/

கழிவுநீரால் அவதியுறும் திருப்பூர் மக்கள்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணப்படும் பெரும் பள்ளங்களில் மழைத் தண்ணீர் மற்றும் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கொசுக்களின் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:57 pm

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணப்படும் பெரும் பள்ளங்களில் மழைத் தண்ணீர் மற்றும் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கொசுக்களின் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு முருங்கப்பாளையம், வி.பி.சிந்தன் நகருக்கு இடையில் அமைந்துள்ள பள்ளமான பகுதியில் 21-வது வார்டு முழுவதிலிருந்து வரும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் அவ்விடம் பெரிய குட்டை போலவே காட்சியளிக்கிறது. குடியிருப்புப் பகுதியில் தொடர்ந்து மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் பெருகி சுற்றுவட்டாரத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

 இதேபோல், கருவம்பாளையம் ஏபிடி சாலையையொட்டி ஜீவா நகர் பகுதிகளிலும்  பெரிய பள்ளங்களில் மழைத்தண்ணீருடன் கழிவு நீரும் கலந்து மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதி மக்களின் சுகாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

10-க்கும் மேற்பட்ட இடங்களில்...  22-வது வார்டு காமாட்சிபுரம், பூம்புகார் நகர் (மேற்கு), புதிய பேருந்து நிலையம் பின்புறம், தென்னம்பாளையம் முத்தையன் கோயில் பள்ளம், ஜம்மனைப்பள்ளம், சங்கிலிப்பள்ளம், பாப்பநாயக்கன்பாளையம் என மாநகராட்சி முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று பெரிய பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்தப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

  மாநகராட்சிப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செயின்டோசர் இயந்திரம் வாங்க பல மாதங்களுக்கு முன்னரே மாமன்றக் கூட்டத்திலேயே அனுமதி அளிக்கப்பட்டது. மழைக்காலத்துக்கு முன்னதாகவே அந்த இயந்திரத்தை வாங்க திட்டமிடப்பட்டும் இதுவரை வாங்கப்படவில்லை.

 22-வது வார்டு காமாட்சிபுரம், சாமுண்டிபுரம் (மேற்கு) பகுதிகளில் மழைக் கழிவுநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து பலமுறை ஆய்வு செய்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  இதேபோல், 11 வது வார்டுப் பகுதியிலுள்ள கஞ்சம்பாளையத்திலுள்ள ஆற்றுடன்

வடிகாலை இணைக்க  1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

 மாநகராட்சி நிர்வாகத்தின் கண்துடைப்பான நடவடிக்கைகளால் திருப்பூர் மாநகரில் தொடர்ந்து சுகாதாரம் பாதிக்கப்படுகிறது என்கிறார் 11வது வார்டு மாமன்ற

உறுப்பினர் மரியசிசிலியா.

பொதுப்பணித்துறை, தொலைத்தொடர்பு... இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி நல அதிகாரி கே.ஆர்.ஜவஹர்லாலிடம் கேட்டபோது, மாநகராட்சி பகுதிகளிலுள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கழிவுநீர் தேங்கும் ஓடைகளை பொதுப்பணித்துறையினர் சரிவர கண்டுகொள்ளாததும், தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஆங்காங்கே பள்ளங்களை தோண்டிவிட்டு முறையாக மூடிவிட்டுச் செல்லாததாலும் இதுபோன்ற பள்ளங்களில் மழைத் தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்க காரணமாகிவிடுகிறது என்றார்.

 மழைக்காலங்களில் சுகாதார பாதிப்புகளைத் தடுக்க வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடாமல் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமை. அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.