டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கழிவுநீர் தேக்கம்: குழந்தைகள், பெண்களுக்கு தொற்றுநோய்

மதுரை : மதுரை குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கியதால் குழந்தைகள், பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.     மதுரை

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:23 pm

ஜெயப்பாண்டி

மதுரை : மதுரை குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கியதால் குழந்தைகள், பெண்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட எல்லீஸ்நகர் பகுதியில் பூக்காரத் தோப்பு உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளன. முன்பு வலைவீசித் தெப்பக்குளம் பகுதியில் குடியிருந்த மக்கள், அந்த இடம் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்டதால் அங்கிருந்த சுமார் 500 பேரும் தற்போது பூக்காரத் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

  பூக்காரத் தோப்பு தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, மாநகராட்சி குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.

   ஆனால், இன்னமும் அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை. குறிப்பாக பூக்காரத் தோப்பு பகுதியில் ஓடும் சிறிய மழைநீர் கால்வாய் தற்போது கழிவு நீர் தேங்கியதாக உள்ளது. அத்துடன் அந்தப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனைக் கழிவுகள் அதிகம் வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    கழிவுநீர்த் தேக்கத்தால் அந்தப் பகுதியினர் கால்வாயை கல்பாதை அமைத்தே கடந்து வருகின்றனர். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் தினமும் இந்த கழிநீர்க் கால்வாய் வழியாகவே சென்று வருகின்றனர்.

    இக்கழிவுகள் பூக்காரத்தோப்பு பகுதியைச் சுற்றிலும் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு சமீபத்தில் காய்ச்சல் மற்றும் வாந்திபேதி உள்ளிட்ட தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

   சுகாதாரச் சீர்கேடு காரணமாக மாலதி (11) உள்ளிட்ட ஏராளமான குழந்தைகளும், செல்லம்மாள் (60), முனியம்மாள் (62) உள்ளிட்ட பெண்களும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

 மேலும், இப்பகுதியைச் சேர்ந்த 62 பேர் இதுவரை வாந்திபேதி மற்றும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

   இந்தப் பாதிப்புக்கு முக்கிய காரணம் அங்கு தேங்கிய கழிவுநீர் என்பதுடன், கழிவு நீர் அருகே குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டிருப்பதுதான். கழிவுநீர் செல்லும் கால்வாயில் புற்கள் மண்டிக்கிடக்கின்றன. அத்துடன் பிளாஸ்டிக் பைகளும் கால்வாயில் தேங்கியுள்ளன. இத்தகைய காரணத்தாலே அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

   இப்பகுதியில் கடந்த சில நாள்களாகவே தொற்றுநோய் பாதிப்பு காணப்படும் நிலையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும் அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

   மேலும், மழைக் காலங்களில் இப்பகுதியில் கழிவுநீர் அதிகளவு தேங்குவதால் அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களில்தான் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்க நேரிட்டபோது மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்து ஆறுதல் கூறியுள்ளனர். அப்போது, பூக்காரத் தோப்பு பகுதியில் வசிப்போருக்கு மாற்று இடம் தர ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்பட்டதாகவும், ஆனால், அதற்கான எவ்வித முயற்சியும் அதிகாரிகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை என்றும் அப்பகுதியினர் ஆதங்கப்படுகின்றனர்.

  எல்லீஸ் நகர் பகுதியில் பூக்காரத் தோப்பு மட்டுமல்ல, கால்வாய் உள்ள அனைத்துப் குடிசைமாற்று வாரிய வீடுகள் உள்ளிட்டவற்றிலும் கழிவுநீர்த் தேக்கம் காணப்படுகிறது.

எனவே கழிவுநீர்த் தேக்கத்தை அகற்றி அப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.