அரசு கேபிள் டி.வி. கட்டணம் முறைப்படுத்தப்படுமா?
பெரம்பலூர்: தமிழக அரசின் கேபிள் டிவி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், மாதத்துக்கு ரூ. 70 கட்டணத்தில் கேபிள் இண


பெரம்பலூர்: தமிழக அரசின் கேபிள் டிவி கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில், மாதத்துக்கு ரூ. 70 கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் இணைப்புகளில் தரமில்லை, போதிய சேனல்கள் தெரியவில்லை என்ற குறைபாடுகள் இருந்தாலும், தனி நபர்களின் கட்டணக் கொள்ளைக்கு நிரந்தத் தீர்வு காணப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த காலங்களில் செயல்பட்ட சிறு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடமிருந்து கேபிள் இணைப்புகளைப் பெற்றவர்களே, தற்போது அரசு கேபிள் டிவியை மறைமுகமாகக் கைப்பற்றியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதனால், உள்ளூர் கேபிள் சேனல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, மீண்டும் உள்ளூர் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், குறைந்த கட்டணத்தில் அனைத்துச் சேனல்களும் தமிழக அரசின் கேபிள் டிவி சார்பில் ஒளிப்பரப்பபடும் என அரசு அறிவித்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அவரவர் விருப்பம் போல, மாதக் கட்டணம் ரூ. 70-க்கு பதிலாக ரூ. 100 முதல் ரூ. 150 வரை இணைப்பு தாரர்களிடம் வசூல் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட மூன்று தனியார் சேனல்கள் இல்லாமல் கொடுக்கப்படும் இணைப்புகளுக்கு மட்டும் ரூ. 70 வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வசூலிக்கும் கட்டணத் தொகை மாறுபடுகிறதே தவிர, எந்த ஒரு பகுதியிலும் முழுமையாக அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.
இதனால், பொதுமக்களுக்கும், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு வருகிறது. கேபிள் டிவிக்கான மாதக் கட்டணம் வசூலிப்பின் போது, பெரம்பலூரில் ஏற்பட்ட தகராறில் கேபிள் டிவி ஊழியர்கள், வழக்குரைஞரைத் தாக்கினர்.
இதனால், ஆத்திரமடைந்த மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர், உண்ணாவிரதம், நீதிமன்றப் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல, பல்வேறு இடங்களில் தொடர்ந்து பிரச்னை நிகழ்ந்து வருகிறது.
இதுகுறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியது:
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ஏற்புடையதாக இல்லை. இதன் காரணமாகவே குறிப்பிட்ட மூன்று தனியார் சேனல்கள் டிஷ் டிவி மூலம் அரசு கேபிள் டிவியில் ஒளிப்பரப்பப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ. 30 வசூலிக்கிறோம். அதேபோல, சென்னையில் இருந்து வரும் பிரதான இணைப்பும் தரமானதாக இல்லை. இதனால், அனைத்து இணைப்புகளிலும் நிகழ்ச்சிகள் சரியாகத் தெரிவதில்லை என்று அவர்கள் கூறினர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் கூறியது:
அரசு அறிவித்த தொகையைவிட, பொதுமக்களைக் கட்டாயப்படுத்தி கூடுதலாக ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. பெறப்படும் தொகைக்கு ரசீதும் வழங்குவதில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு நிர்ணயம் செய்த தொகையை மட்டுமே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்க வேண்டும். பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, தற்போது புதிதாகத் தொடங்கியுள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் மீண்டும் செய்தி ஒளிபரப்புவதற்கான அனுமதி கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பலர் விண்ணப்பங்கள் அளித்துள்ளதாகத் தெரிகிறது. உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஒளிபரப்ப அனுமதிக்கும் பட்சத்தில், சிறு பிரச்னைகளும் பெரிதாக்கப்படும். அத்துடன், செய்தி ஒளிபரப்புவதாகக் கூறி, பணம் பறிக்கும் செயல்களும், அத்துமீறல்களும் அதிகரிக்கும்.
எனவே, உள்ளூர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான வறைமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.
அதேபோல, அரசு நிர்ணயித்த தொகையான ரூ. 70-க்கு மேல் சந்தாதாரர்களிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் நபர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே அரசு கேபிள் டி.வி பொதுமக்களிடையே நிரந்தர வரவேற்பைப் பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...