்பாற்ற வேண்டுமெனில் காவிரிக்குள் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளை அகற்ற வேண்டும். காவிரி நீர் டெல்டாவின் கடைமடை பகுதி வரை செல்ல நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே நீருக்காக தமிழக அரசு போராடியதன் நோக்கம் நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...