திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இங்கே இப்படி... அங்கே அப்படி...

இங்கும் சரி, அங்கும் சரி லாபம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும். நஷ்டம், அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு!

News image
Updated On :28 டிசம்பர் 2023, 5:09 pm

அஜாத சத்ரு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் தொண்டர்கள் இனி சத்தமில்லாமல் விநியோகத்தில் (துண்டுப் பிரசுரங்கள், வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் போன்றவைகளைத்தான் குறிப்பிடுகிறோம்) ஈடுபடும் நேரம். சற்றே பின்னோக்கி எந்த அணி எப்படி இருக்கிறது என்று ஒரு கழுகுப் பார்வை பார்த்தபோது சிரிப்பும், வியப்பும்தான் வருகிறது.

 திமுக அணியைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளான பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை ஆரம்பம் முதலே அடக்கி வாசித்துவிட்டன. 2006 அக்டோபர் 29-ம் தேதி ""திமுகவில் முதல்வர் கருணாநிதியும் கட்சிப் பொதுச்செயலர் அன்பழகனும் மட்டும்தான் நல்லவர்கள். தொண்டர்கள் நல்லவர்கள் அல்ல. அதிமுகவில் தொண்டர்கள் நல்லவர்கள். ஆனால் அந்தக் கட்சியில் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் கெட்டவர்கள்'' என்று பேட்டி அளித்ததை எல்லாம் மறந்து நல்லவர்களுக்கு நல்லவராகத் திமுகவில் அடைக்கலம் புகுந்து விட்டார் பாமக தலைவர் ராமதாஸ்.

 காங்கிரஸும் முரண்டு பிடித்தது. 63 சீட்டுகளைப் பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டது. திமுக அணி வெற்றி பெற்றாலும்கூட முதல்வர் கருணாநிதியால் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும் என்கிற நிர்பந்தத்தையும் ஏற்படுத்திவிட்டது. அத்தனை கிடுக்கிப்பிடிகளுக்குப் பிறகு கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாகவும் தொடர்கிறது. சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் என்று அழைத்து வந்து முதல்வர் கருணாநிதியுடன் கூட்டுப் பிரசாரத்துக்கும் வழிகோலியது.

 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் திமுக கூட்டணியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டுக்கு முன்னால் கட்டிப் புரண்டு சண்டை போட்டதெல்லாம் கனவாய், பழங்கதையாய் மறைந்து, ஒரே மேடையில், ஒரே குரலில் பேசுவதாக இருக்கிறது.

 இதற்கு நேர் எதிர்மாறாக, நடக்கவே நடக்காது என்று நினைத்த அதிமுக-தேமுதிக கூட்டணி சுமுகமாகவே நடந்து முடிந்தது. ஆனால், போயஸ் தோட்டத்துக்குப் போய் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு இதுவரை விஜயகாந்தும் ஜெயலலிதாவும் சந்திக்கவும் இல்லை, கூட்டுப் பிரசாரம் செய்யவும் இல்லை, அதற்கான வாய்ப்பு கோவையில் ஏற்பட்டபோதுகூட விஜயகாந்த் அதைத் தவிர்க்கவும் செய்துவிட்டார்.

 அங்கே குடுமிபிடிச் சண்டைக்குப் பிறகு அப்படி என்றால், இங்கே சுமுகமான கூட்டணிக்குப் பிறகு இப்படி...

 இது மேல் மட்டத்தில். கீழ் மட்டத்தில் எப்படி இருக்கிறது?

 பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் சரி, காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளிலும் சரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் புறக்கணிக்கிறார்கள். இல்லை, வேட்பாளர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். பல இடங்களில், பாமக வேட்பாளர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தங்களுடன் பிரசாரத்துக்கு வருவதைக்கூடத் தவிர்த்தார்கள் என்று தெரிகிறது.

 மாவட்டத்துக்கு ஓர் அமைச்சர் இருப்பதால், அந்தந்த மாவட்டத்துத் திமுக தொண்டர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் நிற்காத தொகுதிகளில் வேலை செய்வதில்லை. பக்கத்தில் அமைச்சர் தொகுதிக்குப் போய்விடுகிறார்கள் என்பது திமுக கூட்டணிக் கட்சிகளின் குமுறல். காங்கிரஸ் வேட்பாளர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுகவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் வேண்டா வெறுப்பாகத்தான் பணியாற்றுகிறார்கள் என்று குமுறாத காங்கிரஸ்காரர்களே கிடையாது.

 திமுக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அந்த வேட்பாளர்கள் காங்கிரஸ், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், பாமக கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தங்களுடன் பிரசாரத்துக்கு வரும்படி பார்த்துக் கொள்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள்? ஊஹும். "அவர்களைக் கவனிப்பதுபோல கவனித்துக் கொள்ளலாம்' என்று ஒதுக்கப்படுவதாகக் குமுறாத தொண்டர்கள் மிகமிகக் குறைவு. அதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களது உழைப்பும் சாமர்த்தியமும்தான் அந்த வேட்பாளர்களைக் கரையேற்றுமே தவிர, கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு என்பது அறவே இல்லை என்பது பல வேட்பாளர்களே சொன்ன தகவல்.

 சரி, அதிமுக தரப்பில் எப்படி இருக்கிறது? திமுக தரப்பில் மேல்மட்டத்தில் காணப்படும் ஒற்றுமையைப்போல அதிமுக தரப்பில் கீழ்மட்டத்தில் பாலும் தண்ணீரும் சேர்ந்தாற்போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்கள் தேமுதிகவினர் என்று பாராட்டாத அதிமுக வேட்பாளர்களே இல்லை எனலாம்.

 அதிமுக கூட்டணித் தொண்டர்கள் மத்தியில் ஒரு குறை. தங்களுடன் மதிமுக இல்லாமல் இருப்பதைப் பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். மதிமுகவும் இருந்திருந்தால் 200 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம் என்று அதிமுகவினரே பல இடங்களில் கூறுவதைக் கேட்க முடிகிறது.

 சில இடங்களில் அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் உரசல் ஏற்பட்டால், அதைச் சரிக்கட்டிக் கூட்டணி ஒற்றுமையை இழுத்துப் பிடித்து விடுகிறார்கள் இடதுசாரிகள். மதிமுகவும் இருந்திருந்தால்... என்று பெருமூச்சு விடுவது இடதுசாரிகளும்தான்.

 காங்கிரஸில் மட்டும்தான் கோஷ்டிப்பூசல் என்று நினைத்தால் தவறு. திமுகவும், அதிமுகவும் அதற்கு விதிவிலக்காக ஒன்றும் இல்லை. சொன்னப் போனால், திமுக, அதிமுக வேட்பாளர்கள் பலர், தங்களது சொந்தக் கட்சியினரின் உள்குத்து வேலைகளால்தான் தோல்வியடையப் போகிறார்கள் என்று தெரிகிறது.

 திமுகவில் ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி ஒன்று வலுவாக இருப்பது தென் மாவட்டங்களில் மட்டும்தான். ஏனைய மாவட்டங்களில் அமைச்சர் கோஷ்டி, முன்னாள் அமைச்சர் கோஷ்டி, அல்லது மாவட்டச் செயலாளர் கோஷ்டி என்று இல்லாத மாவட்டமே கிடையாது.

 அதுமட்டுமல்ல, ஒவ்வொரு அமைச்சரும் தனக்கு வேண்டிய ஆதரவாளர்களைத் தங்கள் மாவட்டத்தில் இரண்டு மூன்று தொகுதிகளில் நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சருக்கு எதிரணியினர் என்று சத்தம் போடாமல் உள்குத்து வேலையில் ஈடுபடுவது பரவலாகவே காணப்படுகிறது.

 அதிமுகவில், அடிக்கடி மாவட்டச் செயலாளர்களை மாற்றிக் கொண்டே இருந்ததால் ஏகப்பட்ட கோஷ்டிகள். மாநில அளவில் கோஷ்டிகள் இல்லையே தவிர, அதிமுகவில் மாவட்ட அளவிலான கோஷ்டிகளும், அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் காலை வாரி விட நடக்கும் முயற்சிகளும் காங்கிரûஸவிட மோசம். "அம்மா' வரும்போது மட்டும்தான் ஒன்றாகக் கூடுகிறார்களே தவிர, அவர் அகன்றுவிட்டால் இங்கே கட்டிப்பிடித்துச் சண்டை போடாத குறை.÷

 கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடு அங்கே அப்படி, இங்கே இப்படி என்றால் இரண்டு அணிகளிலுமே, பிரதானக் கட்சிக்காரர்களான திமுகவினரும், அதிமுகவினரும் தேர்தல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் விதம் தனிரகம். பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, இடதுசாரிகள் என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உயிரைக் கொடுத்து வேலை பார்க்கிறார்கள் என்றால் திமுக, அதிமுக தொண்டர்கள் இதற்கு நேர் எதிர்.

 தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளாகவே இருந்தாலும் திமுகவினரும் சரி, அதிமுகவினரும் சரி பணம் கிடைக்காவிட்டால் களப்பணியில் இறங்கித் தங்களைச் சிரமப்படுத்திக் கொள்வதே இல்லை. திமுகவினராவது, அமைச்சர் தொகுதி, மாவட்டச் செயலர் தொகுதி என்று வந்தால் கட்சி விசுவாசத்துக்காகவும், அந்தத் தலைவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவும் வேலை செய்கிறார்கள். அதிமுகவினரிடம் அந்த உணர்வுகூடக் கிடையாது.

 திமுக, அதிமுக கூட்டணியில் இருக்கும் ஏனைய கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஏன் இந்தத் தேர்தலில் போட்டியிட நேர்ந்தது என்று தங்களைத் தாங்களே நொந்துகொள்ளும் நிலைமை. இதனால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது, அதிகமான பணபலமில்லாமல் களமிறங்கி இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, இடதுசாரிக் கட்சி வேட்பாளர்கள்தான். அதேபோல, பணமிருந்தும் செலவழிக்க மனமில்லாத காங்கிரஸ் வேட்பாளர்களும்.

 நேரடியாக மோதும் தொகுதிகளைவிட, எதிரணியில் கூட்டணிக் கட்சிகளுடன் மோதும் இடங்களில்தான் திமுகவும், அதிமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெறக்கூடும் என்று தெரிகிறது. அதாவது, இங்கும் சரி, அங்கும் சரி லாபம் இரண்டு பெரிய கட்சிகளுக்கும். நஷ்டம், அவர்களின் வெற்றிக்காகப் பாடுபட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.