தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் தடுக்கப்படுமா?
பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். த


பெரம்பலூர்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்திலேயே அதிகளவிலான சாலை விபத்துகள் நிகழும் பகுதியாகக் கருதப்படுவது பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையான தொழுதூர் முதல் பாடாலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பகுதியே.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமான இரு வழிச் சாலையாகக் காணப்பட்டது. இதனால், வாகனங்கள் நேருக்கு நேர் மோதி அதிகளவிலான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதையடுத்து, தற்போது இந்தச் சாலை தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கீழ், நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்துக்கு இடையூறான பகுதிகளில் மேம்பாலங்கள், சாலையின் நடுவே தடுப்புச் சுவர்கள், தேவையான அளவில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், விபத்துகளும், உயிர்ச் சேதமும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு.
நேருக்கு நேராக வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்துகள் தவிர்க்கப்பட்டு, சாலை ஓரங்களில் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் மீது மோதி நிகழும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 328 சாலை விபத்துகள் நேரிட்டன. இதில் 231 பேர் காயமடைந்தனர். 97 பேர் உயிரிழந்தனர்.
ஆனால், நிகழாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையில், 336 சாலை விபத்துகளில், 280 பேர் காயமடைந்துள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, நிகழாண்டில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. சாலையின் தரம் நன்கு உயர்த்தப்பட்ட பின்னரும்கூட, விபத்துகள் தொடர்வதற்கும், அதிகரிப்பதற்கும் காரணம் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்காததே என்று கூறப்பட்டாலும், போக்குவரத்து அதிகாரிகளும் தங்களது கடமைகளை முறையாகச் செய்யாததும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
இரவு நேர விபத்துகளுக்கு காரணமான ஹாலஜன் பல்புகளை தடை செய்வது, வாகனங்களின் பின்புறம் ஒளிரும் எச்சரிக்கை ஸ்டிக்கர்களை முறையாகப் பயன்படுத்துவது, பழுதான வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தால் அதனருகே முக்கோண அமைப்பிலான எச்சரிக்கைப் பலகை வைத்தல் உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பது போக்குவரத்து அதிகாரிகளின் கடமையாகும்.
ஆனால், அதைத் தவிர்த்து, அதிகச் சுமை, கால்நடைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பிடித்து விசாரித்து, அவர்களிடம் பணம் வசூல் செய்வதிலேயே அதிகாரிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
அதிகவேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, முறையான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தகுதியற்ற வாகனங்களை இயக்க உரிமம் வழங்குவது, லாரி, சுமை ஆட்டோக்களில் பொதுமக்களை ஏற்றிச் செல்வது உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து, எவ்வித பாரபட்சமும் இன்றி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில், அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில், முறையாகப் பயிற்சி பெறாத, ஓட்டுநர் உரிமம் பெறாத நபர்கள், அதுபோன்ற வாகனங்களை இயக்குவதால் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது.
சாலை ஓரங்களில், விபத்தைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும், ஓட்டுநர்களும், போக்குவரத்து அதிகாரிகளும் முறையாக விதிமுறைகளின்படி செயல்பட்டால் மட்டுமே சாலை விபத்துகளைத் தடுக்க முடியும்.
எனவே, இரவு நேர வாகனங்களை முறையாகக் கண்காணிக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகன ஓட்டுநர்களும் சமூக அக்கறையுடன் செயல்பட்டு, தொடர்ந்து அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியம் என்கின்றனர் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...