அடுத்த துணைவேந்தர் யார்?
தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தனித் தன்மையை மீட்டெடுக்க, அரசியல் கலப்பில்லாத ஒருவரை 10-வது துணைவேந்தராக நியமிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே ஏற்பட்டுள்ளது.


தஞ்சாவூர், ஜூன் 28: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தனித் தன்மையை மீட்டெடுக்க, அரசியல் கலப்பில்லாத ஒருவரை 10-வது துணைவேந்தராக நியமிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும், தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ் மொழி.
தமிழ் மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த துறைகளுக்கு வலுவூட்ட ஒரு பல்கலைக்கழகம் அமைவது இன்றியமையாதது என்று அரசு கருதியது. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழ் மாநாட்டின் போது, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தஞ்சாவூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, தஞ்சையில் 15.9.1981 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கியது.
முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் முதல் துணைவேந்தராக 19.9.1981-ல் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டு பணிக்காலத்தை அவர் நிறைவு செய்ததும், மீண்டும் 22.9.1984 முதல் துணைவேந்தராக பணி நீட்டிக்கப்பட்டு, 31.7.1986 வரை அவர் பணிபுரிந்தார்.
முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியம் தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு அனைத்துலக தமிழ் ஆர்வலர்களை ஒருமுகப்படுத்தியது.
அதன்மூலம் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய ஐம்பெரும் கண்டங்களிலிருந்தும் கல்வியாளர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு வந்து, தங்களுடைய ஆய்வுத் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றனர்.
தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியாளர்களும், உலக அரங்கில் மாநாடுகள், கலந்தாய்வுகள், தனிப்பெரும் ஆய்வுகளின் அழைப்பின் பேரிலும், நியமன அடிப்படையிலும் கலந்து கொண்டு தமிழ் மொழி, வரலாறு, பண்பாடு போன்ற பல்துறைப் பெருமைகளை நிலைநிறுத்தி வந்ததுடன், நூல்களாகவும் வெளியிட்டனர்.
இன்றைய சூழலில், 10-வது துணைவேந்தர் பொறுப்பேற்கவுள்ள நிலையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்துக்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேறவில்லை என்பதைவிட நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
ஆசியப் பிராந்தியம் மட்டுமன்றி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க, ஐக்கிய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பல பிரதிநிதிகள் ஆய்வாளர்களாக வந்து போகும் சுற்றுலா மையமாக தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த சில காலமாக இருந்து வருகிறது எனக் கூறப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்நிலை மாறி, வரும் காலத்தில் மொழி குறித்த சிந்தனை, தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு, சமயம் போன்றவற்றை நாம் ஒரு சேர மீட்டாக வேண்டும்.
மனிதவள மேம்பாட்டுத் துறை, இதனை புறந்தள்ளாமல் நிதி ஆதாரங்களைப் பெருக்கித்தர வேண்டும். பழைய குறைபாடுகளைப் போக்கி, புத்துயிர் ஊட்டும் வகையில் உள்கட்டமைப்புகளையும், திறமையான துறைசார் அறிஞர்களையும் நியமிக்க வேண்டும்.
கடந்த கால நியமனங்கள் யாவற்றிலும் திறமைக்கு மதிப்பளிக்காமல், பரிந்துரைகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையும் மாற வேண்டும். அரசியல் குறுக்கீடு இல்லாத, முழுமையான தகுதியுடையவரை, பணியை ஈடுபாட்டுடன் செய்பவரை இனம் கண்டு 10-வது புதிய துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களால் எழுப்பப்படுகிறது.
""கலைப் புலம், சுவடிப் புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப் புலம், அறிவியல் புலம் உள்ளிட்ட 5 புலங்களில் உள்ள 25 துறைகளில் இதுவரை என்னென்ன ஆய்வுகள் நடைபெற்றன, தற்போது என்ன ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, பல்கலைக்கழகம் பொலிவு பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இழந்து போன தனித்தன்மையை மீண்டும் பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிதி ஆதாரத்துடன் புதுமைகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழுக்காக பாடுபட்ட தமிழ்ச் சான்றோர்களின் எண்ணம் நிறைவேறும்'' என்கிறார் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாகப் பணிபுரியும் மூத்த தமிழறிஞர் ஒருவர்.
தகுதிக்கு மரியாதை கிடைக்குமா?
கல்வியின் தரத்தை நிர்ணயிக்கும் துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
தகுதியை நிர்ணயம் செய்யாதது, தேர்வு முறையில் வெளிப்படைத் தன்மை இல்லாதது உள்ளிட்ட காரணங்களாலேயே, துணைவேந்தர் நியமனம் என்பது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி வருகிறது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரியை நிர்வகிப்பது, மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சிப்பது, புதிய படிப்புகளை அறிமுகம் செய்வது, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக திட்டங்களை வகுப்பது, இதற்காக தேவையான நிதியை பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து (யுஜிசி) பெற்று திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதுமட்டும் அல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, அவற்றின் நிலை குறித்து அறிய அவ்வப்போது ஆய்வு செய்வது, ஆராய்ச்சி வளர்ச்சிக்கு திட்டமிடுவது உள்ளிட்ட பணிகளும் அவருக்கு உரியது.
எனவே, துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்படுபவர் கல்வியில் மட்டும் அல்லாமல், நிர்வாகத்திலும், திட்டமிடுதலிலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்தவராகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள்தான் துணைவேந்தர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறிவிட்டது. பணம் என்ற தகுதி மட்டும் இருந்தால் போதும் என்றாகிவிட்டது என்கின்றனர் கல்வியாளர்கள். துணைவேந்தர் பதவிக்கான தகுதி பல லட்சங்களிலிருந்து, பல கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்ற வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.
இதுவரை தகுதி நிர்ணயிக்கப்படவில்லை... தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான தகுதி என்று இதுவரை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இதன் காரணமாக போதிய அனுபவம் இல்லாதவர்கள் கூட துணைவேந்தர்களாகி வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு, கடைநிலை பேராசிரியர்களும், உதவி பேராசிரியர்களும்கூட துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால்தான் பல்கலைக்கழக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இப்போது யுஜிசி துணைவேந்தருக்கான தகுதியை நிர்ணயித்துள்ளது. அதாவது, துணைவேந்தராக நியமிக்கப்படுபவர், பேராசிரியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே, இனியாவது மாநில அரசு துணைவேந்தருக்கான தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயச்சந்திரன் கூறினார்.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியது:
அலுவலக உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட பணியிடங்களுக்குக் கூட பல மணி நேரம் நேர்முகத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், கல்வியின் தரத்தை நிர்ணயிக்கப்போகும் துணைவேந்தரின் தகுதியை சோதித்துப் பார்ப்பதுகூட கிடையாது. தகுதி என்று ஒன்றை நிர்ணயித்துவிட்டால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இது குற்றப் பின்னணி உள்ளவர்களையும் பதவிக்கு வர வைத்துவிடுகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...