திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாஸ்டர் ஸ்ட்ரோக்...!

அரசியல் ராஜதந்திரத்துக்கு இலக்கணம் படைத்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இருவர். ஒருவர் மாக்கியவல்லி. மற்றொருவர் சாணக்கியர்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:06 pm

அஜாத சத்ரு

அரசியல் ராஜதந்திரத்துக்கு இலக்கணம் படைத்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் இருவர். ஒருவர் மாக்கியவல்லி. மற்றொருவர் சாணக்கியர். இந்த இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக கோபாலபுரத்தில் தவமிருந்து முதல்வர் கருணாநிதியிடம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள விழைந்திருந்தால்கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசியலில் மிகவும் சாதுர்யமாகக் கையாளப்பட்ட ராஜதந்திர நகர்வு எது என்று கேட்டால், பாட்டாளி மக்கள் கட்சியை மையப்படுத்தி திமுக எடுத்திருக்கும் முடிவு என்றுதான் சரித்திரம் பதிவு செய்யும்.

சமீபத்தில் நடந்து முடிந்த பென்னாகரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில்கூட, திமுகதான் என் முதல் எதிரி என்றும் அதைப் பூண்டோடு அழிப்பதுதான் என் தலையாய வேலையென்றும் வீரமுழக்கம் செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கூற்றை, சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அவர்மீதே திருப்பி இருக்கும் முதல்வரின் அரசியல் சாதுர்யம் உண்மையிலேயே பிரமிக்க வைத்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறுவதும், தேர்தல் முடிந்து விரலில் உள்ள அடையாளம் அழியும் முன் திமுகவுக்கு எதிராகக் குரலெழுப்புவதும் சகஜமாகிவிட்டது. இதைப் பலரும் பாமகவின் அதிகப்பிரசங்கித்தனம் என்றும் சுயநல அரசியல் என்றும் விமர்சிப்பதுண்டு. உண்மையில், பாமகவின் அரசியல் அடித்தளத்தைப் பாதுகாக்க டாக்டர் ராமதாஸ் கையாளும் யுக்திதான் அது என்பது பலருக்கும் தெரியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வாக்கு வங்கியாகவும், வெற்றிக்கு அடித்தளமாகவும் விளங்குவது முந்தைய பிரிவுபடாத தென்னாற்காடு மற்றும் வடஆற்காடு மாவட்டங்கள்தான். திமுக தொடங்கிய காலத்தில், கிராமம் கிராமமாகச் சென்று இந்த இரண்டு மாவட்டங்களிலும் வாழும் வன்னியர்களைக் காங்கிரஸýக்கு எதிராக அணிதிரட்டி அண்ணாவுக்குப் பலம் சேர்த்த பெருமை முகையூர் கோவிந்தசாமிக்கு உண்டு.

எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகும், வட தமிழகத்தில் பெரிய அளவில் அவரது கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்குக் காரணம் வன்னியர்கள் திமுகவுக்கு ஆதரவாக இருந்ததுதான். இப்போதும்கூட, திமுகவின் சக்தி கேந்திரமாக விளங்குவது சுமார் 101 தொகுதிகளை உள்ளடக்கிய, வன்னியர்கள் மிகுதியாகக் காணப்படும் வடதமிழகம்தான்.

எண்பதுகளில், வன்னியர் சங்கத்தின் சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வன்னியர்களின் இடஒதுக்கீடுக்காகப் போராட்டம் நடத்தி, பாட்டாளி மக்கள் கட்சி என்கிற அரசியல் சக்தியை உருவாக்கினார் டாக்டர் ராமதாஸ். ஒருபுறம் திமுக பலவீனப்பட்டிருந்த நேரம். மற்றொருபுறம், எம்.ஜி.ஆரின் உடல்நலக் குறைவால் ஆளுங்கட்சியான அதிமுகவிலும் சக்தி வாய்ந்த தலைமை இல்லாமல் இருந்த சூழ்நிலை. பாமக ஓர் அரசியல் சக்தியாகத் தமிழகத்தின் வடமாவட்டங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தது.

அதெல்லாம் பழைய கதை. இன்றைய நிலையில், வன்னியரின் வாக்கு வங்கி திமுக மற்றும் பாமக ஆகிய இரண்டு சக்திகளுக்கிடையில் பிளவுபட்டுக் கிடக்கிறது. காங்கிரஸ், அதிமுக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகள் வன்னியர் வாக்கு வங்கியில் அதிகபட்சம் 30 விழுக்காடு ஆதரவுக்கு மேல் பெற்றிருக்க வழியில்லை. திமுகவின் கூட்டணியில் இருந்தபடி பாமக எதிர்ச்சால் ஓட்டுவதன் முக்கியமான காரணம் தனது வன்னியர் சமுதாய ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு என்பதுதான் உண்மை.

வன்னியர்களின் கோட்டை என்று கருதப்படும் மாவட்டங்களில், ஜாதி ரீதியான போட்டியே திமுகவுக்கும் பாமகவுக்கும் இடையில்தான். அதிமுகவில் பல வன்னியர் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் "அம்மா' விசுவாசிகளே தவிர, அவர்களை யாரும் வன்னியர் சமுதாயத் தலைவர்களாகக் கருதுவதில்லை. ஆனால், திமுகவில் அப்படியல்ல.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமோ, சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகமோ திமுக தலைவர்கள் என்பதுடன் வன்னியர் சமுதாயத் தலைவர்களாகவும் வலம் வருகிறார்கள். பாமக அவ்வப்போது திமுகவுக்கு எதிராகக் குரலெழுப்பாமல், போராட்டங்கள் நடத்தாமல் இருந்தால் தொண்டர்கள் மட்டுமல்ல, கட்சியின் வாக்கு வங்கியே திமுகவுக்கு இடம்பெயர்ந்துவிடும் அபாயம் உண்டு. அடிமட்ட பாமக தலைவர்கள், திமுகவுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளவர்கள்.

மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தனக்கென உறுப்பினர்களே இல்லாத நிலையில், இனிமேல் திமுகவைச் சார்ந்துதான் அரசியல் நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்குப் பாமக தள்ளப்பட்டு விட்டது.

திமுகவின் அணுக்கத் தோழனாகப் பாமக தொடர்ந்தால் விரைவில் பாமக கூடாரம் காலியாகிவிடும் என்று எப்போதோ டாக்டர் ராமதாஸ் கூறியதை அவர் மறந்து விட்டிருந்தாலும், ராஜதந்திரியான முதல்வர் கருணாநிதி மறந்துவிடவில்லை.

2011 சட்டப்பேரவைத் தேர்தல்வரை பாமக மௌனமாக இருந்தால், 1999-ல் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து தனது வாக்கு வங்கியை மட்டுமல்ல, தொண்டர்களையும் இழந்துவிட்ட மதிமுகவின் கதிதான் பாமகவுக்கும் ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸýக்குத் தெரியாதா என்ன? தெரியும்தான். ஆனால், இருதலைக்கொள்ளி எறும்பின் கதையாக இப்போது எதுவும் செய்ய இயலாத நிலைமை அவருடையது.

தேர்தல் வரை பொறுத்திருக்க மனமில்லாமல், அதிமுகவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, தனது மகனுக்கு மாநிலங்களவைத் தொகுதியைப் பெற்று மீண்டும் அந்தக் கூட்டணிக்குப் பாமக திரும்பினால்? அப்போதும், முதல்வர் கருணாநிதியைவிட மகிழ்ச்சி அடையப் போவது வேறு யாருமில்லை. பாமக மீண்டும் அதிமுக அணிக்குத் திரும்பினால், தேமுதிக அந்தக் கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிடும். திமுக எதிர்பார்ப்பதுபோல மும்முனைப் போட்டி ஏற்படுவது, ஆளும்கட்சிக்குச் சாதகமாகிவிடும்.

சரி, பென்னாகரத்தில் போட்டியிட்டதுபோலத் தனித்துப் போட்டியிட்டால்? அப்போதும் மும்முனைப் போட்டி, வன்னியர் பகுதி என்று கூறப்படும் 101 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்கும்.

பரவலாக எதிர்பார்க்கப்படுவதுபோல, ஒருவேளை காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவு செய்தால்? காங்கிரஸ்-விஜயகாந்த் என்கிற கூட்டணி ஏற்பட்டு, திமுக - பாமக - விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியிலும், அதிமுக - இடதுசாரிகள் - மதிமுக ஓர் அணியிலும் போட்டியிட்டாலும் மும்முனைப் போட்டி திமுக அணிக்குச் சாதகமாக இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் கருதுவதில் தவறு காண முடியாது.

தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்குத் தோல்வி என்கிற கதைதான்.

பாமக நிலைமைதான் மிகவும் பரிதாபம். திமுகவின் அணியில் தொடர்ந்தால், கூடாரம் காலியாகிவிடும். வன்னிய சமுதாயத்தின் தலைமைப் பொறுப்பு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுகவுக்குப் போய்விடும். 2011 வரை வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருப்பதால், பாமக செயலிழந்து, தனது சமுதாயத்தினரிடம் செல்வாக்கையும் இழந்துவிட நேரும். அதிமுக அணிக்குப் போனாலோ, தனித்துப் போட்டியிட்டாலோ, அதுவும் திமுகவுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும்.

வயது பலருக்கும் பலவீனத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரை, நேர் விபரீதம்.

முன்எப்பொழுதையும்விட புத்திக்கூர்மையும், ராஜதந்திரமும் அவரிடம் காணப்படுகிறது என்பதை, பாமக பற்றிய திமுகவின் முடிவு தெளிவுபடுத்துகிறது. பாமகவுக்குக் கருணாநிதி வைத்திருப்பது வெறும் "செக் அண்ட் மேட்' அல்ல. அவரது அரசியல் நகர்வுகளின் "மாஸ்டர் ஸ்ட்ரோக்'!

ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து வீழ்த்தி இருப்பது மட்டுமல்ல, திமுகவைப் பலவீனப்படுத்தி வந்த சக்தியை, பலவீனமான இடத்தில் பக்குவமாகத் தாக்கித் திகைப்பில் ஆழ்த்தி விட்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. "பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு' என்கிற குறளுக்கு இனி யாரும் விளக்கம் தேடி அலைய வேண்டியதில்லை. ஒரே வார்த்தையில் "கருணாநிதி' என்று கூறி முடித்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.