/

திமுகவைச் சூழ்ந்திருக்கும் சந்தேக மேகம்!

திருநெல்வேலி, மார்ச் 2: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போதுள்ள 6 திமுக எம்.எல்.ஏ.க்களும், நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  இவர்களில

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:41 pm

ப. இசக்கி

திருநெல்வேலி, மார்ச் 2: திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போதுள்ள 6 திமுக எம்.எல்.ஏ.க்களும், நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 இவர்களில் யாருக்கெல்லாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கான காரணங்களையும், யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்காது என்பதற்கான காரணங்களையும் கட்சியினர் அலசத் தொடங்கியுள்ளனர்.

 இம் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இப்போது அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, ராதாபுரம், திருநெல்வேலி ஆகிய 6 தொகுதிகள் திமுக வசமும், நான்குனேரி, கடையநல்லூர் ஆகிய இரண்டும் காங்கிரஸ் வசமும், சங்கரன்கோவில் அதிமுக வசமும், வாசுதேவநல்லூர் மதிமுக வசமும் உள்ளன. தொகுதி மறுசீரமைப்பையடுத்து, முன்பு காங்கிரஸ் வசம் இருந்து வந்த சேரன்மகாதேவி தொகுதி இப்போது இல்லை.

 தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில், சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் (அம்பாசமுத்திரம் தொகுதி), மற்றும் இரண்டு அமைச்சர்கள் - டி.பி.எம். மைதீன்கான் (பாளையங்கோட்டை), பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்) ஆகியோர் இம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்களுக்கு இணையாக துணை முதல்வர் ஸ்டாலின் ஆதரவாளர்களில் முக்கியமானவரான மாவட்ட செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் (தென்காசி), திமுக தென் மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான அழகிரியின் ஆதரவாளரான என். மாலைராஜா (திருநெல்வேலி), இவர்களுடன் அதிகார மையங்களில் ஒன்றின் ஆதரவு பெற்ற மு. அப்பாவு (ராதாபுரம்) ஆகியோர் இப்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

 இந்த 6 பேருமே நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார்கள் என்பதுதான் பரவலான எதிர்பார்ப்பு.   சட்டப் பேரவைத் தலைவர் ஆவுடையப்பனுக்கும், மாவட்டச் செயலர் கருப்பசாமி பாண்டியனுக்கும் மீண்டும் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறும் கட்சியினர், அவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாவிட்டால்கூட மற்றொருவருக்கு கொடுக்கப்பட மாட்டாது என்கின்றனர்.

 இதனிடையே, "கானா'வுக்கு (கருப்பசாமி பாண்டியன்) இந்த முறை சீட் கிடையாது' என அவரது எதிர்க் கோஷ்டியினர் கடந்த 6 மாத காலமாக ஒரு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அது உண்மையாக இருந்தால் அவரது மகன் வி.கே.பி. சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு "கானா' சட்ட மேலவைக்குச் செல்லலாம் என்கின்றனர் கட்சியினர். அது நடந்தால் ஆவுடையப்பனுக்கும் மேலவையாகத்தான் இருக்கும் என்றும், அவருக்குப் பதிலாக அவரது மகன் பிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்கின்றனர் "கானா' ஆதரவாளர்கள்.

பாளையங்கோட்டை தொகுதிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஒருபுறம், இந்த தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுகவினர் வற்புறுத்தி வருகின்றனர். மறுபுறம், முஸ்லிம் லீக் கட்சியினர் இந்த தொகுதியைப் பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர். 2006 தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டு கடைசி நேரத்தில் திமுகவுக்கு மாற்றப்பட்டு மைதீன்கான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 இத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, துணை முதல்வர் ஸ்டாலினோ அல்லது  திமுகவின் மற்ற பெரிய தலைவர்களோ இங்கு போட்டியிடவில்லை என்றால் மைதீன்கானுக்கு "சீட்' உறுதி. மைதீன்கானுக்கு துணை முதல்வரின் ஆதரவு இல்லாவிட்டாலும்கூட முதல்வர் கருணாநிதியின் ஆதரவு உண்டு என்பதால் சிறுபான்மை இனத்தவர் என்ற வகையில் அவருக்கு வாய்ப்பு பிரகாசம் என்கின்றனர் கட்சியினர்.

 அமைச்சர் பூங்கோதைக்கு கட்சியில் உள்ள "செல்வாக்கு' குறித்து, கட்சி மேலிடத்தின் உள்விவகாரங்களை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். கனிமொழி எம்.பி.யின் நம்பிக்கைக்கு பாத்திரமான பூங்கோதை எப்படியாவது மீண்டும் வாய்ப்பைப் பெற்றுவிடுவார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

 ராதாபுரத்தில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ள முன்னாள் காங்கிரஸ்காரரான அப்பாவு,  இந்த முறையும் வாய்ப்பைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். அவருக்கு எதிரிகள் அவரது கட்சியிலேயே அதிகரித்துள்ளனர். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க கூடாது என்பதற்காக கட்சியினர் தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத் தெரிந்து வைத்திருக்கும் அப்பாவு, அதையும் மீறி வாய்ப்பு பெற்றால் அவருக்கு தொகுதி மக்களைவிட கட்சியினரை சமாளிப்பதே பெரிய வேலையாக இருக்கும்.

 காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படுமானால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகமான இடங்களை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்தான் ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நியாயமாகவே இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கும் நெல்லை மாவட்டத்தில் ஒன்றிரண்டு இடங்கள் ஒதுக்கப்படலாம். பாளையங்கோட்டை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

 வெற்றி தோல்வி என்பது  இரண்டாம் பட்சம். மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளதா இல்லையா என்கிற சந்தேக மேகம் திமுக வட்டாரத்தை சூழ்ந்து கொண்டிருப்பதுதான் இப்போதைய நிலைமை. அதனால்தானோ என்னவோ பகுத்தறிவு பேசும் கரை வேஷ்டிகள் ஜோஸ்யர்களைத் தேடியும் மலையாளத்து "பிரஸ்னம்' பார்க்கும் மாந்திரீகர்களைத் தேடியும்  போகத் தொடங்கி இருக்கிறார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.