/

திருப்பூரில்.... கட்டப் பஞ்சாயத்துக்கு வழிவகுக்கும் "டெபிட்' பிரச்னை!

திருப்பூர், மே 11:   திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் நிலவும் "டெபிட்' பிரச்னைகளால் பெரு முதலீட்டு நிறுவனங்களிடம் சிக்கி, குறைந்த முதலீட்டில் தொழில் புரியும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பாதிப்புக்கு

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:11 pm

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், மே 11:   திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களில் நிலவும் "டெபிட்' பிரச்னைகளால் பெரு முதலீட்டு நிறுவனங்களிடம் சிக்கி, குறைந்த முதலீட்டில் தொழில் புரியும் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனால் கட்டப் பஞ்சாயத்து அச்சுறுத்தல், தொழிலை விட்டே விலகுதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை ஜாப்ஒர்க் நிறுவனத்தினர் எதிர் கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், சுமார் 1,500 நிறுவனங்கள் ஏற்றுமதிக்கான பின்னலாடைகளை உற்பத்தி செய்கின்றன. இப்பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு நிட்டிங், காம்பேக்டிங், ரைசிங், பவர் டேபிள், கணினி எம்ப்ராய்டரிங், பிரிண்டிங் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க தனித்தனியே ஆயிரக்கணக்கான ஜாப்ஒர்க் நிறுவனங்களும் உள்ளன.

டெபிட்  என்றால்..:

இந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து துணிகளை பெற்று அதற்குண்டான ஜாப்ஒர்க் பணிகளை செய்வர். பின்னர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உற்பத்தியாளர்களிடமே திருப்பி அளிக்கின்றனர்.

இந்த ஜாப்ஒர்க் பணிகளுக்காக பீஸ் ரேட் அடிப்படையிலும், கிலோ அடிப்படையிலும் கட்டணம் நிர்ணயித்து வழங்கப்படும். ஜாப்ஒர்க் பணி முடித்த பின், துணிகளில் குறைகள் ஏற்பட்டால் அவற்றைக் கழித்துவிட்டு கொடுக்க வேண்டிய பணத்தில் உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்வர். இவ்வாறு செய்வதற்கு திருப்பூர் நிறுவனங்களிடையே பயன்படுத்தப்படும் சொல்லே "டெபிட்' ஆகும்.

கசக்கிப் பிழிந்து அடிமையாக்கி....:

முன்பு குறைகளுடைய துணிகளை கழிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டெபிட் செயல்பாடுகள், தற்போது ஜாப்ஒர்க் நிறுவனங்களை கசக்கி பிழிவதுடன், பெரும் முதலீட்டு உற்பத்தியாளர்களிடம் ஜாப்ஒர்க் நிறுவனர்களை அடிமையாக்கும் சூழலையும் உருவாக்கிக் கொண்டுள்ளது.

அதன்படி, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் பணிகள் முடித்து கொடுக்கும் துணிகளில் குறைகளுடைய துணிகளுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த துணிகளுக்குமே டெபிட் போடுவதும், அதிகப்படியான லாபத்தை எதிர்நோக்கியும், பண வர்த்தக சுழற்சியில் ஏற்படும் தடங்கல்களை தாற்காலிகமாக நிவர்த்தி செய்யவும் ஜாப்ஒர்க் நிறுவனங்களிடம் டெபிட் என்ற சொல்லை ஆயுதமாக பயன்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

தொடர்ச்சியான பணிகள் வேண்டியும், ஒட்டு மொத்த இழப்பை தவிர்க்கவும் வேண்டி, பாதிக்கப்படும் ஜாப்ஒர்க் நிறுவனத்தினர் உற்பத்தியாளர்களிடமே சரணாகதியாகின்றனர்.

அதிகரிக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்...:

பெரும்பாலான ஜாப்ஒர்க் நிறுவனத்தினர், இவ்வாறு நியாயமற்ற முறையில் டெபிட் போட்டுள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து அதற்குரிய பணத்தை பெற்றுத் தரும்படி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை நாடுகின்றனர். இதனால், திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதியில் கட்டப் பஞ்சாயத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுள்ளன.

உற்பத்தியாளர்களிடமும் சரணாகதியாக முடியாமல், கட்டப் பஞ்சாயத்துகள் மூலமும் தீர்வு காண முடியாத ஜாப்ஒர்க் நிறுவனத்தினர் நாளடைவில் தொழிலை விட்டே விலகும் பரிதாப நிலை ஏற்படுகிறது. அவ்வாறு டெபிட் பிரச்னைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலைவிட்டு விலகி, தற்போது நிரந்தர கடனாளிகளாக மாறியுள்ள ஜாப்ஒர்க் நிறுவனத்தினர்களோ ஏராளம்.

ஜாப்ஒர்க் நிறுவனங்களை சிறுகச் சிறுக சீரழிக்கும் இந்த நியாயமற்ற டெபிட் செயல்பாடுகளுக்கு தீர்வு காண, பின்னலாடை உற்பத்தியாளர்கள் நடுநிலையுடன் நடந்து கொண்டால் மட்டுமே முடியும் என்கிறார் டெபிட் பிரச்னையில் பாதிக்கப்பட்ட காலர் நிட்டிங் ஜாப்ஒர்க் நிறுவனர் ஒருவர்.

ஜாப்ஒர்க் நிறுவனங்களை பாதுகாக்க..: 

இது போன்ற தொழிலில் ஏற்படும் பிரச்னைகளைக் கொண்டு வளர்ந்து வரும் அரசியல் கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாயிகளுக்கு நடத்துவது போல் மாதந்தோறும் தொழில் துறையினருக்கும் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மத்தியில் நிலவும் டெபிட் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், குறைந்த முதலீட்டில் தொழில் புரியும் நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.