எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தனியார் நிலத்தை ஆக்கிரமிக்கும் அரசு: கண்ணீர் வடிக்கும் உரிமையாளர்கள்

உதகை, ஜூலை 18: குன்னூரில் தமிழக அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான விதைப்பண்ணை அமைந்துள்ள நிலம், தனியாருக்கு சொந்தமானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி பகுதிய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:45 pm

ஏ. பேட்ரிக்

உதகை, ஜூலை 18: குன்னூரில் தமிழக அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான விதைப்பண்ணை அமைந்துள்ள நிலம், தனியாருக்கு சொந்தமானது என்று சர்ச்சை எழுந்துள்ளது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில், காட்டேரி பகுதியில் 47.39 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான விதைப்பண்ணை உள்ளது. இந்த பண்ணைப் பகுதியில் தற்போது 2 ஏக்கர் பரப்பளவில் புதிதாக பூங்கா அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டு 60 சத பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில் தோட்டக்கலைத் துறை வசமுள்ள நிலம் தங்களுக்கு சொந்தமான நிலம் என்று, சென்னையில் வசித்து வரும் கமலா பத்மினி (73), அவரது மகள் ஜெசி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தினமணி செய்தியாளரிடம் அவர்கள் கூறியதாவது:

கமலா பத்மினியின் வளர்ப்புத் தந்தையான ஜெசி முத்தையாவும், அவரது மனைவி ரத்னம்மாளும் கடந்த 1949-ம் ஆண்டில் இந்த நிலத்தை வாங்கி தங்கள் பெயருக்கு பதிவு செய்தனர். ஜெசி முத்தையாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவரது தம்பி எட்வர்டு முத்தையாவிடம் அளிக்கப்பட்டது.    ÷கடந்த 1976-ம் ஆண்டில் அப்போதைய நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்பசாகரன், இந்நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை வருவாய்த்துறை மூலம் கட்டாயமாக  கையகப்படுத்திவிட்டார். இதற்காக ரூ. 4.4 லட்சமும் அரசுத் தரப்பில் ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றபோது நிலத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்காமல், மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. அத்துடன் 2 ஏக்கர் நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ. 7 லட்சமாக உயர்த்தியது. அந்தத் தொகையையும் இதுவரை அவர்கள் வாங்கவில்லை.

இதற்கிடையே 1988-ம் வருடம் ஜெசி முத்தையா இறந்துவிட்டதால் மொத்த நிலப்பரப்பும் தோட்டக்கலைத் துறை வசம் சென்று விட்டது. எங்களை உள்ளே செல்வதற்கும் கூட அனுமதிப்பதில்லை.

இதுதொடர்பாக தமிழக முதல்வர், வேளாண்மைத்துறை அமைச்சர், அரசு செயலர் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தபோதும் இதுவரை அவை பரிசீலிக்கப்படவேயில்லை. இந்நிலத்திலிருந்த தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்பு மிக்க மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன.

இந்த நிலம் தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் 2008-ம் ஆண்டு வரை எங்களது பெயரே இருந்தது. அதன் பின்னர் இந்தப் பெயர் மாற்றப்பட்டு "தமிழக அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான நிலம்' என்று தற்போது குறிப்பிடப்படுகிறது.

இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் எங்களை மிரட்டிப் பலனடையவே முயற்சிக்கின்றனர். பலர் இந்த நிலத்தின் ஒரு பகுதியை தங்களது பெயருக்கு மாற்றித் தந்தால் பிரச்னைக்கு தீர்வு காண உதவுவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலத்தில் தற்போது 2 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எங்களது நிலத்தை எங்களது அனுமதியில்லாமலேயே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, 47 ஏக்கர் நிலத்தையும் உடனடியாக எங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த நிலம் தொடர்பாக எங்களை மிரட்டி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று  தெரிவித்தனர்.

 இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் மணியிடம் கேட்டபோது, "இந்நிலம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலத்தை எங்களுக்கு வருவாய்த் துறையினர் ஒப்படைத்துள்ளதால் இது குறித்த விவரங்களை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.