ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகும் ரேஷன் அரிசி!
திருநெல்வேலி, டிச. 4: தமிழ்நாட்டில் திமுக அரசின் சாதனைகளில் ஒன்றாகக் கூறப்படும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு கால்


திருநெல்வேலி, டிச. 4: தமிழ்நாட்டில் திமுக அரசின் சாதனைகளில் ஒன்றாகக் கூறப்படும் ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இவ்வாறு கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தும் அரிசியானது ஒரு கடைக்கு ஒதுக்கப்படும் மொத்த அரிசியில் சுமார் 20 முதல் 40 சதவீதம்வரை இருக்கும் என ரேஷன் கடை ஊழியர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
2006-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் பதவியேற்ற முதல்வர் கருணாநிதி விழா மேடையிலேயே முதலாவது கையெழுத்திட்ட 3 கோப்புகளில் முக்கியமான ஒன்று ரேஷன் கடைகளில் ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கானது ஆகும். பின்னர், 2008-ல் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.1 ஆக குறைக்கப்பட்டது.
இப்போது ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு, குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதம் 12 கிலோ முதல் அதிகபட்சம் 20 கிலோ வரை வழங்கப்படுகிறது. மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. இவை எல்லாம் கிலோவுக்கு ரூ.1 விலையில் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த குடும்ப அட்டைகளில் 90 சதவீதத்திற்கும் மேலான குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சீனி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் பெறக்கூடிய குடும்ப அட்டைகளையே வைத்துள்ளனர். அரிசி வாங்கக் கூடிய அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதந்தோறும் அரிசி ஒதுக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளுக்கு அவற்றின் கீழ் உள்ள ரேஷன் அட்டைகளின் அடிப்படையில் அரிசி ஒதுக்கப்படும். இதில் சுமார் 50 சதவீத அரிசியை மட்டுமே தகுதியுள்ளவர்கள் பெற்று பயன்படுத்தி வருவதாகவும் எஞ்சிய 50 சதவீத அரிசி தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வாடிக்கையாக இவ்வாறு அரிசியைப் பெற்று கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அரிசியைச் சோறாக்கி, தவிடு கலந்த தண்ணீரில் கரைத்து மாடுகளுக்கு வைக்கின்றனர். வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கும் இவ்வாறு ரேஷன் அரிசிச்சோறு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாடு அதிகம் பால் கறக்க நெல், கோதுமைத் தவிடு தீவனமாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். இப்போது தவிடு வகைகளின் விலை அதிகம். எனவே, குறைந்த அளவு தவிட்டைப் பயன்படுத்திக் கொண்டு அதற்கு ஈடு செய்யும் வகையில் சோற்றைக் கரைத்து வைத்தால் மாடுகள் அதிகமாகப் பால் கறப்பதாக அனுபவப்பட்ட விவசாயிகள் கூறுகின்றனர்.
கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களில் வீடுகளில் ஆடுகள் வளக்கப்படுவதுண்டு. கிராமப்புறங்களில் ஆடுகளுக்குத் தீவனம் கிடைக்காத நேரத்தில் சோற்றை உணவாகக் கொடுக்கின்றனர். நகர்ப்புறங்களில் அகத்தி இலை போன்ற தீவனங்களின் விலை அதிகம் என்பதால் ஆடுகளுக்கு சோற்றையே ஒரு பகுதி உணவாகக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் இரை ரேஷன் அரிசிதான்.
குடும்ப அட்டைக்கு விதிமுறைப்படியான ரேஷன் அரிசியைப் பெற்று இவ்வாறு கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துவோரும் உண்டு. அதிகமான ஆடு, மாடுகளை வளர்ப்போர் மொத்தமாக ரேஷன் கடைகளில் மூடையாக அரிசியை வாங்கி வந்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு மொத்தமாக தேவைப்படுவோருக்கு ரேஷன் கடைகளில் இருப்பு மற்றும் தேவைக்கு ஏற்ப, கிலோவுக்கு ரூ.3 முதல் 6 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடைகளில் அனைத்து நாள்களும் அனைத்துப் பொருள்களும் விநியோகிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே அரிசி விநியோகம் செய்யப்படுவதாகவும், மற்ற நாள்களில் வருவோருக்கு அரிசி வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வாங்காதவர்களின் அரிசி இருப்பு வைக்கப்பட்டு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் அல்லது கால்நடை தீவனத்திற்கு கேட்போருக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
இப்போது ரேஷன் கடைகளில் பாமாயில், கோதுமை, கோதுமை மாவு, பருப்பு வகைகள், தேயிலை, மசாலாப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை விற்பனை செய்யும் வகையில், அந்தப் பொருள்களை வாங்குவோருக்குதான் அரிசி வழங்கப்படும் என சில ஊழியர்கள் நிர்பந்தம் செய்வதால் சிலர் அரிசி வாங்குவதில்லை. அவ்வாறு மிச்சமாகும் அரிசியும் கால்நடைத் தீவனத்திற்கு செல்வதாகக் கூறப்படுகிறது.
""கிராமங்களில் ரேஷன் கடையில் அரிசி வாங்கி சோறாக்கி ஆடு, மாடுகளுக்கு வைப்பது சகஜம். அந்தந்த பகுதியைப் பொறுத்து 20 முதல் 40 சதவீத அரிசி இவ்வாறு தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. சிறிய ரக அரிசி விநியோகம் óசெய்யப்படும்போதே அதை சிலர் கால்நடைகளுக்குதான் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த மாதம் முதல் பெரிய ரக அரிசி கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த அரிசியைப் பொதுமக்கள் பயன்படுத்தத் தயங்குவதால் அவை கால்நடைகளுக்குதான் தீவனமாகி வருகின்றன'' என்கின்றனர் ஊழியர்கள்.
இம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8.16 லட்சம் குடும்ப அட்டைகளில் 7.75 லட்சம் அட்டைகள் அரிசி வாங்குவதற்கான அட்டைகள். இவற்றுக்கு மாதந்தோறும் 13,560 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்படுகிறது.
""ரேஷன் கடைகளுக்கு வரும் பொருள்களின் எடைக் குறைவு, எண்ணெய்க் கசிவினால் இழப்பு, சரக்குகளை ஏற்ற, இறக்க கொடுக்க வேண்டிய கூலி, அதிகாரிகள் ஆய்வின்போது அவர்களை "சரிகட்டுவதற்கான' செலவு என ஒவ்வொரு கடை ஊழியருக்கும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலவாகும். அதை ஈடுகட்ட ஊழியர்களில் சிலர் இப்படி அரிசியை விற்கின்றனர்'' என்கிறார் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...