நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தஞ்சை பெரியகோயில் சிதிலமடையும் மதில் சுவர்

மாமன்னன் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை பெரியகோயில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுல்லாது கலை, சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. கி.பி.1218-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் (சீனிவாசபுர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:46 pm

ஆர்.​ ​ தங்கராஜு

மாமன்னன் ராஜராஜ சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை பெரியகோயில் ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுல்லாது கலை, சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

கி.பி.1218-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் (சீனிவாசபுரம் பகுதியில்) அரண்மனையைத் தரைமட்டமாக்கினார். எஞ்சியவற்றை 1311-ல் மாலிக் காபூர் சூறையாடியதால், பெருநகரமாகத் திகழ்ந்த தஞ்சை பொட்டல் காடாக மாறியது. 1343-ல் பாண்டியன் முதலாம் மாறவர்மன் வல்லபனின் தளபதி நாராயணன் என்னும் தொண்டைமானார், பொட்டலாக இருந்த தஞ்சாவூரை புதிய குடியிருப்புப் பகுதியாக மாற்றினார்.

அதுவரை பெருநகரமாக உருவாகாமல் இருந்த தஞ்சாவூர், 1535-ல் அச்சுத தேவராயரால் திருநெடுங்குன்றத்து செவ்வப்ப நாயக்கர் சோழ நாட்டு மன்னராக நியமனமாகி, நாயக்கர் அரசு உதயமானதும், தஞ்சாவூர் ஒரு நகரமாகப் புதுப்பொலிவு பெற்றது.

பின்னர், நாயக்க அரசுக்கு தலைநகரம் புதிதாக நிர்மாணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், பாதுகாப்பு மிக்க அரணாக பெரியகோயில், சிவகங்கை குளம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோட்டை மதிலும், அதைச் சுற்றி அகழியும் ஏற்படுத்தி ஒரு சிறிய கோட்டை உருவாக்கப்பட்டது.

பெரியகோயிலுக்கு என தனித்த மதில் சுவர் இருந்தபோதும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை குளம் அதன் கரையில் சில கட்டடங்களை உள்ளடக்கி, இரு கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டன.

அகழியை ஒட்டியுள்ள மதில் சுவர் கருங்கல், செங்கல் கட்டுமானத்துடனும், உள்புற கொத்தள மதில் சுவர் செம்புறாங்கல்கள் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இது சிறிய கோட்டையாகும். இதற்கு வெளியே நான்கு வீதிகளைக் கொண்டு அகழி, மதில் சுவருடன் பெரிய கோட்டை அமைக்கப்பட்டது.

சிறிய கோட்டை எனப்படும் பெரியகோயிலைச் சுற்றி தரை மட்டத்திலிருந்து சுமார் 50 அடிக்கும் மேல் ஆழமுள்ள அகழி பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாகப் புதர் மண்டியும், பல இடங்களில் கட்டுமானங்கள் உடைந்தும் உள்ளன. மதில் சுவரைப் பாதிக்கும் வகையில் பெரிய அளவில் மரங்கள் வளர்கின்றன. கோயில் முன்புறம் புது ஆற்றிலிருந்து அகழிக்குத் தண்ணீர் வரும் வழியும் அடைபட்டு மாசடைந்துள்ளது.

சோழர், நாயக்கர், மராட்டியர் என பண்டைய தமிழக மன்னர்களின் வரலாற்றைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் நினைவுச் சின்னங்கள், இப்போது பாதுகாப்பின்றி அழிந்து வருகின்றன. பெரியகோயிலை யுனெஸ்கோ அமைப்பின் பராமரிப்பில் தொல்லியல் துறை கண்காணித்து வருகிறது.

அகழியைச் சீரமைத்து அதில் தண்ணீர்விட்டு அழகூட்ட தொல்லியல் துறை தயாராக இருக்கிறதாம். ஆனால், அகழி இருக்குமிடம் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், தொல்லியல் துறை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அகழியை எங்களுக்கு இலவசமாக வழங்குங்கள்; நாங்கள் அதைப் பராமரித்துக் கொள்கிறோம் என நகராட்சியிடம்தொல்லியல் துறை கேட்கிறது. ஆனால், நகராட்சியோ, அகழிக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் கொடுக்கிறோம் எனக் கூறி வருகிறது.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு, தஞ்சாவூர் நகர்மன்றத்தில் அகழி இருக்குமிடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சென்னையில் உள்ள நகராட்சி ஆணைய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இன்னும் எந்த முடிவும் தெரியவில்லை.

அகழி மற்றும் மதில் சுவரை சீரமைக்காதபட்சத்தில், நாளடைவில் கட்டடத்தின் வலு குறைந்து முற்றிலும் அழியும் நிலை ஏற்படலாம். அதன்பிறகு, பழங்கால நினைவுச் சின்னங்களை வரைபடத்திலோ அல்லது விடியோ மூலமோதான் பார்த்து ரசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனவே, வருங்காலத் தலைமுறையினர் பண்டைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள இவ்வாறான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது அவசியம். பெரியகோயில் 1000-வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போதாவது அகழியைச் சீரமைத்து அதில் தண்ணீர் நிரப்ப வேண்டும்.

ராஜராஜ சோழனால் உலகமே பார்த்து வியக்கும் வகையில் தலைநிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது பெரியகோயில். இக்கோயிலை மேலும் பெருமைப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரவும், தொல்லியல் துறையால் ஒரு தொகையைக் கொடுத்து அகழியை வாங்க முடியாதா?

உலக வரைபடத்தில் தஞ்சாவூரை இடம்பெறச் செய்த பெருமைக்குரிய பெரியகோயில் அகழிக்கு, தஞ்சாவூர் நகராட்சி பணம் வாங்கிக் கொண்டுதான், அந்த இடத்தைக் கொடுக்க வேண்டுமா?

கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, தமிழக அரசின் சார்பில் பெரியகோயில் 1000-வது விழா நடைபெறவுள்ள நிலையில், அகழியைச் சீரமைக்கும் ஆர்வத்தில் இருக்கும் தொல்லியல் துறையிடம் அதை ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒருவேளை, அகழியைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க விருப்பம் இல்லாதபட்சத்தில், தமிழகத் தொல்லியல் துறையாவது அகழியைச் சீரமைக்கும் பணியை மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து சென்னை நகராட்சி ஆணைய உயர் அலுவலர் கூறியது:

பெரியகோயில் அகழியைக் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சென்னை நகராட்சி ஆணைய அலுவலர்கள் இருவர் ஆய்வு செய்தனர். இந்தியத் தொல்லியல் துறை அகழியை இலவசமாகக் கேட்பதால்தான் இழுபறி தொடர்கிறது. தொல்லியல் துறை அகழி சீரமைப்புப் பணி செய்து, அதில் வணிக நோக்கில் படகு சவாரிவிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

வணிகத்துக்காகப் பயன்படுத்தினால் நகராட்சிக்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாதபட்சத்தில் குறைந்தபட்சத் தொகைக்கு அகழியைத் தொல்லியல் துறைக்கு அளிக்கலாம் எனவும் கூறி வருகிறது. அகழி ஒப்படைப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும். இருப்பினும், பெரியகோயில் 1000-வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அகழி குறித்து இன்னும் சில வாரங்களில் நல்ல தீர்வு ஏற்படலாம் என்றார் அவர்.

தஞ்சாவூர் கீழவாசலில் இருந்த வாயில் கட்டடப் பகுதி 40 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக இடிக்கப்பட்டதால், அதன் தடமே இல்லாமல் போய்விட்டது. அதேபோல, கோட்டைச் சுவர்களையும், அகழியையும் தற்போது பராமரிக்காமல் விட்டு விட்டால், எதிர்காலச் சந்ததிகளுக்கு அதன் சிறப்பு தெரியாமல் போய்விடும்.

இதுதொடர்பாக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தவறும்பட்சத்தில், தஞ்சை நகரின் வரலாற்றுத் தடயங்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். எனவே, அரசு இதில் தனிக் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.