டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரஞ்சன்குடி கோட்டை சுற்றுலாத் தலமாக்கப்படுமா?

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழங்கால நினைவுச் சின்னமாக விளங்கும் துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:05 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழங்கால நினைவுச் சின்னமாக விளங்கும் துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

போதிய பராமரிப்பு இன்றி, சிதிலமைடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக இந்தப் பாரம்பரியமிக்க கோட்டை மாறி வருகிறது.

பெரம்பலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி கம்பீரமாக அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை.

பகைவர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவர்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோட்டை, செஞ்சி கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல்வேறு கால கட்டங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கோட்டையின் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களில் மீன் சின்னமும், போர் வாளும் பொறிக்கப்பட்டுள்ளன.

கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இக் கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.

கோட்டையின் மேல்புறத்தில் ராணியின் அந்தப்புறம், இதையொட்டி நீச்சல் குளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப் பாதைகள் என முடியாட்சி மன்னர்களின் அடையாளமாக விளங்கும் இக் கோட்டை, நவீன கால கட்டடக் கலை வல்லுநர்களை வியக்க வைக்கிறது.

கி.பி 1751-ல் பிரெஞ்சுகாரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்றனர் என்பதும், ஜாகீர்தார்கள் இக் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் என்பதும், அதன்பிறகு கந்தாசாகிப் என்ற மன்னர் வசம் இக் கோட்டை இருந்ததும் படிப்படியாக கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், இக் கோட்டையின் முழு வரலாறு இதுவரை கிடைக்கவில்லை.

தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீரங்கிக் குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கட்டடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இந்த நினைவுச் சின்னத்தைச் சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாகவும், காதலர்கள் பொழுதுபோக்கும் கேளிக்கை விடுதியாகவும் இக் கோட்டை மாறி வருகிறது. இதன் காரணமாக இக் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.

காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னத்தை காப்பது அரசின் கடமை என்ற வகையில், இந்தக் கோட்டையைச் சீரமைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.