உடையும் அபாயத்தில் புவனகிரி பாலம்
சிதம்பரம், அக். 9: மக்கள் பயன்படுத்தும் புவனகிரி வெள்ளாற்று பாலம் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இந்த ஆபத்தை உணராமல் ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர


சிதம்பரம், அக். 9: மக்கள் பயன்படுத்தும் புவனகிரி வெள்ளாற்று பாலம் நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இந்த ஆபத்தை உணராமல் ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
÷சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புவனகிரி-கீரப்பாளையத்தை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே 1942-ல் பாலம் ஒன்று கட்டப்பட்டது. 1964-ல் அப்பாலத்தின் தூண்களை இடிக்காமல் அதன் மேலிருந்த பகுதிகளை இடித்து அகலமாக விரிவுபடுத்தி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
÷இப்போது பாலம் சேதமுற்றுள்ளதால் எப்போது உடையுமோ என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது. மழைநீர் தேங்குவதால் பாலத்தின் ஸ்திரத்தன்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
÷நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அ. குணசேகரன் 25.8.2008-ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பாலத்தின் ஸ்திரதன்மை குறித்து விவரம் கேட்டிருந்தார்.
÷அதற்கு விழுப்புரம் கோட்டப் பொறியாளர் அனுப்பிய பதிலில் இப்பாலம் 1964-ல் கட்டப்பட்டது என்றும், இப்போது பாலம் வலுவிழந்து உள்ளதாகவும், பாலம் கட்டுவதற்கான ஆய்வுகள், மண் சோதனைகள் உள்ளிட்ட பொறியியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள ரூ.35.12 லட்சத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த பதில் கடிதத்தில் கூறியிருந்தார்.
÷இதன் அடிப்படையில், பாலம் விரைந்து கட்டி முடிக்க நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பியது.
÷இதற்கு 10.08.2009-ல் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் கடிதம் வாயிலாக தெரிவித்தது: 2009-10 ஆண்டுக்கான வருடாந்திர திட்டத்தின்கீழ் ரூ.19.20 கோடி செலவில் இப்பாலத்தில் அருகாமையில் வேறு ஒரு நேர்ப்பாட்டில் புதிய பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டு தொழில்நுட்ப பிரேரணைகள் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார்.
÷அதற்கேற்றார்போல மண் பரிசோதனையும் நடந்தது. அத்துடன் சரி. அதன் பின்னர் பாலம் கட்டுவது குறித்த ஆய்வு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
÷2009- 10 நிதியாண்டு திட்டத்தில் பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைத்துறையிடம் பதில் கோரியது.
÷புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே கட்ட வேண்டிய பாலம் தவிர, தமிழகத்தில் 121 புதிய பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக பதில் வந்தது. இந்தச் செய்தி இப்பாலத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலம் உடைந்துவிட்டதால் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால் செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் புவனகிரி வெள்ளாற்று பாலத்தின் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
÷மழைக்காலத்தில் உடைந்த விருத்தாசலம் மணிமுத்தாறு பாலம் போல வெள்ளாற்றுப் பாலமும் உடைந்துவிட்டால் 30-க்கும் மேற்பட்ட கிராமும், வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், பாண்டி, சென்னை போன்ற பகுதிகளும் துண்டிக்கப்படும்.
÷அப்படியொரு விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதுதான் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...