/

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டல கனவு நனவாகிறது

திருநெல்வேலி:  தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டல திட்ட கனவு நனவாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.   இங்கிருந்து டிசம்பர் இறுதிக்குள் 3 நி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:25 pm

ப. இசக்கி

திருநெல்வேலி:  தென் மாவட்ட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டல திட்ட கனவு நனவாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  இங்கிருந்து டிசம்பர் இறுதிக்குள் 3 நிறுவனங்கள் தங்களின் பொருள்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது என, திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஏ.எம்.ஆர்.எல். இன்டர்நேஷனல் டெக் சிட்டி நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

  தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் நான்குனேரியில் உயர் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்டத்துக்கு 2001-ம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

 எனினும் தொடர்ந்து அத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அங்கு தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்பட்டது.

 பின்னர் 2006-ல் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டு உயர் தொழில்நுட்பப் பூங்கா திட்டமானது பல்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

  இப் பல்பொருள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக தற்போது அங்கு சுமார் 2,520 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இத்  திட்டத்தை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகமும், ஏ.எம்.ஆர்.எல். இன்டர்நேஷனல் டெக் சிட்டி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்துச் செல்கின்றன.

  தொழில் தொடங்க முன்வரும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க ஏ.எம்.ஆர்.எல். நிறுவனம் 5 ஆண்டுகளில் சுமார்  806 கோடி செலவு செய்யத் திட்டமிட்டுள்ளது. மொத்தம் உள்ள 2,520 ஏக்கர் நிலத்தில் சுமார் 1,700 ஏக்கர் நிலம் தொழிற்சாலைகளுக்கும், எஞ்சிய 820 ஏக்கர் நிலம் குடியிருப்புப் பகுதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதில் முதல் கட்டமாக தொழிற்சாலைகளுக்கான 1,700 ஏக்கரில் தற்போது சுமார்  40 கோடியில் 300 ஏக்கர் நிலம் சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேசத் தரத்தில் சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர்த் தேவைக்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துடன் இன்னும் 10 நாள்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.

  இவ்வாறு முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வரும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து வருவதற்கான பணிகளையும் ஏ.எம்.ஆர்.எல். நிறுவனம் செய்து வருகிறது.

  இதுவரை தூத்துக்குடி, மதுரை, கோவை, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்து சென்னை, மும்பை, பெங்களூர், தில்லி ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்பு வெளிநாடுகளில் முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதனால், தற்போது இங்கு தொழில் தொடங்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் விசாரணை நிலையில் உள்ளன.

  ""இங்கு தொழில் தொடங்க 2 துபை நாட்டு நிறுவனங்கள் உள்பட 10 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்த நிறுவனங்களுக்கு 32 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வி.வி. மினரல் நிறுவனம் அதன் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிவடைந்து ஏற்றுமதி தொடங்கும்.

  இதேபோல, மென்பொருள் நிறுவனம் ஒன்றும், வேதிப்பொருள் நிறுவனம் ஒன்றும் விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி டிசம்பரில் முடிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏற்றுமதியைத் தொடங்கும். மேலும் சுமார் 15 நிறுவனங்கள் விசாரணை நிலையில் உள்ளன. அவற்றுக்கு சுமார் 50 ஏக்கர் நிலம் விரைவில் ஒதுக்கப்படும்'' என, ஏ.எம்.ஆர்.எல். நிறுவன தொடர்பு அலுவலர் தியாகராஜன் புதன்கிழமை தெரிவித்தார்.

 இரண்டாவது கட்டமாக  50 முதல் 60 கோடியில் 300 ஏக்கர் நிலங்களை சீரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. இங்கு பத்து, பதினைந்து நிறுவனங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்கி விட்டால் அடுத்தடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு அரசு வரி விலக்கு உள்பட பல்வேறு வகையான சலுகைகளை அளித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் அவற்றின் பொருள்களை ஏற்றுமதி மட்டுமே செய்ய வேண்டும். உள்நாட்டில் விற்பனை செய்ய முடியாது. இதனால்தான் திட்ட செயல்பாட்டில் சற்று தாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

  இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகில் விமானம் நிலையமோ, திருநெல்வேலியில் தங்குவதற்கு நட்சத்திர விடுதிகளோ இல்லாதது வெளிநாட்டு முதலீட்டாளர்களை தயங்கச் செய்கிறது. தூத்துக்குடி விமான நிலையம் விரைவில் விரிவாக்கப்பட்டு, திருநெல்வேலியில் தங்கும் வசதிகள் மேம்படுத்தப்பட்டால் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் விரைவில் சிறந்ததொரு தொழில் மையமாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 ""2016-ம் ஆண்டுக்குள் இத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவ்வாறு செயல்படும்போது இங்கு நேரடியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கும், மறைமுகமாக சுமார் 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்'' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.