தியாகி வைத்தியநாதய்யர் சிலை அருகில் பொது கழிப்பறை: தியாகிகள் குமுறல்
முதல்வர் காட்டும் அக்கறையை அதிகாரிகள் காட்டாதது ஏன் என்றும், பொதுக் கழிப்பறை கட்ட மதுரையில் வேறு எங்குமே இடம் கிடைக்கவில்லையா என்றும் தியாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.


மதுரை, பிப். 3: மதுரையில் தியாகி வைத்தியநாதய்யரின் சிலையை ஒட்டி பொதுக் கழிப்பறையை மாநகராட்சி கட்டிவருவது தியாகிகள், காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகத் திருவுருவாக விளங்கிய வைத்தியநாதய்யருக்கு 1973-ல் மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பூங்காவில் சிலை அமைக்கப்பட்டது. சிலையை அப்போதைய மாநகர் மேயர் எஸ்.முத்து தலைமையில் அப்போதைய தமிழக சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் திறந்துவைத்தார்.
இந்தச் சிலையைப் பராமரிக்க காங்கிரஸ் சார்பிலும் குழுவை நியமித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வைத்தியநாதய்யர் நினைவு தினத்தன்று அவரது சிலை பராமரிப்பின்றி இருந்ததும், குப்பைகள் குவிந்திருந்ததும் "தினமணி'யில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதைப் படித்த முதல்வர் கருணாநிதி, உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மேயருடன் தொடர்பு கொண்டு தியாகி வைத்தியநாதய்யர் சிலையைப் பராமரிக்கவும், வைத்தியநாதய்யரை வெளிநாட்டவரும், வெளியூர் பயணிகளும் அறியும் வகையில் தகவல் பலகை வைக்கவும் உத்தரவிட்டார்.
முதல்வரின் அதிரடி உத்தரவை அடுத்து வைத்தியநாதய்யர் சிலை புதுப்பிக்கப்பட்டது. சிலையைச் சுற்றியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. சிலைக்கு மாலை அணிவிக்க ஏணிப்படிகளும் அமைக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையை தியாகிகள், காங்கிரஸ் கட்சியினர் வரவேற்று முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால், முதல்வர் கூறியபடி வைத்தியநாதய்யரின் வாழ்க்கை, தியாகம் குறித்த தகவல் பலகைகள் அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது சிலையை ஒட்டியவாறு, பின்பகுதியில் மதுரை மாநகராட்சி நிர்வாகமே பொதுக் கழிப்பறையைக் கட்டி வருகிறது.
முதல்வரின் உத்தரவுக்கு மாறாக நடைபெறும் இந்தச் செயல் மதுரை காங்கிரஸ் கட்சியினர், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விஷயத்தில் முதல்வர் காட்டும் அக்கறையை அதிகாரிகள் காட்டாதது ஏன் என்றும், பொதுக் கழிப்பறை கட்ட மதுரையில் வேறு எங்குமே இடம் கிடைக்கவில்லையா என்றும் தியாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
அந்தப் பகுதிக்கான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் அடிப்பகுதியில் இந்த கழிப்பறை கட்டப்படுகிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதாக அந்தப் பகுதி சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, வைத்தியநாதய்யர் சிலைக்கு அருகில் கழிப்பறை கட்டுவதை மாநகராட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...