டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காவலர் பற்றாக்குறையால் திணறும் காவல் நிலையங்கள்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போதிய காவலர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:44 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போதிய காவலர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூர் தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகம், மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகம், மாவட்ட ஆவணக் காப்பகம், விரல் ரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அலுவலகம், மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமல் பிரிவு அலுவலகம், துப்பறியும் நாய்ப் படை, காவலர்கள் கூட்டுறவு வங்கி, காவலர் சிறுவர் மன்றம் உள்ளிட்ட அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், குன்னம், கை.களத்தூர், வி.களத்தூர், மங்களமேடு, அரும்பாலூர் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 9 காவல் நிலையங்களும், வேப்பந்தட்டை, அகரம் சிகூர், சிறுவாச்சூர் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய 4 பகுதிகளில் புறக்காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் காவல் நிலைய சரகத்தில் 36 கிராமங்களும், கை.களத்தூர் காவல் நிலைய சரகத்தில் 14 கிராமங்களும், வி.களத்தூர் காவல் நிலைய சரகத்தில் 19 கிராமங்களும், அரும்பாவூர் காவல் நிலைய சரகத்தில் 27 கிராமங்களும், மங்களமேடு காவல் நிலைய சரகத்தில் 42 கிராமங்களும், மருவத்தூர் காவல் நிலைய சரகத்தில் 31 கிராமங்களும், பாடாலூர் காவல் நிலைய சரகத்தில் 29 கிராமங்களும், குன்னம் காவல் நிலைய சரகத்தில் 63 கிராமங்களும் உள்ளன.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஓர் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு தலைமைக் காவலர்கள் என 22 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது, ஆய்வாளரின் வாகன ஓட்டுநர், காவல் நிலைய எழுத்தர், எழுத்தரின் உதவியாளர், குற்றப் பிரிவு எழுத்தர், வயர்லெஸ் கருவி இயக்குபவர் உள்ளிட்ட பணிக்காக தனியாகக் காவலர்கள் நியமிக்கப்படாததால், காவல் நிலையத்தில் உள்ள காவலர்களே இந்தப் பணியைச் செய்வதால் 22 பேர் பணிபுரியும் இடத்தில் 10 பேர்களே பணிபுரிகின்றனர்.

மேலும், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு என தனியாகக் காவலர்களை நியமிக்காததால், காவல் நிலையத்தில் உள்ள காவலர்களே அந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவலர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால், குற்றவாளிகளைப் பிடிப்பது, குற்றச் சம்பவங்களைத் தடுப்பது, வழக்குப் பதிவு செய்வது மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான பாடாலூர், மங்களமேடு, அரியலூர் ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களில் இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஓர் உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும். குறிப்பாக, குன்னம் பகுதியில் புதிய காவல் நிலையம் தொடங்க வேண்டும். வேப்பந்தட்டையில் உள்ள புறக்காவல் நிலையத்தை விரிவுபடுத்தி நிரந்தரக் காவல் நிலையமாக மாற்ற வேண்டும்.

மேலும், போக்குவரத்துக்கு என தனியாகக் காவலர்கள் நியமிக்கப்படாததால், ஆயுதப் படைக் காவலர்களே போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தவிர்த்து, போக்குவரத்துக்கு என தனியாக காவலர்களை நியமிப்பதுடன், அவர்களுக்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையில் ஓர் துணைக் கண்காணிப்பாளர், வாகனப் பிரிவு ஆய்வாளர், சேமப் பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட 300 காவலர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆயுதப் படையைச் சேர்ந்த சுமார் 100 காவலர்கள் அரியலூருக்கு மாற்றப்பட்டதால், ஆயுதப் படையில் ஏற்பட்டுள்ள காவலர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

தனியாக பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்துக்கு என மாவட்டக் காவல்துறை அலுவலகம் இல்லாததால், அங்குள்ள அலுவலகப் பணியை பெரம்பலூர் மாவட்டக் காவல் துறை அலுவலகப் பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெரம்பலூர் மாவட்டக் காவல் துறையினருக்கு கூடுதல் பணிச் சுமை உள்ளது. இதைத் தவிர்க்க, அரியலூர் மாவட்டத்துக்கு என தனி அலுவலகம் அமைக்க வேண்டும்.

எனவே, பெரம்பலூர் மாவட்ட மக்களின் தேவையை அறிந்து, குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, கூடுதலாக காவல் நிலையங்களையும், காவலர்களையும் நியமிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.