/

பாரம்பரிய கிரைண்டர் தயாரிப்பு குறைவு; விலை உயர்வு

கோவை: மாநில அரசே டேபிள் டாப் கிரைண்டர்களை இலவசமாகத் தருவதால் பாரம்பரிய கிரைண்டர்கள் தயாரிப்பு கோவையில் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அவற்றின் விலையும் கடந்த ஓராண்டில் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ள

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:58 pm

ஆர். வேல்முருகன்

கோவை: மாநில அரசே டேபிள் டாப் கிரைண்டர்களை இலவசமாகத் தருவதால் பாரம்பரிய கிரைண்டர்கள் தயாரிப்பு கோவையில் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் அவற்றின் விலையும் கடந்த ஓராண்டில் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது.

 கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது அதிமுகவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி ஆகியவை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

 கிரைண்டர்கள் தயாரிப்பில் கோவை முன்னணியில் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக இங்குள்ள பல நிறுவனங்கள் கிரைண்டர்கள் தயாரிக்கின்றன. இங்குள்ள சுமார் 400 நிறுவனங்களில் கிரைண்டர்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

 இந்த நிலையில் அரசு கடந்த ஆண்டு 25 லட்சம் டேபிள் டாப் கிரைண்டர்களைக் கொள்முதல் செய்தது. இதில் சுமார் 18 லட்சம் கிரைண்டர்கள் கோவையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே மின் வெட்டு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த கிரைண்டர் தயாரிப்பாளர்களுக்கு, அரசின் டேபிள் டாப் கிரைண்டர் ஆர்டரைச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

 இதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்த தொழிலாளர்களால் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். வெளி மாநிலத் தொழிலாளர்களால் உற்பத்தித் திறன் அதிகரித்தது.

 கிரைண்டர் கல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. பாரம்பரிய கிரைண்டருக்குத் தேவைப்படும் ஒரு கல், 10 டேபிள் டாப் கிரைண்டருக்குப் பயன்பட்டது. இதனால் கல் ஒரு பிரச்னையாகப்படவில்லை. ஆர்டரும் அதிகமாக இருப்பதால் தொழிலாளர்களும் உற்சாகமாகப் பணியாற்றுகின்றனர்.

 ஆர்டர்கள் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு இருக்குமென்பதால் இப்போது கோவையில் உள்ள பெரும்பாலான கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் நவீனமயமாகியுள்ளன. கல் வெட்ட, வெல்டிங் வைக்க என இப்போது நவீனப்படுத்துவது துவங்கியுள்ளதால் உற்பத்தித் திறனும் அதிகரித்து வருகிறது.

 இந்த நிலையில் பாரம்பரிய கிரைண்டர்கள் தயாரிப்பது மிகவும் குறைந்துவிட்டது. ஆனாலும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தொடர்ந்து பாரம்பரிய கிரைண்டர்கள் கேட்பதால் சுமார் 50 நிறுவனங்கள் மட்டும் அவற்றைத் தயாரித்து வருகின்றன. கடந்த ஆண்டு ரூ.2300க்கு விற்பனையான பாரம்பரிய கிரைண்டர் இப்போது ரூ.3500 வரை விலை உயர்ந்துவிட்டது. கல் கிடைக்காதது, மின் பற்றாக்குறை, பெரும்பாலானவர்கள் டேபிள் டாப் கிரைண்டர் தயாரிப்புக்கு மாறியது ஆகிய காரணங்களால் விலை அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

 இது தொடர்பாக கோவை மாவட்ட கிரைண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சக்தி கூறியது: கடந்த 60 ஆண்டுகளாக கிரைண்டர் தயாரிப்பில் கோவை முன்னணியில் உள்ளது. நாடு முழுவதும் கிரைண்டர்கள் அனுப்பப்பட்டாலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரசின் ஆர்டர்கள் கிடைத்ததால் பல தொழில் கூடங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

 பாரம்பரிய கிரைண்டர்கள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டாலும் கோவை தயாரிப்பின் தரமே தனி. வரும் ஆண்டில் அரசு ஆர்டர் கிடைத்தால் ஒருசில நிறுவனங்களைத் தவிர பிற நிறுவனங்கள் அனைத்துமே டேபிள் டாப் கிரைண்டர்களை மட்டும் தயாரிக்கும். அவ்வாறு தயாரிக்கும்போது குறிப்பிட்ட கால அளவுக்கு முன்பாகவே அனைத்துக் கிரைண்டர்களும் தயாரிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.