டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தனியார் டயர் நிறுவனத்துக்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்குமா?

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்துக்கு நிலம் அளித்த ஏழை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பா

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:38 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகேயுள்ள நாரணமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் டயர் நிறுவனத்துக்கு நிலம் அளித்த ஏழை விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்கு  உள்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் சுமார் 435 ஏக்கர் நிலப் பரப்பில் தனியார் டயர் தொழில்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  அந்த நிறுவனத்துக்கு நிலம் அளித்த விவசாயிகள், இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

  பெரம்பலூர் மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வகையிலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வகையிலும், மத்திய  தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் முயற்சியால், பெரம்பலூர் மாவட்டத்தில் டயர் தொழில்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

   பின்னர், தொழில்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெறப்பட்டு, தொழில்சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அதனடிப்படையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள  விஜயகோபாலபுரம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

  தொழில்சாலை அமையவுள்ள பகுதி அனைத்தும் விவசாய நிலங்கள் என்பதால், பெரம்பலூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம், அந்த நிலங்களைப் பெறுவதற்கு தனியார் டயர் தொழில்சாலை நிறுவனம் அணுகியது.

   இதைத் தொடர்ந்து, கடந்த 2007- 08 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தரகர்கள் மூலம், அந்த நிலங்களுக்குச் சொந்தமான விஜயகோபாலபுரம், நாரணமங்களம் கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், இடத்துக்கு தகுந்தாற்போல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 65 ஆயிரம் முதல் ரூ. 3.50 லட்சம் வரை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், நிலம் அளிக்க மறுத்த 60 விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு, டயர் தொழில்சாலையில் கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் கூறினர். இதையடுத்து, விவசாயிகள் தங்களது விளை நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வந்தனர்.

  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 600 ஏக்கர் நிலத்தில் 435 ஏக்கர் நிலம் மட்டுமே தொழில்சாலைக்கு, ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 165 ஏக்கர் நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் தங்களது பெயரில் பட்டா செய்து கொண்டதாகத் தெரிகிறது.

  இப்போது, டயர் தொழில்சாலைக்கான கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  தெரியவந்துள்ளது. மேலும், தொழில்சாலைக்கு நிலம் வழங்கிய  விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி, வேலை வழங்காமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து நாரணமங்கலம், விஜயகோபாலபுரம் கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கேட்டதற்கு, முறையான பதிலளிக்கவில்லையாம். இதுதொடர்பாக, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும்  எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

  இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என விவசாய சங்கப் பிரமுகர்களுடன்  தனியார் தொழில்சலையின் முன் கண்டன போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி அளிக்காததால், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டனர்.

  ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகமும், தொழில்சாலை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் எந்தவிதப்  பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை.

  எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை  வழங்குவதோடு,  அவர்களது குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.