எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தீண்டப்படாமல் இருக்கும் அம்பேத்கர் சிலை ரவுண்டானா!

திருச்சி:   நூற்றுக்கணக்கான மாலைகள் குவிந்தாலும், சுற்றியிருக்கும் சுவரென்னவோ பரிதாபகரமாகத்தான் இருக்கிறது திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள அம்பேத்கர் சிலை ரவுண்டானாவில் (படம்).    சென்னை புறவழிச் சாலை, தஞ்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:27 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி:   நூற்றுக்கணக்கான மாலைகள் குவிந்தாலும், சுற்றியிருக்கும் சுவரென்னவோ பரிதாபகரமாகத்தான் இருக்கிறது திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள அம்பேத்கர் சிலை ரவுண்டானாவில் (படம்).

   சென்னை புறவழிச் சாலை, தஞ்சை புறவழிச் சாலை, புதுக்கோட்டை, மதுரை போன்ற சாலைகளில் திருச்சி மாநகருக்குள் நுழைவோரை வரவேற்கும் ரவுண்டானா என்ற இடத்தைப் பெற்றது ஜங்ஷன் அருகேயுள்ள "அரிஸ்டோ ரவுண்டானா'.

  சட்டமேதை அம்பேத்கரின் சிலை இருப்பதாலோ என்னவோ இந்த ரவுண்டானாவுக்கு, நீண்ட காலமாகவே அரிஸ்டோ ரவுண்டானா என்றுதான் பெயர்- அருகே அரிஸ்டோ என்ற பெயரில் பெரிய பெரிய மஹால்கள் உள்ளன.

   இந்த ரவுண்டானாவை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது இந்தியன் வங்கி. பராமரிப்பென்றால் செடி வளர்ப்பது மட்டும் போல. மழைக்காலத்தில் இப்போதைக்கு கொஞ்சம் பசுமை தென்படுகிறது.

  சுற்றுச் சுவரின் உயரம் இரண்டரை அடி இருக்கலாம். கட்டி பல ஆண்டுகளும் ஆகியிருக்கலாம். அல்லது இடையில் "நமது மலிந்த ஊழலால்' புனரமைக்கப்பட்டிருக்கலாம். எல்லாமே உடைந்து போயிருக்கின்றன.

  கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது அம்பேத்கரின் சிலையுள்ள ரவுண்டானா. ஆண்டுதோறும் அம்பேத்கரின் பிறந்த நாளில், நினைவு நாளில் மாலையிட வருபவர்கள் ஏராளம். "நாங்களும் இருக்கிறோம்' என்பதற்காக, "மாலையிட்டால் மரியாதை செய்ததாக செய்திகள் வரும்' என்பதற்காக என இவர்களுக்கான காரணங்கள் பல.

  ஆனால், ஒருவர் கண்ணிலும் இந்த ரவுண்டானாவின் இடிந்த நிலை பட்டிருக்கவில்லை போலும். அல்லது பார்த்திருந்தாலும், "எத்தனை பழைமையானது' என்றோ, இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்றோ மறந்துவிட்டிருக்கக் கூடும்.

  மாநகராட்சியிலும் ரவுண்டானாக்களை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்குகிறார்கள். மாநில அரசிடமிருந்து வரும் நிதியிலிருந்தும் கணக்கிட்டுக் கொள்கிறார்கள். ஆனாலும், அம்பேத்கர் சிலையுள்ள ரவுண்டானா அப்படியேதான் இருக்கிறது.

  சில நாள்களில் அதிசயமாக அமைச்சர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் வருகிறார்கள். கூடவே அதிகாரிகளும் வருகிறார்கள். பாவம், அவர்களுக்கும் யாராவது "பிராது' கொடுத்தால் தெரிய வரும்.

  அம்பேத்கர்தான் சொன்னார், "நாங்கள் வடிவமைத்திருக்கும் இந்த அரசியல் சாசனச் சட்டம் நல்லவர்கள் கையில் இருக்கும் வரை நல்லதாகவே இருக்கும். கைமாறினால் யாரிடம் கிடைக்கிறதோ அவர்கள் தங்களுக்கேற்ற வகையில் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்!'.

  பெரியோர்களின் சொல்கள் முக்காலத்துக்கும் பொருந்தும் என்பார்களே அதற்கு, கண் நிறைந்த சாட்சி இந்த ரவுண்டானா.

  இன்னும் சில காலம் கழித்து ரவுண்டானா முற்றிலும் இடிந்து அழிந்துவிடலாம். பின்னர் புதிதாகக் கட்டும் முயற்சியின் போது, ஒரு வேளை அம்பேத்கர் சிலையும்கூட எடுக்கப்பட்டுவிடலாம்!

  மாலையிட வருபவர்களுக்கு கவலையில்லை. நகருக்குள் வேறு நிறைய தலைவர்களின் சிலைகளும் உள்ளன, அத்தனை பேருக்கும் ஆண்டுதோறும் நினைவு நாள்களும், பிறந்த நாள்களும் தொடர்ந்து வரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.