எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேதாரண்யம் பகுதியில் சவுக்கு நேரடிக் கொள்முதல் முடக்கம்: விவசாயிகள் பாதிப்பு

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சவுக்கு மரங்களை அரசுத் துறை நிறுவனங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யும் நடைமுறை முடக்கப்பட்டதால், நியாயமான விலை கிடை

News image
Updated On :28 டிசம்பர் 2023, 1:55 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம் : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சவுக்கு மரங்களை அரசுத் துறை நிறுவனங்கள் நேரடியாகக் கொள்முதல் செய்யும் நடைமுறை முடக்கப்பட்டதால், நியாயமான விலை கிடைக்காமல் சவுக்கு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வேதாரண்யம் பகுதிக்குள்பட்ட மானாவாரி நிலப்பரப்பில் பல ஆண்டுகளாக சவுக்கு மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

 சவுக்கு பயிரிட ஏற்ற மணல் பாங்கான நிலத்தையுடைய பெரியகுத்தகை, புஷ்பவனம், தேத்தாகுடி, கரியாப்பட்டினம், செட்டிப்புலம், கருப்பம்புலம், செண்பகராயநல்லூர், மருதூர், ஆயக்காரன்புலம், தகட்டூர் ஆகிய கிராமங்களில் சவுக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

 அண்மைக் காலமாக நெல் சாகுபடியில் ஏற்பட்டு வரும் செலவு அதிகரிப்பு, வடிகால், பாசனம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக நெல் வயல்களிலும் சவுக்கு மரங்களை விவசாயிகள் வளர்ப்பது அதிகரித்து வருகிறது.

 எரிபொருள், இழை தயாரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட தேவைகளுக்காக சவுக்கு மரங்கள் வெளியிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதிகரித்த எரிவாயு அடுப்பு, பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளால் தேவை குறைந்ததால், சவுக்கு மரங்களுக்கான சந்தை வாய்ப்புகளும் குறைந்தன.

 ஆனால், 2006-ம் ஆண்டுக்கு முன்பு ஈரோடு, பள்ளிப்பாளையம் காகித ஆலை, கோவை, திருப்பூர், திருச்சி, கரூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களுக்கு அதிக அளவு சவுக்கு மரக் கட்டைகள் அனுப்பப்பட்டன.

 இதையடுத்து, சந்தை விலையும் அதிகரித்தது. குறிப்பாக, 2000-வது ஆண்டில் ஒரு டன் சவுக்கின் சராசரி விலை ரூ.  800 முதல் ரூ.  2 ஆயிரமாக இருந்தது. இது 2006-ல் ரூ.  1,300 முதல் ரூ.  3,600 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

 இந்நிலையில், உற்பத்தியாகும் சவுக்கு மரங்களை அரசு சார்ந்த காகித ஆலைகளே நேரில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்ற அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 இதையடுத்து, தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், கரூர் காகிதபுரத்தில் உள்ள காகித ஆலைக்கு இங்குள்ள சவுக்கு மரங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய முன் வந்தது.

 இதற்கான மையங்கள் தேர்வு செய்யப்பட்டு கொள்முதல் பணிகளும் தொடங்கப்பட்டன ஆனால், சில காரணங்களால் அதன் தொடர் செயலாக்கத்தில் தேக்க நிலை ஏற்பட்டு அதற்கான தொடர்பு அலுவலகங்களும் மூடப்பட்டன.

 தற்போது தனியார் முகவர்கள் மட்டுமே டன் சராசரியாக ரூ.  1,600-க்கு சவுக்கை கொள்முதல் செய்கின்றனர். அதுவும் உரிய பணம் உடனடியாகவும் கிடைப்பதில்லை.

 இதனால், சவுக்கு பராமரிப்புக்கு 5 ஆண்டுகளில் ஆகும் செலவினத்தைக் கணக்கிடும்போது விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

 இதுகுறித்து வேதாரண்யம் பகுதி சவுக்கு உற்பத்தி விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் மருதூர் தெற்கு எஸ். ஜெகநாதன் கூறியது:

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரடிக் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் செய்தது. சராசரியாக டன் ஒன்றுக்கு ரூ.  2 ஆயிரம் கிடைத்தது. நேரடியாக எடை போடப்பட்டு கழிவுகள் இல்லாமல், உடனுக்குடன் பணமும் கிடைத்தது. இது கட்டுப்படியாகும் விலையாகவும் இருந்தது.

 ஆனால், ஏதோ காரணத்தால் தற்போது கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரடிக் கொள்முதல் முறையைச் செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுக்கு மரத்துக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்ததைப்போல சவுக்குச் சாகுபடி செலவுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்றார் அவர்.

 வேளாண் உற்பத்திக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டுவரும் அரசு இங்கு உற்பத்தியாகும் சவுக்கு மரங்களையும், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நெல் அறுவடைக் காலத்தில் வீணாகி வரும் வைக்கோலையும் மூலப்பொருளாகக் கொண்டு இந்தப் பகுதியில் காகித ஆலை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.