மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முழுமை பெறுமா?
திருச்சி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தகவல்கள் தர மறுப்பது, கணக்கெடுப்பாளர்களை இழுத்தடிப்பது போன்றவற்றால் இந்தப் பணி முழுமை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய மக்க


திருச்சி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தகவல்கள் தர மறுப்பது, கணக்கெடுப்பாளர்களை இழுத்தடிப்பது போன்றவற்றால் இந்தப் பணி முழுமை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, 2011 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணியில் மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் என சுமார் 1.50 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 3,500 கணக்கெடுப்பாளர்கள், 320 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,260 கணக்கெடுப்பாளர்களும், 210 மேற்பார்வையாளர்களும் திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும் கணக்கெடுக்க வேண்டிய வீடுகள் பற்றிய விவரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீட்டின் அமைப்பு, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, மணமான தம்பதிகள் எத்தனை பேர் உள்ளனர், வீட்டில் மின், குடிநீர் இணைப்பு உள்ளதா, தொலைக்காட்சி, குளிர்சாதன இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம் உள்ளதா, கழிவு நீர் வசதி உள்ளதா, எரிவாயு இணைப்பு உள்ளதா, மேலும் இணையதள வசதியுடன் கணினி உள்ளதா, செல்போன் மற்றும் தொலைபேசி உள்ளதா, சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் அல்லது கார் உள்ளதா, வங்கிக் கணக்கு உள்ளதா, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, பிறந்த இடம் உள்பட 35- கேள்விக்குரிய பதில்கள் சேகரிக்கப்பட்டு பெறப்படுகின்றன.
இதுபோன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் விவரங்களைச் சேகரித்த கணக்கெடுப்பாளரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்திடுகின்றனர். இதன் பின்னர் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விவரங்களுடன், தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்களுக்காக 14 கேள்விகளுக்குரிய பதில்கள் பெறப்பட்டு வருகின்றன.
கணக்கெடுப்பின் போது அளிக்கப்படும் விவரங்கள் எந்தவொரு நிகழ்வுக்கும் ஆதராமாக வழங்கப்படாமல் அரசின் ரகசிய ஆவணமாகப் பராமரிக்கப்படும். எனவே, கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கணக்கெடுப்புப் பணியின் போது நகர்ப் பகுதியின் சில இடங்களில் விவரங்களைத் தருவதற்கு சிலர் மறுத்து, நாங்கள் ஏன் விவரம் தர வேண்டும், அதையெல்லாம் தர முடியாது என்று கூறிய நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன.
இவ்வாறு நிகழ்ந்த இடங்களில் கணக்கெடுப்பாளர் தாங்கள் பணி செய்ததற்கான அத்தாட்சியாக, கணக்கெடுப்பின் போது விவரங்களைத் தர மறுத்துவிட்டார் என்று பதிவு செய்து, அதற்கான கடிதத்தையும் பெற்றுள்ளனர்.
இன்னும் சில இடங்களில் விவரங்களைச் சொல்லாமல் பிறகு வாருங்கள் எனக் கூறி திருப்பி அனுப்பியும் உள்ளனர். நாங்கள் எங்களுக்காக விவரங்களை கேட்கவில்லை. அரசுக்காக செய்கிறோம். ஆனால், சிலர் அலைகழிக்கிறார்களே என்பதுதான் வருத்தமாக உள்ளது என்கின்றனர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் சிலர்.
நகர்ப்புறங்களில் உள்ள பகுதிகளில் சில இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரம் எதுவும் பொதுமக்களுக்குத் தெரியவில்லை. குடும்ப அட்டை வழங்க கணக்கெடுக்க வந்ததாகக் கருதுகிறார்கள். பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரம் கூறி, அவர்களிடம் விவரம் சேகரிக்க வேண்டியதுள்ளது எனவும் கணக்கெடுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி என்பது மக்கள் தொகை குறித்த விவரத்துக்காக மட்டும் எடுக்கப்படுவதில்லை. மக்களின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது, மக்களுக்கு இன்னும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் எவை, வளர்ச்சியில் எந்தப் பகுதி பின்தங்கியிருக்கிறது போன்றவை குறித்து விவரங்கள் எல்லாம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் அறியப்படுகின்றன.
ஆனால், குறிப்பிட்ட சதம் பேர் விவரங்கள் தர மறுப்பதால், இந்தப் பணி முழுமை பெறுமா என்ற கேள்விக்குறியும் தற்போது எழுந்துள்ளது. இதனால், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது சில பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு மக்களை முழுமையாகச் சென்றடையாததே இதற்குக் காரணம். தொலைக்காட்சிகள், வானொலிகள், நாளிதழ்கள் மூலம் போதிய விளம்பரம் செய்திருந்தாலும் ஊரகப் பகுதிகளில் இன்னும் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்றடையவில்லை என்பதும் கணக்கெடுப்பின் போது தெரிய வந்துள்ளது.
பல கோடி ரூபாயை இந்தப் பணிக்காக ஒதுக்கும் அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக அந்தந்தப் பகுதி தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து, போதிய விழிப்புணர்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது.
எனவே, இந்தப் பணி முழுமை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...