தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

லால்குடி ரயில்வே மேம்பாலப் பணியில் தாமதம்

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி சிறுதையூர் - கொள்ளிடக்கரை இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருச்சியிலிருந்து அ

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:48 pm

கு. வைத்திலிங்கம்

திருச்சி : திருச்சி மாவட்டம், லால்குடி சிறுதையூர் - கொள்ளிடக்கரை இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

திருச்சியிலிருந்து அரியலூர் செல்லும் வழித்தடத்தில் மையப்பகுதியாக விளங்கி வருவது திருத்தவத்துறை என்றழைக்கப்படும் லால்குடி. அப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தேவைக்காக  அதிகம் வருவது லால்குடிக்குத்தான்.

இந்நிலையில், லால்குடி சிறுதையூர் - கொள்ளிடக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகக் காணப்படுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையில் ரயில்வே கேட் இருப்பதால், அது மூடப்படும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிடும். நீண்ட நேரத்துக்குப் பிறகே போக்குவரத்து நெரிசல் விலகும்.

இந்தப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் லால்குடி சிறுதையூர்- கொள்ளிடக்கரை சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு சிறுதையூர் - கொள்ளிடக்கரை சாலையில் ரூ. 20.5 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்படும் என அரசு அறிவித்தது.

இந்தாண்டு மார்ச் மாதம் முதல் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், பூர்வாங்கப் பணிகள் தொடங்கியது மே மாதத்தில்தான். சுமார் 700 மீட்டர் தொலைவுக்கு  17 தூண்களும், 19 இணைப்புக் கட்டைகளும் கொண்டதாக இந்தப் பாலம் அமைய உள்ளது.

எல்லாவித கனரக வாகனங்களும் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்த ரயில்வே மேம்பாலம் மட்டுமல்லாமல், பொதுமக்களின் வசதிக்காக அணுகுசாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 ரயில்வே மேம்பாலப் பணிகளுக்காக லால்குடி பேருந்து நிலையம் அருகிலும், அதையொட்டிய பகுதியிலும் தூண்கள் அமைப்பதற்கான தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோல, ரயில்வே கேட்டை தாண்டி அமைந்துள்ள சாலையில் பாலத்தின் தாங்குதிறனைக் கண்டறிவதற்காக தூணின் மேல் பகுதியில் மணல் மூட்டைகள் நிரப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து நெடுஞ்சாலைத் துறை திட்டப் பொறியாளர்கள் கொண்ட குழுவினர் லால்குடிக்கு வந்து, பாலத்தின் தாங்குதிறன் எவ்வளவு என்பதை ஆய்வு செய்து விரைவில் அறிக்கை வழங்கவுள்ளனர்.

ஆனால், இந்தப் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகின்றன. இதுவரை மூன்று முறை நில ஆர்ஜிதம் செய்வதற்காகக் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து இதுவரை ஒரு கூட்டம்கூட நடத்தப்படவில்லை. நிலத்தை கையகப்படுத்தாமலேயே பாலம் கட்டுமானப் பணியை அதிகாரிகள் தொடங்கிவிட்டனர். இதனால், எங்கள் இடம் எந்தளவுக்கு எடுக்கப்படும் என்பது தெரியாமல், குழப்பத்தில் உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரயில்வே பாலத்துக்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில்  சுணக்கமான நிலை இருந்து வருகிறது. சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படாமல் பணிகள் நடப்பதால், அங்கே அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சில இடங்களில் சாலையின் மையப்பகுதியில் மின்சாரக் கம்பங்கள் இருப்பதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார வாரியத்திற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில், பணம் செலுத்தியும், மின்சாரக் கம்பங்களை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியது:

"பாலத்தைக் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே கட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

ஆனால், தற்போதை நிலையில் பாலம் கட்டுமானப் பணி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க வாய்ப்பில்லை என்றும், மேலும் சில ஆண்டுகளுக்கு இழுபறியாகக் கூடிய நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.